அம்மா மீனாட்சி விட்ட கண்ணீரில், மகள் ரேவதி மனம் நொறுங்கிப் போனாள்.
“ஏம்மா அழறே?”
“பின்ன என்னடி பண்ணச் சொல்ற? உனக்கு ஒரு வளைகாப்பை பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அது நடக்காது போலயிருக்கே? உங்க அப்பா ஆட்டோ ஓட்டற காசையும், நான் சமையல் வேலைக்குப் போற கூலியையும் வெச்சிட்டு, இந்த வீட்டோட அன்றாட செலவை நடத்தறதே சரியாயிருக்கு. இதுல நம்மால எப்படி ஆடம்பரமா ஒரு வளைகாப்பை நடத்த முடியும்?”
“சரிம்மா, ஆடம்பரமா பண்ண வேண்டாம்! உன்ன யாரு அப்படி பண்ணச் சொன்னாங்க?” என்று ரேவதி முடிப்பதற்குள், அப்பா மாணிக்கம் உள்ளே நுழைந்தார் சோர்வாக.
“நீங்க பேசறதெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன். நம்ம வசதிக்கு வீட்டு வாசல்லயே பந்தல் போட்டுத்தான் பண்ண முடியும்.”
“ஆமாங்க, அதைத்தான் நானும் சொல்லிட்டிருந்தேன். நமக்கு பெரிய மண்டபம் எடுத்து பண்ற அளவுக்கு வசதிகள் இல்லை… வீட்டு மட்டுல, நம்ம சொந்தக்காரங்க ஒரு பத்து இல்லை பதினஞ்சு பேரைக் கூப்பிட்டு பண்ணிடலாம், என்ன சொல்றீங்க?”
“அப்புறம், சாப்பாடெல்லாம் பக்கத்துல இருக்கற ஓட்டல்ல ஏற்பாடு பண்ணச் பாக்கறேன்.”
“ஏங்க வீண் செலவு? நானே சமையல் பண்ணிடறேன், குறைச்சலான பேருதானே இருப்பாங்க!”
“இல்ல… நீ ஏன் மீனாட்சி கஷ்டப்படணும்?”
“இதுல என்னங்க கஷ்டம் இருக்கு? ஊர்ல யார், யாருக்கோ சமைச்சு போடற நான், நம்ம ஒரே பொண்ணுக்காக பண்ணமாட்டேனா? சந்தோஷமா பண்ணுவேங்க. அதுக்குத்தானே தவம் கிடந்தோம்!”
“சரி மீனாட்சி! அப்படியே ஆகட்டும்மா…”
“ரேவதி, நாளைக்கு உன் புகுந்த வீட்லேருந்து எல்லாரும் உன்னைப் பார்க்க வர்றாங்கம்மா…! அவங்க கிட்டேயும் இதைப்பத்தி ஒரு வார்த்தை பேசணும்” என்று மனதில் கலக்கத்துடன் அப்பா கூறினார். “அப்பா! இது நாம நடத்தற விழா.இதுக்கு அவங்க அனுமதி தேவையில்லை!”
“அம்மாடி! அவங்க சுபாவம் தெரிஞ்சும், நீ இப்படி பேசறியே!” அப்பா கலங்கினார்.
“விடுங்க.! வாரிசு வரப்போகுது.அதனால எல்லாரும் மாறுவாங்க.”
…….
“வாங்க! வாங்க! சம்பந்தி… உள்ளே வாங்க… உட்காருங்க.”
“எங்கே உக்கார? பொட்டிக்கடை மாதிரி, ஒரு வீட்டை வெச்சிட்டு எங்களை உக்காரச் சொல்றீங்க?”
ரேவதி, மன வேதனையுடன் அவளது கணவன் வினோத்தின் முகத்தைப் பார்த்தாள். அவன், ஏதோ சம்பந்தம் இல்லாதவன் போல, வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.
“காபி குடிக்கறீங்களா சம்பந்தி? மாப்ள நீங்க? முதல்ல காபியை குடிச்சிட்டு, பேசின பிறகு டிபனை சாப்பிடலாம்.”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… நாங்க சாப்ட்டுதான் வந்தோம்; சரி… அதெல்லாம் விடுங்க! நாளைக்கு உங்க பொண்ணு வளைகாப்புக்கு என்ன பண்றதா இருக்கீங்க?”
