No menu items!

சவுக்கு குண்டாஸ் ரத்து – நீதிபதிகள் முரண்பாடு – மிஸ் ரகசியா

சவுக்கு குண்டாஸ் ரத்து – நீதிபதிகள் முரண்பாடு – மிஸ் ரகசியா

”பஸ்ல வந்தியா பைக்ல வந்தியா? என்று உள்ளே நுழைந்த ரகசியாவைக் கேட்டோம்.

“ஏன்? என்னாச்சு?”

‘கவர்ன்மெண்ட் பஸ்ஸுக்கெல்லாம் ட்ராஃபிக் போலீஸ் ஃபைன் போடுறாங்கனு நியூஸ் வந்துச்சு..அதான் உன் பஸ்ஸை மடக்கி ஃபைன் ஏதாவது போட்டாங்களானு கேக்குறதுக்காக”

“அதைப் பத்திதான் சொல்ல வந்தே”

“என்ன இப்படி அரசுத் துறைகளுக்குள்ளேயே மோதல் நடக்குது?”

“ஆமாம். இந்த செய்தி உதய் மூலமாக முதல்வர் காதுகளுக்கு சென்றிருக்கிறது. முதல்வர் கடிந்துக் கொண்டாராம். சின்ன விஷயங்களை அப்போதே சமாளிக்காமல் ஏன் இப்படி அரசை தர்மசங்கடத்துக்குள்ளாக்குகிறீர்கள் என்று போக்குவரத்துதுறை அமைச்சரை கடிந்துக் கொண்டதாக ஒரு செய்தி இருக்கிறது. அதே போல் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர்”

“அதிகாரிகளும் அமைச்சர்களுமே இந்த அரசுக்கு கெட்டப் பெயர் தேடிக் கொடுத்துவிடுவார்கள் போல”

“ஆமாம் முதல்வருக்கு இன்னொரு விஷயத்துலயும் வருத்தம் இருக்கு”

“என்னது?”

” ராஜ்பவன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு ஞாபகம் இருக்கா? அந்த வழக்கு என் ஐ ஏ வசம் போனது. இந்த வழக்கு தொடர்பாக கருக்கா ஆனந்துக்கு வேண்டிய ஒரு பெண்மணியை விசாரித்தபோது அந்தப் பெண்மணி விபச்சாரம் செய்வது தெரிஞ்சிருக்கு. சிறுமிகளை விபச்சாரத்துக்கு பயன்படுத்தியது வெளில வந்திருக்கு. இதையெல்லாம் ஸ்டேட் போலீஸ்க்கு சொன்னது மத்திய அரசிஜ் என்.ஐ.ஏ. இந்த விஷயம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது நம்ம போலீஸ் என்னதான் செய்கிறது இதையெல்லாம் கூட என் ஐ ஏ கண்டுபிடித்து தான் நமக்கு சொல்ல வேண்டுமா என்று கடிந்து கொண்டிருக்கிறார்”

“அப்படியா?…அப்போ அதிகாரிகள் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?”

“இதைதான் முதல்வரிடம் உதயநிதி சொன்னார் என்று இளைஞரணியினர் சொல்கிறார்கள். அமைச்சர்கள். அதிகாரிகள் குறித்து திமுக இளைஞரணி சர்வே எடுத்திருக்காங்களாம். அதன் ரிப்போர்ட் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்கிறார்கள்”

”அப்படியா யாரெல்லாம் மாறப் போறாங்க?”

”பிடிஆருக்கு புதிய பவர்ஃபுல் பதவி கிடைக்கும்னு சொல்றாங்க. சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு கட்சிப் பணிக்கு போகலாம். அமைச்சர்கள் நீக்கம், இலாகா மாற்றம், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் போன்ற செய்திகளை உளவுத்துறையே பத்திரிகைகளுக்கு கொடுத்து ஆழம் பார்க்கிறது என்ற கருத்தும் இருக்கிறது. முதல்வர் உத்தரவின் பேரில்தான் இந்த செய்தி கசிவுகள் நடக்குதுனும் சொல்றாங்க?”

“ஏன்?”

“ரியாக்‌ஷன் பாக்கிறதுக்குதான். மக்கள், ஊடகங்கள், கட்சிக்காரங்க ரியாக்‌ஷனை வச்சு நடவடிக்கை எடுக்கலாம்னு முதல்வர் நினைக்கிறார்”

”அதிகாரிகள் மாற்றமும் இருக்குமா?”

“நிச்சயம் இருக்கும். ஆனா இந்த முறை மாவட்டச் செயலாளர்கள், கட்சிக்காரர்கள் சொல்வதை முதல்வர் கேக்கப் போவதில்லையாம். ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாவட்ட அமைச்சர்கள் சிபாரிசை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மாவட்டங்களில் ஏற்படும் பல குளறுபடிகளுக்கு காரணம் இதுதான். அதிகாரிகள் மாவட்ட அமைச்சர் சிபாரிசுகளை செயல்படுத்துவது தான் சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு காரணம்னு உளவுத் துறை சொல்லியிருக்கிறதாம். அதையேதான் துணை முதல்வர் பதவிக்கு உயரப் போகிற உதயநிதியும் சொல்லியிருக்கிறார்னு சொல்றாங்க”

“அப்போ உதய் துணை முதல்வர் ஆகப் போறது உறுதியா?”

