மீண்டும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு காரணம் மத்திய அரசின் குழப்பமான அறிவிப்புகள்.
மே 27 ஆம் தேதி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI)) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஆதார் அட்டை நகல்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதால் ஆதார் அட்டையின் நகல்களை எந்த ஒரு நிறுவனத்துக்கும் வழங்க வேண்டாம். அப்படி வழங்க வேண்டிய அவசியம் எழுந்தால் ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள எண்ணில் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் தெரிவது மாதிரி நகலெடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களிலிருந்து ஆதார் அட்டையை தரவிறக்கம் செய்யாதீர்கள். நம்பிக்கைக்குரிய கம்ப்யூட்டரிலிருந்து மட்டும் டவுன்லோட் செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஆதார் அட்டையைக் கொடுப்பது ஆபத்தானது என்று மத்திய அரசே தெரிவித்திருந்தது அதிர்ச்சியை எழுப்பியது. இன்று பல இடங்களில் ஆதார் அட்டைதான் அடையாள அட்டையாக கேட்கப்படுகிறது. மக்களும் ஆதார் அட்டையை அவ்வாறுதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில் மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழப்பத்தை உண்டு பண்ணியது. அரசுதான் ஆதாரை பயன்படுத்த வேண்டும் என்று கடந்த காலங்களில் அறிவுறுத்தி வந்தது.
இப்போது அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
ஆதார் நகல்கள் தவறாக பயன்படக் கூடிய வாய்ப்புகள் இருந்ததைதான் கடந்த அறிக்கை தெரிவித்தது. அதை தவறாக புரிந்துக் கொள்ளப்படுவதால் முந்தைய அறிக்கை திரும்பப் பெறப்படுகிறது. ஆதார் அட்டைகளை பயன்படுத்தும்போது கவனத்துடன் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆதார் அட்டையில் தனிநபர் தகவல் பாதுகாப்பு மற்றும் அந்தரங்க தகவல்கள் பாதுகாப்புக்கான போதுமான அம்சங்கள் இருக்கின்றன என்று இப்போது வந்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2010ல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டம்தான் ஆதார் அடையாள அட்டை. ஆரம்பத்தில் அது கட்டாயமக்கப்படவில்லை, ஆனால் பின்னர் அது கட்டாயமாக்கப்பட்டது. அரசு உதவிகள் முதல் முதன்மை ஆதாரம் வரை ஆதார் இல்லாமல் நடக்காது என்ற நிலை உருவாகியது.
ஆதார் அட்டைகள் மூலம் போலி பயனாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அரசு உதவிகளில் போலிகள் நீக்கப்பட்டனர். இவையெல்லாம் ஆதார் அட்டைகளின் பயன்களாக கருதப்பட்டன. உலக நாடுகள் பலவற்றில் இது போன்ற குடிமகன் அட்டைகள் உண்டு. அந்த அடிப்படையில்தான் இந்தியாவிலும் ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டது.
ஆனால் ஆரம்பம் முதலே ஆதார் அட்டைகள் மீது சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வந்தன.
மக்கள் தரும் தனிப்பட்ட தகவல்கள் அரசிடம் பாதுகாப்பாக இருக்குமா? அவை வெளியாருக்கு கசிந்து விடுமா? அரசு நிர்வாகத்தில் இணைய பாதுகாப்பு எவ்வளவு இருக்கும்? பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் மட்டுமல்லாமல் தனிநபர் தகவல்களை அரசு கேட்பது அந்தரங்கத்தில் தலையிடுவது போன்றதா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.
2017ல் ஆதாரில் அளிக்கப்பட்டிருந்த தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் தரவுகள் கசிந்ததாக அவரது மனைவி குற்றஞ்சாட்டினார்.
இப்படி பிரச்சினைகள் எழுந்துக் கொண்டிருக்கையில் ஆதாருக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன. அரசின் ஆதார் திட்டம் தனி நபர் அந்தரங்கத்தில் தலையிடுவது என்று கூற முடியாது. அரசியல் சாசனத்தின்படி ஆதார் அட்டை முறையானதுதான் என்று உச்ச நீதிமன்றம் 2018ல் தீர்ப்பளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கேட்கக் கூடாது என்றும் கூறியிருந்தது.
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆதார் தகவல்களை திருட இயலாது 13 அடி அகல சுற்றுச் சுவரினால் அந்தத் தகவல்கள்
பாதுகாக்கப்படுகின்றன என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இப்படி ஆதார் சர்ச்சைகள் தொடர்ந்துக் கொண்டேயிருக்க.
இப்போது இந்த சுற்றறிக்கையும் அதை திரும்பப் பெற்றதும் மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது.
ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து அரசு வெளிப்படையாக இருப்பதுதான் நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் நல்லது.