இந்த ஐபிஎல்லில் ஆடிய வீரர்களில் தனக்குப் பிடித்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியை தேர்ந்தெடுத்துள்ளார்சச்சின். அந்த அணியில் விராத் கோலியும் இல்லை, ரோஹித் ஷர்மாவும் இல்லை. அப்படியென்றால் வேறு யார் இருக்கிறார்கள். பார்ப்போம்.
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக கே.எல்.ராகுல் வளர்த்தெடுக்கப்படும் நிலையில் தனது தேர்வாக ஹர்திக் பாண்டியாவை சச்சின் தேர்ந்தெடுத்துள்ளார். தனது கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஒவ்வொரு வீரரையும் தான் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
ஹர்த்திக் பாண்டியா (கேப்டன்):
இந்த சீசனில் ஹர்த்திக் பாண்டியாதான் சிறந்த கேப்டன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகத் தெளிவான சிந்தனையுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் வழிநடத்தினார். எதற்கும் கவலைப்படாமல், ஒரு கொண்டாட்ட மனநிலையில் அணியை வழிநடத்த வேண்டும் என்பது என் கருத்து. இந்த தொடரில் ஹர்த்திக் பாண்டியா அதைத்தான் செய்தார். இதன்மூலம் எதிரணிகளை வென்றார். கேப்டனாக இருப்பதுடன் அணியின் 4-வது வரிசை பேட்ஸ்மேனாகவும் இவர் சிறப்பாக செயல்படுவார்.
ஷிகர் தவன், ஜாஸ் பட்லர்:
இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்கோர் அடித்தவரான ஜாஸ் பட்லர், ஆரம்பத்தில் நிதானமாக ஆடி பின்னர் அதிரடி காட்டி ரன்களைக் குவித்தார். அதேநேரம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவனை நான் தேர்வு செய்கிறேன். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு கைகொடுக்கும்.
கே.எல்.ராகுல்:
சீரான வேகத்தில் சிங்கிள்ஸையும், அணிக்கு தேவைப்படும்போது சிக்சர் மற்றும் பவுண்டரிகளையும் அடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் கே.எல்.ராகுல். அவரது கன்சிஸ்டன்ஸி இந்த தொடரில் மிகச் சிறப்பாக இருந்தது. அதனால் என் கனவு அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேனாக கே.எல்.ராகுல் இருக்கிறார்.
டேவிட் மில்லர்:
இந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான நேரங்களில் அணிக்கு தோள்கொடுத்தவர் டேவிட் மில்லர். அத்துடன் இடதுகை மற்றும் வலதுகை பேட்ஸ்மேன்கள் அணியில் சரிவிகிதமாக இருக்க வேண்டும் என்பதால் 5-வது வரிசை பேட்ஸ்மேனாக இவர் இருப்பது நல்லது.
லியாம் லிவிங்ஸ்டன், தினேஷ் கார்த்திக்:
ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் பினிஷர்களாக 6 மற்றும் 7-வது இடங்களில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் தினேஷ் கார்த்திக்தான் எனது தேர்வு. சிக்சர்களை விளாசும் லிவிங்ஸ்டனின் ஆற்றல் அணிக்கு பயன்படும். அத்துடன் அவரது பந்துவீச்சும் அணிக்கு கைகொடுக்கும். மற்றொரு வீரரான தினேஷ் கார்த்திக், 360 டிகிரியிலும் ஷாட் அடிப்பதில் கெட்டிக்காரர். அத்துடன் சிறப்பான விக்கெட் கீப்பராகவும் அவர் திகழ்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, எந்த கட்டத்திலும் பதற்றமில்லாமல் எப்போதும் அமைதியாக இருக்கும் அவரது மனநிலையும் அணிக்கு சாதகமாக இருக்கும்.
ரஷித் கான்:
நடுவரிசை ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவரான ரஷித் கான், ஒரு அதிரடி பேட்ஸ்மேனாகவும் அணிக்கு தோள் கொடுப்பார்.
முகமது ஷமி, பும்ரா:
இக்கட்டான நேரத்தில் விக்கெட்களை எடுக்கும் ஆற்றல் வாய்ந்தவர் முகமது ஷமி. ஆட்டத்தின் முதல் ஓவர்களில் ஷமி சிறப்பாக செயல்படும் நிலையில், கடைசி ஓவர்களில் எதிரணியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவராக பும்ரா இருக்கிறார்.
சாஹல்:
இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்துள்ள சாஹல், தன் சிறப்பான பந்துவீச்சால் எந்தக் கட்டத்திலும் விக்கெட்களை வீழ்த்தும் ஆற்றலைப் பெற்றுள்ளார்.