“தேர்தல் முடிவுகளைப் பொறுத்து முடிவு இருக்கும்”

‘சவுக்கு சங்கர் வழக்கில் குண்டாஸ் ரத்து பண்ணப்பட்டதா செய்தி வந்திருக்கே”

”ஆமாம் இரண்டு நீதிபதிகளுக்குள் முரண் வந்திருக்கிறது. நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்யணும்னு சொல்லியிருக்கிறார். ஆனால் நீதிபதி பாலாஜி அதற்கு மாறாக போலீஸ் தரப்பு வாதங்களை கேக்கணும்னு சொல்லியிருக்கிறார். அதனால இப்ப இந்த வழக்கு மூணாவது நீதிபதிக்கு போகுது. மே 12ஆம் தேதி சங்கர் மேல குண்டர் சட்டம் போடப்பட்டது. மே நாலாம் தேதி கைது செய்யப்பட்டார். இருபது நாளாச்சு இன்னும் ஜெயில்லதான் இருக்கார்”

”இந்த நீதிபது சுவாமிநாதன் தான் முன்னாடி சங்கரை கைது செய்ய உத்தரவிட்டதுனு சொல்றாங்களே?”

“ஆமாம், 2022 செப்டம்பர்ல நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக சங்கருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் புகழேந்தியும் அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கொடுத்தாங்க. இப்ப அந்த நீதிபதிதான் சங்கர் மீதான குண்டாசை ரத்து செய்திருக்கிறார். சங்கர் எல்லோரையும் தரக்குறைவாக பேசுறதையும் குறிப்பிட்டிருக்கிறார்”

“அப்புறம் ஏன் குண்டாசை ரத்து பண்ணினார்?”

“யாமறியோம் பராபரமே…ஒரு வேளை பேசுறதுக்கெல்லாம் குண்டாசானு யோசிச்சிருக்கலாம்”

“சரி, சரி, ரொம்ப பயப்படாதே? தேர்தல் நிலவரம் எப்படியிருக்கு?”

”இந்தத் தேர்தல்ல ஆர் எஸ் எஸ் பங்களிப்பு ரொம்பக் குறைவுனு உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு குறைஞ்சதுக்கு அதுதான் காரணம்னு பாஜக நிர்வாகிகளே பேச ஆரம்பித்து விட்டாங்க. உத்தரப்பிரதேசம் மட்டுமில்ல பல மாநிலங்கள்ல அவங்க தீவிரமா பங்காற்றவில்லை. மீண்டும் பிரதமராக மோடி வருவதை அவங்க விரும்பவில்லைனு பேச்சு இருக்குa. தேர்தல் முடிவுக்கு பிறகு ஆர் எஸ் எஸ் பிரதமர் தேர்வில் மூக்கை நுழைக்கும்என்ற பேச்சு பாஜக வட்டாரத்தில் இப்போதே வரத் தொடங்கிவிட்டது”

“ஏன் இந்த திடீர் கோபம்?”

”திடீர் கோபம் இல்லை. கொஞ்ச நாட்களாகவே இருந்தது. அவங்களுக்கு மோடியும் அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மீறி செயல்படுறாங்கன்ற கருத்து இருக்கு. தங்களைதான் முன்னிறுத்துறாங்க. கொள்கைகளை முன்னிறுத்தலனு நினைக்கிறாங்க. அது மட்டுமில்லாம, இப்ப பிரதமர் பேசும்போது நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்னு சொன்னது இன்னும் கடுப்பை ஏத்தியிருக்காம்”

”ஒட்டு மொத்த ஆர்.எஸ்.எஸ்.மா வெறுப்புல இருக்கு?”

“கரெக்டா கேட்டிங்க. அங்கேயும் இரண்டு பிரிவை உண்டாக்கிட்டாங்களாம் மோடியும் அமித்ஷாவாவும். ஆதரவு கோஷ்டி எதிர்ப்பு கோஷ்டினு ரெண்டு இருக்கு. அதுல எதிர்ப்பு கோஷ்டிதான் வலுவாகிட்டு இருக்காம்”

“பாஜகவுக்குள்ளேயே கோஷ்டிகள் இருக்குனு சொல்றாங்களே?”

“ஆமாம். இந்த முறை வருண் காந்திக்கு வாய்ப்பு தரவில்லை மேனகா காந்தி பாஜக சார்பாக உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில்போட்டி போடுகிறார். ஆனால் பாஜக முக்கிய தலைவர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை. அதேபோல் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் சுல்தான்பூர் பிரச்சாரத்துக்கு வரவில்லை .வருண் காந்தி பிரச்சாரம் செய்தார். ஆனா மோடி, அமித்ஷா பத்தி பேசவில்லை. தன்னோட மேனகா காந்தியைப் பத்தி மட்டும் பேசினார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேனகா காந்தி வருண் காந்தி இருவரும் முக்கிய முடிவு எடுப்பார்களாம் ஆனால் அந்த முடிவு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருக்காது என்கிறார்கள்”

”சரி, இந்த நயினாரின் நாலு கோடி விவகாரம் என்னாச்சு?”

”நாலு கோடி விவகாரத்தில் சமீபத்தில் சிபிசிஐடி பாஜக நிர்வாகி ஒருவரை விசாரித்தது. மீண்டும் பாரதிய ஜனதா தான் ஆட்சிக்கு வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் தலையெழுத்தை நிர்ணயிப்பது டெல்லி அரசு தான் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்னு அந்த நிர்வாகி அதிகாரிகளுக்கு சொல்லியிருக்கிறார். அதனால தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விசாரணையை வச்சுக்கலாம் அதிகாரிகள் தரப்புல நினைக்கிறாங்களாம்”

“எல்லோருக்கும் பயம்தான்”

“ஆமா இருக்காதா? பயம் காட்ட ஈடி, இன்கம்டாக்ஸ்னு நிறைய இருக்கே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...