No menu items!

கேஜிஎஃப் 2 – சினிமா விமர்சனம்

கேஜிஎஃப் 2 – சினிமா விமர்சனம்

2022-ம் ஆண்டில் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான ஒரு அசல் ‘பேன் – இந்தியா’ திரைப்படம் ‘கேஜிஎஃப்-2’.

‘கேஜிஎஃப் என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்க ராக்கி ஒருவனால்தான் முடியும், அதே கேஜிஎஃப்-பை ராக்கியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்’ என்று மாளவிகாவிடம் பிரகாஷ் ராஜ் சொல்லும் வசனம்தான் ‘கேஜிஎஃப்-2’ படத்தின் மொத்த கதை. இதற்குள் கொஞ்சம் அம்மா சென்டிமெண்ட், கூடவே கோபம், துரோகம், விரோதம் என ஒரு ஆக்‌ஷன் ஸ்க்ரிப்ட்டுக்கு அவசியமான அம்சங்களை கலந்து காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

‘ராக்கி பாய்’ யாஷ், முழுப் படத்திலும் ஒரே முகபாவனையுடன் வருகிறார். காதலோ மோதலோ – ஒரே மாதிரியான ரியாக்‌ஷன்தான். ஆனால், ஆக்‌ஷன் காட்சிகளில் மனிதர் அடிக்கும் ஒவ்வொரு அடியும், நமக்கு விழுவது போல பதறவைக்கிறது.

’300’ என்ற ஆங்கிலப் படத்தில் வரும் ஜெர்ரார்ட் பட்லரை போல ஹை வோல்டேஜ் ஆக்‌ஷனில் அதகளப்படுத்துகிறார்.

ராக்கி பாயின் ‘எண்டர்டெய்மெண்ட்’ என்ற புது கான்செப்ட்டில், காதலியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி எதிர்பார்த்த அளவிற்கு எண்டர்டெயின் பண்ணவில்லை.

‘கேஜிஎஃப்-1’-ல் கதை சொன்ன அப்பா ஆனந்த நாக் திரும்ப வந்தால் சுவாரஸ்யம் இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ, இந்த முறை அவருக்கு பதில், அவருடைய மகனாக பிரகாஷ் ராஜை கதைச் சொல்லியாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவரும் கொஞ்சம் மெதுவாக கதை சொல்கிறார். ஆனால், தன்னுடைய பாணியில் அழுத்தமாக சொல்கிறார்.

கடந்த பாகத்தில் கொல்லப்பட்டதாக சொல்லப்படும், அதீரா சஞ்சய் தத்தின் எண்ட்ரீயில் அனல் பறக்கிறது. ஆனால், அதற்கு பிறகு சண்டை மட்டுமே நன்றாக போடுகிறார்.

ஈஸ்வரி ராவின் யதார்த்தமான நடிப்பு ஆக்‌ஷனுக்கு மத்தியில் சாந்தமாக இருக்கிறது. பிரதமராக வரும் ரவீனா டாண்டன் கெத்தாக நடித்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் ராவ் ரமேஷ், கொடுத்த கதாபாத்திரத்திற்கு மிகாமல் நடித்திருக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி, ’வியர்க்கிறது’ என்று சொல்லும் காட்சியில், ஹெலிஹாப்டரை மின்விசிறி மாதிரி பறக்கவிடும் காட்சி காதலின் காஸ்ட்லி கவிதை.

‘ராக்கியை அழிக்க இன்னொரு ராக்கியாலதான் முடியும். அந்த ராக்கியை எங்கப்பனாலேயே உருவாக்க முடியல. வேற எவனால முடியும்.’

‘அல்லா நம்மள காப்பாத்த நமாஸ் பண்ணனும். நாம நமாஸ் பண்ண ராக்கிதான் காப்பாத்தணும்.’

‘ஒரு மணி நேரத்துக்கு, பெரிய முள் 12 அடியெடுத்து வைக்கணும். ஆனா சின்ன முள் ஒரு அடியெடுத்து வைச்சா போதும்’ என வசனங்களில் ’பஞ்ச்’களை தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

கேமரா, எடிட்டிங், சண்டைக் காட்சிகள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இப்படத்தின் கோல்ட் ஸ்டாண்டர்ட்டுக்கு கைகொடுக்கின்றன. புவன் கெளடாவின் ஒளிப்பதிவு, படம் பார்க்கும் நாமும் கேஜிஎஃப்-க்குள் இருக்கிறோமோ என்று நினைக்கத் தூண்டுகிறது.

உஜ்வல் குல்கர்னியின் எடிட்டிங், ஆக்‌ஷன் காட்சிகளில் செம ஷார்ப். ஆக்‌ஷன் காட்சியில் ரைடர் சுஃபியின் பாணி பதற்றத்தை வரவழைக்கிறது. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், விஷூவல் எஃபெக்ட்ஸ் டீம் பட்டயைக் கிளப்பியிருக்கிறது. இவர்களுக்கு கேஜிஎஃப்-ல் இருந்து எடுத்த கோல்ட் பிஸ்கெட்கள் ஏதேனும் மிச்சமிருந்தால், நிச்சயமாக பரிசாக கொடுக்கலாம்.

மாளவிகா, ஈஸ்வரி ராவ், சஞ்சய் தத், ராவ் ரமேஷ் என பெரும் நட்சத்திர பட்டாளம், ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் கூட்டத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வு. திரைக்கதையை ஃபாலோ செய்வதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் ராக்கியின் அம்மா சொல்லும், கடல் – தங்கம் கதையை, க்ளைமாக்ஸில் நிஜமாக்கும் ஹீரோ என்பதுபோல் முடித்திருப்பது இயக்குநரின் மிடாஸ் டச்!

ஆக மொத்தம் இந்த சித்திரை ரேஸில் ‘கேஜிஎஃப்- 2’…..

‘பீஸ்ட்’டை ஒவர் டேக் செய்த ’மான்ஸ்டர்’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...