No menu items!

சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

வசூலில் தொடர்ந்து ஹிட் அடிக்கும் சூப்பர் ஹீரோவின் படம் திடீரென்று படுதோல்வி அடைந்தால் எப்படி இருக்குமோ, அந்த நிலையில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடரில் பதினோரு முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் இந்த ஐபிஎல்லில் ஆரம்பத்திலேயே நொண்டியடிக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றிலேயே இதுவரை முதல் 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததில்லை. இந்த நிலையில் இப்போது ஹாட்ரிக் தோல்வியடைய என்ன காரணம்?

“சென்னை அணியைப் பொறுத்தவரை அதன் பலமும் பலவீனமும் செண்டிமெண்ட்தான். தங்களுக்காக ஆடிய வீரர்களை அத்தனை சீக்கிரத்தில் சிஎஸ்கே விட்டுக்கொடுக்காது. தங்களுக்காக ஏற்கெனவே ஆடிய வீரர்களுக்கு வயதானாலும், அவர்கள் மோசமாக ஆடினாலும், சிஎஸ்கே அவர்களை அரவணைத்துக்கொண்டே இருக்கும். மற்ற அணிகளெல்லாம் இளம் வீரர்களை சேர்த்து அணிக்கு புத்துயிர் ஊட்ட, சிஎஸ்கே மட்டும் பழைய வீரர்களை வைத்து ஆடுகிறது. இதுதான் அதன் பின்னடைவுக்கு காரணம்” என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தேர்வை வைத்துப் பார்த்தால் இவர்கள் கூறுவது உண்மையென்றே தோன்றுகிறது. இந்த ஆண்டுக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணியும் புதிய வீரர்களை போட்டி போட்டு வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமோ, அம்பட்டி ராயுடு, உத்தப்பா, பிராவோ என கோடிகளை கொட்டிக் கொடுத்து பழைய வீரர்களை வாங்கியது. இந்த வகையில் பார்த்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய வீரர்களை அதிகமாக வாங்கிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, அது சுறுசுறுப்பான ஆட்டம். இந்த போட்டிகளில் ஆடுவதற்கு மேட்ச் ஃபிடென்ஸ் மிகவும் அவசியம். அதற்கு தொடர்ந்து போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும். ஆனால் மேற்சொன்ன வீரர்கள் வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடுவதால், அவர்களால் துடிப்பாக செயல்பட முடிவதில்லை. அப்படியே சிறப்பாக பேட்டிங் செய்தாலும் பீல்டிங் செய்ய உடம்பு ஒத்துழைப்பதில்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெறமுடியாமல் போனதற்கு பீல்டிங்கில் சில கேட்ச்களை தவறவிட்டதும் ஒரு காரணமாக உள்ளது.

இப்படி ஒருபக்கம் செண்டிமென்டால் முடங்கிக் கிடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், மறுபக்கம் துடிப்பான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தயங்குகிறது. இந்த ஐபிஎல்லைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் இளம் வீரர்களை நம்பி வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் சமீபத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடியுள்ள ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு அளிக்க சென்னை தயங்குகிறது. இந்த தயக்கத்தை சென்னை அணி உதறித் தள்ளினால்தான் வெற்றிகள் வசமாகும்.

தான் இருக்கும்போதே ஒரு புதிய கேப்டனை உருவாக்க வேண்டும் என்ற தோனியின் விருப்பம் நியாயமானதுதான். இதற்காகத்தான் அவர் ஜடேஜாவை கேப்டனாக்கி உள்ளார். ஆனால் அந்த கேப்டன் பதவி ஜடேஜாவுக்கு கூடுதல் மனச்சுமையை கொடுக்கும் நிலையில், அவரது தலையில் உள்ள கேப்டன் பதவி என்ற முள் கிரீடத்தை தோனி இறக்கிவைக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை கேப்டனாக அவதாரம் எடுக்க வேண்டும். ஜடேஜாவை துணை கேப்டனாக்கி அவருக்கு பயிற்சி தர வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால்தான் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பும். இல்லாவிட்டால் 2020-ல் நடந்ததைப்போல் புள்ளிப்பட்டியலின் கடைசியிலேயே தங்கியிருக்க வேண்டியதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...