No menu items!

புனே பயங்கரம்:  என் மகன் கார் ஓட்டவில்லை! பல்டியடித்த தந்தை

புனே பயங்கரம்:  என் மகன் கார் ஓட்டவில்லை! பல்டியடித்த தந்தை

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், அவரது 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதித்து மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார். இதனிடையே விபத்து ஏற்படுத்திய காரை சிறுவன் ஓட்டவில்லை, டிரைவர்தான் ஓட்டி வந்தார் என தந்தை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுவன் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பைக்கில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு கொடூரமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய புனேவின் பிரபல கட்டுமான தொழிலதிபர் விஷால் அகர்வால் மகன் உடனடியாக கைது செய்யப்பட்ட போதிலும் சில மணி நேரத்தில் அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இது விவாதத்தைக் கிளப்பியது. விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பை கிளப்பியதை அடுத்து, அந்த சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

அந்த சிறுவன் ஓட்டி வந்த சொகுசு காரான ‘Porsche Taycan’-க்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவுக் கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அந்த காரின் மதிப்பு ரூ.1 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இப்படி இந்த வழக்கில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவன் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரோடு சேர்த்து மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன், அவரது 25-வது வயது வரை வாகனம் ஓட்ட தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது” என விவேக் பிமான்வார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கார் விபத்தை ஏற்படுத்திய போது காரை சிறுவன் ஓட்டவில்லை என்றும் விபத்து நடந்தபோது குடும்ப டிரைவரே காரை ஓட்டியதாகவும் அந்த சிறுவனின் தரப்பு கூறியுள்ளது. விபத்து நடந்த போது சிறுவனுடன் இருந்த மற்ற இரண்டு பேரும் இது உண்மைதான் என்றும் காரை டிரைவர்தான் ஓட்டினார் என்றும் கூறியுள்ளனர்.

முதலில் சிறுவனுக்குக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மது குடித்தாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். பிறகு திடீரென டோனை மாற்றிய அந்த வழக்கறிஞர், டிப்ரஷன் காரணமாகவே சிறுவன் மது குடித்தாக கூறியிருந்தார். இப்படி மாற்றி மாற்றி பேசி வந்த சிறுவனின் தரப்பு, விபத்தை ஏற்படுத்திய போது அந்த காரை சிறுவன் ஓட்டவே இல்லை என்றும் டிரைவரே அந்த காரை ஓட்டியதாகவும் இப்போது தெரிவித்துள்ளதும் சர்ச்சையாகியுள்ளது.

விபத்தின் போது தனது காரை ஓட்டியது தனது டிரைவர் தான் என்று தொழிலதிபர் விஷால் அகர்வாலும் கூறியுள்ளார். இதையடுத்து காரை ஓட்டியதாகச் சொல்லப்படும் அந்த டிரைவரிடம் போலீசார் இன்று விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை வாங்கி தருவோம் என புனே போலீசார் உறுதி செய்துள்ளனர். வழக்கை முறையாக விசாரித்து வருவதாகக் கூறியுள்ள புனே போலீசார், அந்த சிறுவனின் ரத்த மாதிரிகள் விபத்து நடந்து சில மணி நேரத்தில் இரண்டு இடங்களில் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...