No menu items!

மிஸ்.ரகசியா: தப்பியோட தயாராகும் ராஜபக்‌ஷே பிரதர்ஸ்

மிஸ்.ரகசியா: தப்பியோட தயாராகும் ராஜபக்‌ஷே பிரதர்ஸ்

ப்ளூடூத்தில் சீரியசாக ஏதோ பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தார் ரகசியா. நாம் ஹலோ சொன்னதைக்கூட கவனிக்கவில்லை. கான்ஃப்ரென்ஸ் ஹாலில் நுழைந்து ப்ளூடூத்தில் பேசிக்கொண்டே நோட்ஸ் எடுத்துக்கொண்டு இருந்தவர், சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார்.

“குட்மார்னிங் சொன்னதைக்கூட கவனிக்காமல்… ரொம்ப முக்கியமான ஆளா?”

“இலங்கையில் உள்ள நண்பரிடம்தான் பேசிக்கொண்டு இருந்தேன். அங்கே அரசுத் துறையில் உயர் பதவியில் இருக்கிறார். ராஜபக்‌ஷே சகோதரர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அணி திரள்வதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்?”

“ஆமாம்… அதிபர் மாளிகையை நள்ளிரவில் தீவட்டிகளோடு சூழ்ந்து மக்கள் போராட்டம் நடத்திய காட்சிகளை நானும் பார்த்தேன். என்ன நடக்குது இலங்கையில்?”

“இலங்கையைப் பொறுத்தவரை அதன் முக்கிய நிர்வாகங்கள் அனைத்தும் ராஜபக்‌ஷே சகோதரர்களிடம்தான் இருக்கிறது. இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்‌ஷே இருக்கிறார். அவரது சகோதரர் மகிந்தா ராஜபக்‌ஷே பிரதமராகவும் மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்‌ஷே நிதி அமைச்சராகவும் இன்னொரு சகோதரர் சமல் ராஜபக்‌ஷே நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் இருக்கிறார்கள். இந்த 4 சகோதரர்களின் நிர்வாக சீர்கேடால்தான் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற கோபம் மக்கள்கிட்ட இருக்கு.”

“பாத்தா சாதாரண கோபம் மாதிரி தெரியலையே? கடுமையான எதிர்ப்பு இருக்கும்போல? அங்கிருந்த வர வீடியோக்களை பார்க்கும்போது அப்படிதான் தோணுது.”

”ஆமாம். மக்கள் உக்கிரமா இருக்காங்க. எகிப்து நாட்டில் நடந்த ‘அரப் அப்ரைசிங்’ போராட்டத்தைப் போல இலங்கையிலும் ஒரு பெரிய போராட்டத்தை நடத்த முன்வருமாறு இலங்கை மக்களுக்கு அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான சமாகி ஜன பலவேகயா (Samagi Jana Balawegaya) அழைப்பு விடுத்திருந்தது. இந்தக் கட்சியை நடத்துறது பிரமேதாசாவின் மகன் சஜித் பிரமேதாசா. 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தல்ல போட்டி போட்டவர். அவருக்கு நல்ல சப்போர்ட் இருக்கு. அந்தக் கட்சி நடத்துனதுனால இலங்கை ஜனாதிபதி வீட்டை சுற்றி பெரிய அளவில் போராட்டம் நடந்துருக்கு.”’

“ராஜபக்‌ஷே சகோதரர்கள் என்ன செய்யப் போகிறார்களாம்?”

“போராட்டத்தை அடக்கிறதுதான் அவங்க முதல் நோக்கம். ஊரடங்கு அறிவிச்சுப் பாத்தாங்க. இன்டர்நெட்டை கட் பண்ணாங்க. நிறைய பேரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. ஆனாலும் போராட்டத்தை ஒடுக்க முடியல”

“கரெண்ட் இல்லை, பெட்ரோல் இல்லைனா மக்கள் என்னதான் பண்ணுவாங்க.”

