No menu items!

சிஎஸ்கேவின் கதை 8: தடைக்காலத்தில் தவித்த ‘தல’யின் படை

சிஎஸ்கேவின் கதை 8: தடைக்காலத்தில் தவித்த ‘தல’யின் படை

தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்களுக்கு மிகவும் வேதனையளித்த ஆண்டு 2016. ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகித்த கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த ஆண்டு மிகுந்த வேதனையை அளித்தது. சூதாட்ட பிரச்சினையால் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஆடவில்லை என்பதே இந்த வேதனைக்கு காரணம்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கு மாற்றாக ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் ஐபிஎல்லில் சேர்க்கப்பட்டன. ஒருதாய் பிள்ளைகளாய் ஒரே அணியில் இருந்த சிஎஸ்கே வீரர்கள் இந்த இரு அணிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டன. இதன்படி தோனி, பப் டுபிளெஸ்ஸி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் ஆகிய வீரர்கள் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆடினர். இதில் புனே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். ஜடேஜா, பிராவோ, மெக்கல்லம், ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடினர். தங்கள் மனம் கவர்ந்த அணியான சென்னையை விட்டு மற்ற அணிகளில் ஆடுவது அந்த வீரர்களின் மனதைப் பிசைந்தது.

இதுபற்றி பின்னாளில் கருத்து தெரிவித்த மஹேந்திர சிங் தோனி, “2016-ம் ஆண்டில் சென்னைக்காக ஆடாமல் புனே அணிக்காக ஆடும்போது சிறிது கஷ்டமாக இருந்தது. அதிலும் போட்டியில் ஆடுவதற்காக புனே அணியின் சீருடையை அணிந்து சென்றபோது மஞ்சள் நிற சீருடையை அணியாமல் இருந்தது மனதை வருத்தியது.

2016-ம் ஆண்டுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 ஆண்டுகள் ஆடியிருந்தேன். திடீரென்று அந்த பந்தம் அறுந்துபோனது மனதை அழுத்தியது. மிகவும் சோகமாக இருந்தது.

அதே நேரத்தில் நான் ஒரு தொழில்முறை ஆட்டக்காரன் என்பதால் என் மனதைத் தேற்றிக்கொண்டேன். என் அப்போதைய அணியான ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக முழுமனதுடன் விளையாடத் தயாரானேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரான ட்வைன் பிராவோ, “உலகின் தலைசிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய நிலையில், 2016-ல் அவரது தலைமை இல்லாமல் ஆடுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது” என்கிறார்.

இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,  ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைய, சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது.

அடுத்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இப்படியாக 2 ஆண்டுகள் தடைக்காலம் முடிய 2018-ம் ஆண்டில் சென்னை அணி மீண்டும் உயிர் பெற்றது. இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு முன்னதாகவே தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய மூன்று வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்தது. இந்த சூழலில் ஏலத்துக்கு முன் அணியின் நிர்வாகத்தை தொடர்புகொண்ட தோனி, என்ன விலை கொடுத்தாவது தனக்கு பழைய சென்னை அணி வீரர்களை பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“சிஎஸ்கே என்பது வெறும் அணி மட்டுமல்ல. அது ஒரு குடும்பம். இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் எனக்கு மீண்டும் வேண்டும்” என்பதே சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தோனி விடுத்த கோரிக்கையின் சாராம்சம்.

இதை மனதில் வைத்துக்கொண்டு ஏலத்துக்கு தயாரானது சிஎஸ்கே நிர்வாகம்.

(செவ்வாய்கிழமை சிங்கங்கள் மீண்டும் கர்ஜிக்கும்)

முந்தைய அத்தியாயங்கள் படிக்க க்ளிக் செய்யவும்

சிஎஸ்கேவின் கதை 1 – 7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...