தனது ஊழியர்களின் கல்விச் செலவுக்கு 700 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறது சோமோட்டோ நிறுவனம். சோமோட்டோ நிறுவனத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் இதை தெரிவித்திருக்கிறார் சோமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருடம் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்.
இந்தத் திட்டத்துக்கு வரவேற்பும் இருக்கிறது கடுமையான விமர்சனங்களும் இருக்கின்றன.
அவற்றை பார்ப்பதற்கு முன் தீபிந்தர் கோயல் யார் என்பதை பார்த்துவிடுவோம்.
இப்போது 39 வயதாகும் தீபிந்தர் கோயல் பிறந்தது பஞ்சாபில் மாநிலத்திலுள்ள முக்ஸ்தார் மாவட்டத்தில். அம்மா, அப்பா இருவரும் ஆசிரியர்கள். ஆனால் பள்ளி படிப்பில் தீபிந்தர் கெட்டியல்ல.
“பள்ளி படிக்கும்போது நான் படிப்பில் லாஸ்ட் பெஞ்ச்தான். நிறைய ஃபெயில் ஆவேன்” என்றொரு பேட்டியில் கூறியிருக்கிறார் தீபிந்தர்.
ஆரம்பப் பள்ளியில் பின் தங்கியிருந்த தீபிந்தர் உயர் கல்வி வரும்போது சுறுசுறுப்படைந்திருக்கிறார். டெல்லி ஐஐடியில் என்ஜினியரிங் முடித்திருக்கிறார். மனைவியும் டெல்லி ஐஐடிதான். காதல் திருமணம்.
படிப்பை முடித்ததுடன் 2006லிருந்து 2008வரை டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. ஆனால் அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை.
சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பது அவரது ஆசை. சாப்பிடுவதும் உணவகங்களுக்கு போவதும் அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். அது தொடர்பாக ஏதாவது ஒரு பிசினஸ் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது கிடைத்த ஐடியாதான் வீட்டுக்கே உணவு வழங்கும் சேவை.
அவரும் அவரது நண்பர் பங்கஜ் சத்தாவும் இணைந்து உணவு கொண்டு வந்து தரும் நிறுவனத்தை 2008ல் தொடங்கினார்கள். அப்போது அதற்கு பெயர் FOODIEBAY. ஆரம்பிக்கும்போது ஏகப்பட்ட சந்தேகங்கள். மக்கள் இந்த முறையை பயன்படுத்துவார்களா? ஒட்டலுக்கே ஆர்டர் செய்து வரவழைக்கும் வழக்கம் இருக்கும்போது ஃபுட்டிபேக்கு எதற்கு வர வேண்டும்? எல்லா உணவகங்களிலிருந்து உணவை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள். ஆனால் டெல்லியில் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
2010ல் நிறுவனத்தின் பெயரை சோமோட்டோ என்று மாற்றினார்கள். 2008ல் டெல்லியில் துவக்கப்பட்ட நிறுவனம் இன்று இந்தியா மட்டுமல்ல உலகத்தின் பல பகுதிகளிலும் பரவியிருக்கிறது.
சரி, ஃபுட்டிபே என்ற பெயர் ஏன் சோமோட்டோ என்று மாறியது?
ஃபுட்டிபே என்பது இணையதளமாகதான் இருந்திருக்கிறது. அதை மொபைல் ஃபோன்களுக்கு ஏற்றவாறு செயலியாக (Mobile App) மாற்றுவதற்கு வேறு பெயரை பயன்படுத்த நினைத்திருக்கிறார்கள். எளிதில் வாயில் நுழைவதற்கு ஏற்றவாறு உணவை தொடர்புபடுத்தி ஏதாவது ஒரு பெயர் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சமையலுக்கு தேவையான தக்காளி ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. தக்காளிக்கு ஆங்கிலத்தில் டோமட்டோ (Tomato). அதையே சற்று மாற்றி சோமோட்டோ என்று பெயர் வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான்.
ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்கள் அத்தனை லாபமில்லை. 2012க்குப் பிறகு இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மொபைல் மிக அதிகமாக பரவியபோது அந்த வேகத்தில் சோமோட்டோவும் வளர்ந்தது.
இப்போது இந்தியாவில் சுமார் 1.2 கோடி பேர் சோமோட்டோ செயலியை பயன்படுத்துகிறார்கள். தினசரி சுமார் 1.5 லட்சம் ஆர்டர்கள் அதற்கு வருகின்றன. மலைப்பான வளர்ச்சிதான்.
சோமோட்டா சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறது.
கடந்த வருடம் அக்டோபரில் உணவு ஆர்டர் குறித்து புகார் தெரிவிக்க சென்னையிலிருந்து ஒருவர் சோமோட்டோவை தொடர்பு கொள்ள அங்கிருந்தவர் இந்தியில் சொல்லுங்கள், இந்திதான் தேசிய மொழி, இந்தி தெரிந்திருக்க வேண்டும்.. என்று கூறியது சர்ச்சையானது. இதற்கு தமிழ்நாட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பியதும் சோமோட்டோ நிர்வாகம் மன்னிப்பு கோரியது.
2018ல் சோமோட்டோ ஊழியர் வாடிக்கையாளருக்கு எடுத்து செல்லும் உணவை சாப்பிட்ட காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
2019ல் ஒரு வாடிக்கையாளர் தனது உணவை இந்து அல்லாத ஒரு சோமோட்டோ ஊழியர் கொண்டு வருவதை விரும்பாமல் உணவு ஆர்டரை ரத்து செய்தார். அதை ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு சோமோட்டோ நிறுவனம் அளித்த பதிலில் உணவுக்கு மதம் கிடையாது, உணவே ஒரு மதம் என்று குறிப்பிட்டிருந்தது.
இப்படி அவ்வப்போது சர்ச்சைகள் வந்துக் கொண்டேதான் இருக்கிறது.
சோமோட்டோ நிறுவனம் தனது ஊழியர்களை நடத்தும் விதத்துக்கும் எதிர்ப்பு உண்டு. சமீபத்தில் 10 நிமிடத்தில் டெலிவரி என்ற அறிவிப்பை வெளியிட்டது.
ஏற்கனவே உணவு டெலிவரி ஊழியர்கள் மின்னல் வேகத்தில் சாலையில் செல்வதற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில் 10 நிமிடத்தில் டெலிவரிக்கும் எதிர்ப்பு கிளம்பியது.
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி ஐந்து வருடங்கள் தொடர்ந்து சோமோட்டோவில் பணி புரிந்தவர்கள் மிக மிக குறைவு என்கிறார்கள் ஊழியர் சங்கத்தினர்.
வேகமாக வளர்ந்த சோமோட்டோ இப்போது சரிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நேற்று அதன் பங்குகள் 10 சதவீதம் சரிந்திருக்கின்றன. இந்த நிலை தொடரும் என்றே பங்கு வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த சரிவுகளிலிருந்து சோமோட்டோவை மீட்டெடுப்பாரா தீபிந்தர் கோயல்?
சோமோட்டோவில் உணவு ஆர்டர் செய்து அதை சாப்பிட்டுக் கொண்டே காத்திருப்போம் விடைக்கு.