ப்ரே (prey) – ஆங்கிலம் (டிஸ்னி ஹாட்ஸ்டார்)
90-ஸ் கிட்ஸ்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிரேட்டர்’ படத்தை பின்பற்றி வெளியான படங்களில் லேட்டஸ்டாக வந்திருக்கும் படம் ப்ரே (prey). வட அமெரிக்காவின் கொமாச்சி பழங்குடி இனைத்தை மையப்படுத்தி 18-ம் நூற்றாண்டில் நடந்த கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கொமாச்சி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது ஊர் மக்களை பிரிடேட்டரிடம் இருந்து காப்பதுதான் படத்தின் கதை.
அந்தப் பெண்ணுக்கும் பிரிடேட்டருக்கும் இடையிலான யுத்தத்தை த்ரில்லர் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் டேன் டிரேச்டென்பெர்க். இப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணலாம்.
வெந்து தணிந்தது காடு – தமிழ் (அமேசான் பிரைம்)
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களைத் தொடர்ந்து எஸ்டிஆர் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இணைந்து வழங்கியிருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு.’ மும்பை பரோட்டா கடையில் வேலைக்குப் போகும் திருநெல்வேலி இளைஞனான முத்துவீரன், சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாகும் கதைதான் ‘வெந்து தணிந்தது காடு’
‘நாயகன்’, ‘பாட்சா’ போல ஒரு தாதாவின் கதையை அழுத்தமாக சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். அதற்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார் சிம்பு. ஆரம்பத்தில் அப்பாவி இளைஞனாக இருக்கும்போதும், இரண்டாம் பாதியில் தாதாவாக மாறும்போதும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
எஸ்டிஆர் – கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணிக்கு உதவியாக ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பட்டையை கிளப்பியுள்ளது. மொத்தத்தில் வீக் எண்டை உற்சாகமாக கொண்டாட தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளன.
கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியான இப்படம் அமேசான் பிரைமில் இந்த வாரம் வெளியாகி உள்ளது.
ஒரு தெக்கன் தல்லு கேஸ் – மலையாளம் (நெட்பிளிக்ஸ்)
சிறுகதைகளைகளையும், நாவல்களையும் சிறப்பான முறையில் படமாக்குவதில் மலையாள கலைஞர்கள் கைதேர்ந்தவர்கள். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ‘ஒரு தெக்கன் தல்லு கேஸ்’. மலையாளத்தில் வெளியான ‘அம்மிணி பிள்ளை வெட்டு கேஸ்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
ஊருக்கு நல்லதை நினைக்கும் சண்டியனான அம்மணிப் பிள்ளையின் நாட்டாமைத்தனம் அங்குள்ள 5 இளைஞர்களுக்கு வெறுப்பைக் கொடுக்கிறது.
அதன் விளைவாக ஒருநாள் முகமூடி அணிந்து அவரைத் தாக்குகிறார்கள். தன்னை தாக்கிய இளைஞர்களை அம்மணிப் பிள்ளை என்ன செய்தார் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் என். ஸ்ரீஜித். 1980-களில் ஒரு கிராமத்தில் நடப்பதுபோல் கதை நகர்கிறது.
பிஜு மேனன், பத்மபிரியா, நிமிஷா சஜயன், ரோஷன் மேத்யூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.
மஹாராணி 2 – இந்தி (சோனி லைவ்)
அரசியல் ஏதும் தெரியாத குடும்பத் தலைவியான ஒரு பெண் திடீரென நாட்டின் முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லி ஜெயித்த வெப் சீரிஸ் ‘மகாராணி’. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த வெப் சீரிஸின் 2-ம் பாகம்தான் ‘மகாராணி 2’.
தீவிர அரசியலில் நுழைந்த பிறகு அந்த குடும்பத் தலைவி எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அதை அவர் எதிர்கொண்டு வெல்வதையும் இதில் சுவாரஸ்யமான சொல்லியிருக்கிறார்கள்.
முதல்வராகும் குடும்பத் தலைவியான பீமா பாரதியாக இத்தொடரில் ஹியூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே காலா, வலிமை உள்ளிட்ட நடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். பீஹார் அரசியலையும், லாலுவுக்கு பிறகு ராப்ரி தேவி முதல்வரானதையும் நினைவுபடுத்தும் பல காட்சிகள் இந்த வெப் சீரிஸில் உள்ளன. சோனி லைவில் இந்த வெப் சீரிஸைப் பார்க்கலாம்.