“சம்பந்தி… அது வந்து…!”
“மென்னு முழுங்கறதை பார்த்தா, ஒண்ணும் தேறாது போலயிருக்கே.”
ரேவதியின் அப்பா நடுவில் நுழைந்தார்.
“வீட்டுமட்டுல, நம்ம ரெண்டு குடும்ப ஆட்களோட சேர்த்து ஒரு பதினஞ்சு பேரை மட்டும் வச்சிட்டு, எளிமையா பண்ணிடலாம்னு…”
“ஏங்க…? பக்கத்துல ஒரு சின்ன மண்டபமா எடுத்து பண்ணக் கூடாதா? எங்க ஆளுங்கள்ளாம் இவ்வளவு சின்ன எடத்துக்கெல்லாம் வர மாட்டாங்க…”
“இல்ல சம்பந்தி, அதுக்குமேல செலவு பண்றது கொஞ்சம் கஷ்டம்…”
“சாப்பாட்டுக்கு என்ன பண்றதா உத்தேசம்?” என்று ரேவதியின் மாமனார் கேட்க…
“வீட்ல, மீனாட்சியே சமைச்சிடலாம்னுதான் தீர்மானம் பண்ணிருக்கோம்…”
“என்னம்மோ பண்ணுங்க! சோத்தையாவது முழு வயித்துக்கு போடுவீங்களா? ஆனா நீங்க என்ன பண்ணுவீங்களோ எங்களுக்கு தெரியாது, எங்க குடும்ப வழக்கப்படி, கண்டிப்பா ரேவதிக்கு தங்க வளையல் போடணும்!” என்று வினோத்தின் அம்மா திட்டவட்டமாகக் கூற…
“சம்பந்தி! பத்தாயிரத்துக்கு மண்டபமே எடுக்க முடியலை எங்களால! நாங்க எப்படி வளையல், அதுவும் தங்கத்துல?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க! நீங்கதான் எதாவது யோசிக்கணும். கடனையொடனை வாங்கிப் பண்ணுங்க, அப்போத்தான் எங்களுக்கும் கொஞ்சம் மரியாதையா இருக்கும்.”
“சம்பந்தி! பவுன் விக்கற விலைக்கு ரெண்டு பவுனாவது ஆகும் வளையலுக்கு லட்ச ரூபாய்க்கு நாங்க எங்கே போறது?”
“வக்கத்து போன குடும்பத்துல பொண்ணை எடுத்தது எங்க தப்பு…! ஒண்ணும் சொல்லி பிரயோஜனம் இல்லை, வளையலை உங்களால போட முடியாட்டி, அப்படிப்பட்ட வளைகாப்பே நடக்கத் தேவையில்லை, நாங்க வர்றோம். வாடா வினோத்!”
………….
வினோத், ரேவதிக்கு இரவு ஃபோன் அடிக்க…
“என்ன சொல்றான் என் குழந்தை?”
“ம்… இந்த வளைகாப்பு நடக்குமா, நடக்காதானு கேக்கறான்?”
“ஏன் ரேவதி இப்படி பேசற? உன் குரலே சரியில்லை!”
“பின்ன என்ன பண்ணச் சொல்றீங்க? உங்க அம்மா, தங்க வளையல் போட்டே ஆகணும்னு சொல்றாங்க…! எங்களுக்கோ இங்கே ஒரு சின்ன மண்டபம் எடுத்து பண்ணக்கூட வசதியில்லை… சமையல் கூட என் அம்மாவே வீட்லதான் பண்ண போறாங்க, அப்படிப்பட்ட எங்களோட ஏழ்மை நிலைமை தெரிஞ்சும், இப்படி எங்களை வதைக்கறது நியாயமா? எல்லாம் புரிஞ்சும் அவங்க பேசறதைக் கேட்டுட்டு நீங்க மௌனமா இருந்தது சரியா?”
“சரியில்லைதான்! ஆனா?”
“என்ன ஆனா? ஆவன்னா? உங்களால இதையெல்லாம் தட்டிக்கேக்க முடியுமா முடியாதா?”