“போராட்டம் அதிகமாகிறது ராஜபக்‌ஷே பிரதர்ஸ்க்கு பயத்தை கொடுத்துருக்கு. போராட்டம் தீவிரமானால் இலங்கையை விட்டு வேறு ஏதாவது நாட்டுக்கு தப்பி ஓடலாமா என்றும் யோசிக்கிறாங்க. இதற்காக கட்டுநாயகே (Katunayake) மற்றும் ரத்மலானா (Rathmalana) விமான தளங்களில் 2 விமானங்கள் ரெடியா இருக்காம். விமான நிலையத்துக்கு போற பாதையையும் பாதுகாப்பா வச்சிக்கிறதான நடவடிக்கைகளையும் எடுத்துக்கிட்டு இருக்காங்க. தமிழ்ர்களை நாட்டை விட்டு துரத்த முயற்சித்தவங்க நாட்டை விட்டு ஓட வேண்டிய சூழல் அங்க உருவாகியிருக்கு.”

”பண்ண அட்டூழியத்துக்கு அவங்களுக்கும் மட்டும் தண்டனை கிடைச்சா பரவாயில்லை. இலங்கை மக்களும் சேர்ந்துல கஷ்டப்படுறாங்க.”

முதல்வரின் டெல்லி பயணம் பற்றி செய்தி ஏதும் இல்லையா?”

“டெல்லியில் நடக்கும் திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்த முதல்வர் அப்படியே மாநில பாஜக தலைவர் அண்ணாமலையைப் பற்றியும் ஆளுநரைப் பற்றியும் சில புகார்களை அடுக்கியுள்ளார். பிரதமரும் கவனிப்பதாக கூறியிருக்கிறாராம்.”

“ஓஹோ?”

“சோனியா காந்தியும் முதல்வரும் சந்தித்துக்கொண்டபோது ராஜ்யசபா தேர்தல் பற்றி பேசினார்களாம். ப. சிதம்பரத்தின் ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் நிறைவடைய இருப்பதால் தமிழகத்தில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் அவருக்கு ஒரு இடத்தை ஒதுக்குமாறு கேட்டிருக்கிறார் சோனியா காந்தி. மு.க. ஸ்டாலினும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மகிழ்ச்சியில் இருக்கிறார்.”

“ப. சிதம்பரத்துக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைப்பதற்காக கே.எஸ். அழகிரி ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்?”

“தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்தி சிதம்பரம் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார். இப்போது தன் அப்பாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கிடைப்பதால் அந்த கோரிக்கையை கார்த்தி சற்று தள்ளிப் போடலாம். அதனால் தனது பதவியின் ஆயுள் கூடும் என்பது கே.எஸ்.அழகிரியின் கணக்கு.”

“ஓஹோ?”

“காங்கிரஸ் கட்சியைப் போலவே விசிகவில் வன்னியரசுக்கு ராஜ்யசபா தேர்தலில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு தொல். திருமாவளவன் கேட்கிறாராம். அதுபோல் கம்யூனிஸ்ட்களும் கேட்பதாக கூறுகிறார்கள். அதே நேரத்தில் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்துவதற்காக பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு ஒரு சீட் வழங்கலாமா என்றும் முதல்வர் யோசிப்பதாக கூறுகிறார்கள்.”

“இருக்கிற 4 சீட்டை எத்தனை பேருக்குத்தான் கொடுப்பார்கள்?”

“இது முதல்வருக்கு ஒரு தலைவலியாகத்தான் இருக்கிறது. அதேபோல் திமுகவினர் அடிக்கடி அடிதடி வழக்குகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்த்து சார்ந்த விஷயங்களில் சிக்குவதும் முதல்வருக்கு கவலை கொடுத்திருக்கு.

