லுலு. தமிழ் நாட்டில் இப்போது அதிகம் உச்சரிக்கும் பெயர். சமீபத்தில் துபாய், அபுதாபி சென்று வந்த தமிழக முதல்வர் பல கோடி ரூபாய் முதலீடுகளையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையானது லுலு குழுமம். சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. அதன்மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதாக தமிழ் நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
லுலு குழுமத்துக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? மலையாளத்து லுலு குழுமம் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழர்களின் வணிகம் பாதிக்கப்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு முதலீடுகள் அதிகம் தேவைப்படும் சூழலில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சரிதான் என்ற கருத்துக்களும் வந்துள்ளன.
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, லுலு குழுமத்தின் வளர்ச்சி முக்கியமாய் அதன் தலைவராக இருக்கும் யூசுஃப் அலியின் வெற்றிகள் பிரமிக்கதக்கதாக இருக்கின்றன.
கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர் யூசுஃப் அலி. வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் 1973-ம் வருடம் வேலைக்காக அபுதாபி செல்கிறார். அங்கு அவரது உறவினர் அப்துல்லா சிறு நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார். அங்கே வேலைக்கு சேர்கிறார். அப்போது அவருக்கு வயது 18. இன்று யூசுஃப் அலியின் வயது 67. சொத்து மதிப்பு 36 ஆயிரம் கோடி. இந்தியாவின் 39-வது பெரிய பணக்காரர். உலக பணக்காரர் வரிசையில் 589-வது இடம். அமீரக நாடுகளின் அம்பானி என்று புகழப்படுகிறார்.
எப்படி சாத்தியமான இத்தனை வளர்ச்சி?
உறவினரின் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஏற்றுமதி இறக்குமதி துறையில் கவனத்தை பதிக்கிறார் யூசுஃப் அலி. அந்த அனுபவம் அவருக்கு வர்த்தகத்தை புரிந்துக் கொள்ள உதவுகிறது.
அலியின் மிகப் பெரிய சாமர்த்தியமே வாய்ப்புகளை அடையாளம் கண்டுக் கொள்வதுதான்.
1990-களில் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எனப்படும் வணிக வளாகங்களுக்கான அனுமதிகள் கொடுக்கப்பட்டன. மேலை நாடுகளில் வணிக வளாகங்கள் பிரபலமானவை. அமீரகத்தில் அதற்கான வாய்ப்பு வந்ததும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வணிக வளாகத்தை கட்டுகிறார் யூசுஃப் அலி. அதுதான் யூசுஃப் அலியின் முதல் வெற்றி.
அதன்பின் தன்னுடைய வர்த்தகத்தை விரிவுப்படுத்துகிறார். கப்பல் போக்குவரத்து, ஐடி, சுற்றுலா, ஓட்டல்கள் என அவரது வர்த்தகம் விரிவடைகிறது. இன்று யூசுஃப் அலியின் லுலு குழுமத்துக்கு சொந்தமாக உலகம் முழுவதிலும் 193 வணிக வளாகங்கள் இருக்கின்றன.
அவரது முக்கியமான வணிக கொள்கை, வாய்ப்புகளைத் தேடு, வாய்ப்புகளை கிடைக்கும்போது நழுவ விடாதே என்பதுதான்.
வளைகுடா நாடுகளில் தனது தொழிலை பெருக்கிக் கொண்டிருந்த யூசுப் அலி தனது சொந்த மாநிலத்திலும் முதலீடுகள் செய்ய தொடங்கினார். கொச்சினில் லுலு குழுமம் கட்டிய லுலு மால் ஆசியாவிலேயே மிகப் பெரிய வணிக வளாகம். 18 லட்சம் சதுர அடி அளவில் இந்த ஷாப்பிங் மால் அமைந்துள்ளது.
தனது வெற்றிக்கு காரணம் என்று தனது தாத்தாவை குறிப்பிடுகிறார் யூசுஃப் அலி. ”அவரிடம்தான் நான் வளர்ந்தேன். அவர்தான் வணிகத்தின் நுணுக்கங்களையும் வாழ்க்கையின் அம்சங்களையும் கற்றுக் கொடுத்தார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை இந்த மூன்றும்தான் தொழிலை வளர்க்க உதவும் என்று கூறுவார். அதைதான் நான் பின்பற்றுகிறேன்” என்கிறார் யூசுஃப் அலி.
இங்கிலாந்து முதல் இந்தோனேசியா வரை தனது தொழிலை விரித்து வைத்திருக்கும் லுலு குழுமம் இப்போது தமிழ் நாட்டுக்கும் வர உள்ளது.
சென்னையிலும் கோவையிலும் ஷாப்பிங் மால்கள் கட்டுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தமிழ் நாட்டுக்கு லுலு குழுமத்தின் வரவு தமிழ் நாட்டின் மற்ற வணிகர்களுக்கு ஆபத்தா அச்சுறுத்தலா என்ற கேள்விக்கு ஒரே பதில்தான்.
தொழில் போட்டிகள்தான் முன்னேற்றத்தை தரும். மக்களுக்கு பயனளிக்கும்.