“என்னை என்ன பண்ணச் சொல்ற? என் நிலைமை தெரிஞ்சுமா நீ இப்படி பேசற? நானோ, சாதாரண எலக்ட்ரீஷியன்; ஒழுங்கான சம்பளம் கிடையாது, என் அப்பா அம்மாவை நம்பித்தான் நானே பொழப்பை நடத்தறேன்…! இதுல என்னால என்ன செய்ய முடியும்? எப்படியாவது வளையலைப்போட பாருங்க.”
“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? எங்களால எப்படி முடியும்?”
“எல்லாம் இந்தக் குழந்தையால வந்தது!” அவள் நொந்து போய் வார்த்தைகளை விட,
“தேவையில்லாம வார்த்தைகளை விடாதே!”
அவள் இன்னும் கடுப்பாகி, “இதுவும் பேசுவேன், இன்னமும் பேசுவேன்.”
“வாயை மூடு ரேவதி! இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசின…”
“அப்படித்தான் பேசுவேன், என்ன பண்ண முடியும் உங்களால?”
“நேர்ல வந்து ஓங்கி ஒண்ணு வெச்சிடுவேன், ஒழுங்கா வளையலைப் போடற வழியைப் பாருங்க … இல்லாட்டி எல்லாத்தையும் நிறுத்திட்டு போங்க…” என்று வினோத் ஆவேசத்துடன் ஃபோனை வைக்க, ரேவதி அரண்டு போய் நின்றாள்…! அழுதாள்.
…………
“மீனாட்சி! இன்னைக்கு சமையல் வேலையெல்லாம் முடிச்சிட்டியா?” என்று மீனாட்சியின் முதலாளியம்மா கேட்க…
“முடிச்சிட்டேம்மா…!”
“சரிடி…! நாளைக்கு என் பொண்ணு சுஜா இருக்காளே, அவளுக்கு வளைகாப்பு பண்ணலாம்னு இருக்கோம்…”
“நம்ம பாப்பாவுக்காம்மா! நல்ல விஷயம்.”
“அதுக்குத்தாண்டி மீனாட்சி! மண்டபத்துக்கு போறதுக்கு முன்னாடி, திருவேற்காடு கருமாரி அம்மனுக்கு, ஒரு ஜோடி தங்க வளையல் சாத்தறேன்னு வேண்டியிருக்கேன்… நீயும் வர்றியா? அந்த வேண்டுதலை நிறைவேத்த? அவளுக்கு குழந்தை வரணும்னு வேண்டினதுல உன் பங்கும் இருக்கே.”
“ரொம்ப நல்ல விஷயம்மா… ஆனா நாளைக்கு வர்றது எனக்கு கொஞ்சம் கஷ்டம்மா…”
“ஏண்டி? என்ன ஆச்சு?”
“இல்லம்மா… நாளைக்கு நம்ம ரேவதிக்கும் வளைகாப்பு பண்ணலாம்னு இருக்கோம்… அதான்.”
“பிரமாதம்டி… நாளைக்கு ரொம்ப நல்ல நாள். எல்லாம் நல்லபடியா நடக்கறதுக்கு என் வாழ்த்துக்கள்.”
“சரிம்மா! நான் வர்றேன்…” என்று மீனாட்சி மன ஏக்கத்துடன் வெளியேற…
“நில்லுடி மீனாட்சி! ஏன் உன் முகமே சரியாயில்லை… என்ன ஆச்சு?”
“அதை விடுங்கம்மா! நம்ம பாப்பாவுக்கு எல்லாம் நல்லா நடக்கணும். இப்ப அதுதான் முக்கியம்.”
“என்னன்னு இப்போ நீ சொல்லப்போறியா இல்லையா?”
“இல்லைம்மா! ரேவதி வீட்ல தங்க வளையல் போட்டாத்தான் வளைகாப்பு பண்ணலாம்னு சொல்லிட்டாங்க; எங்களுக்கோ, ஒரு மண்டபம் எடுத்து பண்ணவோ, இல்ல வெளியில சாப்பாடு ஏற்பாடு பண்ணவோ, எதுக்குமே வசதியில்லை…! நாங்க என்னம்மா பண்ண முடியும்?”
“ஏண்டி! உங்க நிலைமை தெரிஞ்சும் எப்படி அவங்க இந்த மாதிரி கேக்கலாம்?”