குறிப்பாக அவர் டெல்லி சென்ற நேரத்தில் சென்னையில் திமுக கவுன்சிலர் ஒருவரின் கணவர் போலீஸாரை மிரட்டியது சமூக வலைதளங்களில் வைரலாக டென்ஷனாகிவிட்டாராம் முதல்வர். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துரைமுருகனுக்கு முதல்வர் உத்தரவிட, அவரும் நடவடிக்கை எடுத்துள்ளார். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்க என்பதுதான் சிஎம்மின் உத்தரவாம்.”

“நல்ல விஷயம். இவங்களை கண்டிச்சு வைக்கலனா ஆட்சிக்கு கெட்டப் பெயர் வந்துரும்ல.”

“இதைத்தான் முதல்வரும் நினைக்கிறார். அவரது மூத்த சகோதரர் மு.க. முத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதும் முதல்வரின் கவலையை அதிகரித்துள்ளது.”

“வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே?”

“இந்த தீர்ப்பில் திமுகவுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சிதான் என்கிறார்கள். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கருத்தில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதிமுக அரசு போட்ட சட்டத்தால் அது நடக்கக்கூடாது என்றும், தாங்கள் மூலம்தான் அது நிறைவேற வேண்டும் என்பதும் திமுகவினரின் ஆசையாக இருந்தது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், புதிய தரவுகளுடன் இது தொடர்பான புதிய சட்டத்தை திமுக அரசு தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. தரவுகள் இல்லாமல் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் நீதிமன்றத்தின் கருத்து. அதனால் அதற்கான தரவுகளை தயார் செய்யப் போகிறது அரசு.”

“ஓஹோ?”

“ஏப்ரல் 6லருந்து சட்டப் பேரவை கூட்டத் தொடர். ரொம்ப சூடா இருக்கப் போகுது. முதல்வரின் துபாய் பயணம் பற்றி கேள்வி எழுப்ப அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டுள்ளதாம். அதற்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களைப் பத்தின டீடெய்ல்ஸை திமுக பேசப் போகுதாம்.”

“இண்ட்ரெஸ்டிங்.”

“டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிளைட்டுக்கு நேரமாகிவிட்டது, வருகிறேன். செவ்வாய்கிழமை மீண்டும் சந்திப்போம்” என்று புறப்பட்ட ரகசியா துண்டுச் சீட்டில் சில கோலிவுட் கிசுகிசுப்புகளை கொடுத்தார்.

முத்தையா இயக்கத்தில் ஆர்யா

முத்தையாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது. அப்படியில்லையாம், அவரது படத்தை கமலின் ராஜ்கமல் புரொடக்‌ஷன் தயாரிக்கவுள்ளது. இதில் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளாராம்.

சமீபத்திய விவாகரத்து நடிகை பாலிவுட்டை கைப்பற்ற திட்டமிட்டிருக்கிறாராம். அதற்காக மும்பையில் ஒரு கடல் தெரியும் ஃப்ளாட்டை வாங்கியிருக்கிறாராம். அவர் ஊ ஊ என்று ஆடிய ஒரு நடனம் வடக்கத்தியவர்களை கவர்ந்திருப்பதால் வாய்ப்புகளும் வருகிறதாம்.

இரண்டு காதல் தோல்விகளுக்குப் பிறகு, தற்போது காதலனோடு செட்டிலாகி இருக்கும் நடிகைக்கு வயது ஏறிக்கொண்டே போக, போக [தற்போது 37] குடும்ப வாழ்க்கையில் நாட்டம் அதிகமாகி இருக்கிறதாம், முக்கியமாய் குழந்தை ஆசை வந்திருக்கிறது. நடிப்பும் வேண்டும், குடும்பமும் வேண்டும் – இதை இரண்டையும் எப்படி ஒரே சிங்கிள் டேக்கில் ஓகே செய்வது என்று தீவிர யோசனையில் இருக்கிறாராம் நடிகை. சுமக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவ ஆலோசனை பெற்றிருக்கிறாராம். வாடகைத் தாய் ஆலோசனையும் கேட்கப்பட்டிருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...