No menu items!

ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஐபிஎல் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. ஒரு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடியதால் தேசிய அணியில் இடம் கிடைத்து ஹீரோவான நிறைய வீரர்களை நாம் பார்த்திருப்போம். அதேநேரத்தில் ஒரு ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடியதாலேயே ஃபார்ம் அவுட் ஆகி, தேசிய அணியில் இடம்கிடைக்காமல் போன வீரர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

நடராஜன், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ஐபிஎல்லால் வாழ்ந்தவர்கள் என்றால் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் ஐபிஎல்லில் பெயர் கெட்டுப் போய் இந்திய அணியில் தங்கள் இடத்தை இழந்தவர்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் ரவீந்திர ஜடேஜா.

கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இருந்த ஜடேஜா, இந்த ஐபிஎல் தொடரில் முழுவதுமாக சொதப்பி இருக்கிறார். கேப்டனாக மகுடம் சூடி கம்பீரமாக இந்த ஐபிஎல் தொடருக்குள் நுழைந்த ஜடேஜா, இந்த ஐபிஎல்லில் 10 போட்டிகளில் மொத்தமாக எடுத்த ரன்கள் 116. கிரிக்கெட் போட்டிகளில் ரன்களைக் குவிக்காவிட்டாலும் விக்கெட்களையாவது வீழ்த்தி அதை ஈடுகட்டுவது ஜடேஜாவின் ஸ்டைல். ஆனால், , இந்த ஐபிஎல்லில் அவரது பந்துவீச்சும் சொதப்பி இருக்கிறது. இதுவரை நடந்த 10 போட்டிகளில் வெறும் 5 விக்கெட்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார்.

ஜடேஜாவின் இந்த மோசமான செயல்பாட்டுக்கு அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கேப்டன் பதவி வழங்கப்பட்டாலும், தோனிதான் பெரும்பாலும் அணியை வழி நடத்தினார்.

போட்டிக்கான வீரர்கள் தேர்விலும் தோனி மற்றும் பாண்டிங்கின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இப்படி அதிகாரமில்லாத கேப்டனாக இருந்தாலும், அணியின் செயல்பாடு ஜடேஜாவை கடுமையாக பாதித்தது. இப்படியே போனால் தனது ஃபார்ம் மேலும் பாதிக்கப்படும் என்பதால் பாதியிலேயே தனது கேப்டன்ஷிப்பை துறந்தார் ஜடேஜா.

அணி நிர்வாகமும் தோனியும் இதை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அணி நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும், அதனாலேயே இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாகவும் வதந்திகள் பரவுகின்றன. ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அன் பாலோ செய்ததை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன், “காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல்லில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், , இந்திய அணியில் முன்போல் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால், கடந்த சில மாதங்களாக அணியில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார் ஜடேஜா. ஆனால், இப்போது காயத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா மீண்டு வந்துவிட்டார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய 2 துறைகளிலும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

அதே நேரத்தில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இப்போது பேட்டிங்கிலும் அதிரடி காட்டி ஆல்ரவுண்டர் அந்தஸ்தைப் பெறுகிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நேற்று அவர் 50 ரன்களைக் குவித்தது தேர்வாளர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்த்திருக்கும். ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின் – சாஹல் கூட்டணியே இந்திய அணியிலும் தொடரட்டும் என்று தேர்வுக்குழு நினைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் பார்முக்கு வந்திருப்பதும் ஜடேஜாவின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.

இந்த சவால்களைக் கடந்து ஜடேஜா எப்படி மீண்டு வருவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...