“என்னத்தம்மா சொல்றது? எல்லாம் என் தலையெழுத்து! ஒரே பொண்ணு, அவளுக்கு வளைகாப்பு பண்ணி பாக்கற அந்தக் குடுப்பினை கூட எனக்கு இல்லை! நீங்க ஏம்மா இப்போ அதெல்லாம் யோசிச்சிட்டு? நம்ம பாப்பாவுக்கு நல்லபடியா எல்லாம் நடத்துங்கம்மா” என்று ஆழ்ந்த வேதனையுடன் வெளியேறினாள்…
இரவு நேரம்! வளைகாப்புக்கு முந்தைய நாள். ‘தங்க வளையலுக்கு என்ன செய்வது’ என்ற துக்கத்தில் மீனாட்சியும் அவளது குடும்பமும் ஆழ்ந்திருக்க, பெரிய கப்பல் போன்ற கார் வந்து, ரேவதி வீட்டு வாசலில் நின்றது. முதலாளியம்மா கீழே இறங்கி வர, மீனாட்சி அதிர்ந்து போனாள்.
“வாங்கம்மா! உள்ள வாங்க! என்னம்மா நீங்க போய் வந்திருக்கீங்க திடீர்னு இந்த குடிசைக்கு? நாளைக்கு அதுவும் பாப்பாவோட வளைகாப்பை வெச்சிட்டு, என்னம்மா? ஏற்பாடெல்லாம் நல்ல விதமா நடக்குதா?”
“என் வீட்டு விசேஷம் ஒரு பக்கம் இருக்கட்டும்! நீ ஏன் இடிஞ்சு போய் உக்காந்திருக்க?”
“அதான் சொன்னேனேம்மா ஏற்கனவே? அதவிடுங்கம்மா, இப்ப இந்த நேரத்துல நீங்க இங்கே?”
“சொல்றேன். நீ எத்தனை வருஷமா எங்கிட்ட வேலை பாக்கற? உனக்கொரு மனக் கஷ்டம்னா என்னால பார்த்திட்டு சும்மா இருக்க முடியுமா?”
“என்னம்மா சொல்றீங்க?”
“இந்தா புடி!”
“என்னதும்மா! அட, தங்க வளையல்? இதுதானே அம்மனுக்கு சார்த்தவேண்டிய வளையல்னு காலையில எங்கிட்ட காமிச்சீங்க?”
“ஆமாம்டி… அதை நான் உன் பொண்ணு, இல்ல, என்னோட பெறாத பொண்ணு ரேவதிக்கு, குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”
“அய்யோ அம்மா! அது தெய்வ குத்தமாயிடும், பாப்பாவுக்காக வேண்டினது…! கோயில்ல போய் முதல்ல வழிபாட்டை முடிச்சிடுங்கம்மா.”
“இல்லைடி! தூய்மையான மனசு இருக்கற ஏழையோட வீட்லதான் இறைவன் குடியிருப்பான்னு நீ கேட்டதில்லை? எங்களோட வசதிக்கு, இன்னொரு ஜோடி வளையல் வாங்கிக்கற நிலைமையிலதான் ஆண்டவன் எங்களை வச்சிருக்கான். அதனால நீ எதுக்கும் கவலைப்படாதே. இந்த வளையலால ரேவதிக்கு, அவ புகுந்த வீட்ல மரியாதை கூடி, அவளோட அமைதியான வாழ்க்கை அவளுக்கு கிடைச்சு, அவ வளைகாப்பும் சுமுகமா நடக்கும்னா அதுதான் எனக்கு வேணும்…”
மீனாட்சி தவிப்புடன் பார்க்க, ரேவதி, சங்கடப்பட,
“தர்மசங்கடமா பாக்காதேடி… நீ இத்தனை வருஷம் காட்டின உழைப்புக்கும் விஸ்வாசத்துக்கும் நான் குடுத்த பரிசுனு வச்சுக்கோயேன். இதை வச்சிட்டு ஜாம் ஜாம்னு வளைகாப்பை நடத்து…! நான் வர்றேன்.”
மீனாட்சிக்கும் அந்த குடும்பத்திலுள்ளவர்களின் கண்களுக்கும் முதலாளியம்மா, அந்தக் கருமாரியம்மனாகவே காட்சியளித்தார்.