No menu items!

ரயில் கொலை – ஒரு தலைக் காதலால் கொல்லப்படும் பெண்கள்

ரயில் கொலை – ஒரு தலைக் காதலால் கொல்லப்படும் பெண்கள்

காதலிக்க மறுத்ததால், கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சத்யாவை அவளது காதலன் சதிஷே ரயில் முன் தள்ளி படுகொலை செய்த சம்பவம் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராமலட்சமி (வயது 43). இவரது கணவர் மாணிக்கம் (வயது 47), சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு  ஓட்டி வருகிறார். இவர்கள் ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள்தான் சத்யா.

சத்யா, தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு ரயில் மூலம்தான் செல்வார். இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு தனது தோழியுடன் வந்த சத்யா, ரயில் வர தாமதமானதால் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து மதியம் 12.45 மணிக்கு தோழியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ். சத்யாவிடம் வெகுநேரம் பேசி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சரியாக 1.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கி மின்சார ரயில் வந்தது. அதை பார்த்த உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சத்யா சதீஷிடம் இருந்து விலகி ரயிலில் ஏற நடைமேடை ஓரம் நின்று கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென நின்று கொண்டிருந்த சத்யாவை பின்னால் இருந்தபடி முதுகில் எட்டி உதைத்தார், சதீஷ். இதில் நிலை தடுமாறிய சத்யா ரயில் இன்ஜின் முன்பு தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயில் சத்யா மீது ஏறி இறங்கியது.

இதில் சத்யா தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உடல் துடிதுடிக்க உயிரிழந்தார். துண்டிக்கப்பட்ட கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்ததைப் பார்த்த பயணிகள் பலர் அலறி அடித்து ஓடினர். உடன் வந்த சத்யாவின் தோழி அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் என்ன நடந்துள்ளது என சுதாரிப்பதற்குள் சத்யாவை ரயில் முன் எட்டி உதைத்து தள்ளிய சதீஷ் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பரங்கிமலை ரயில் நிலைய துப்புரவு பணியாளர் பிரசன்னகுமாரி, “நான் வேலை முடிந்து மதியம் 1 மணிக்கு ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தேன். வெகு நேரம் அந்த காலேஜ் பெண்ணிடம் அந்த பையன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். ரயில் வந்ததும் அந்த பெண் ரயிலில் ஏற உடன் வந்த பெண்ணுடன் நின்றபோது, ரயில் அருகே வரும் நேரத்தை பார்த்து அந்த பையன், தனது காலால் வாக்குவாதம் செய்த காலேஜ் பெண்ணை எட்டி உதைத்தான். இதில் அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது ரயில் அவர் மீது மோதியதில் தலைவேறு முண்டம் வேறாக தனித்தனியாக இருந்ததை கண்டு குலை நடுங்கிவிட்டது. ஒரு நிமிடம் இதயமே தூக்கி போட்டுவிட்டது. எட்டி உதைத்த அந்த பையன் அங்கிருந்து ஓடிவிட்டான்” என்று கூறியுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் 2 துண்டான சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலீசார் தலைமையில் 4 தனிப்படைகள், பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் 3 தனிப்படைகள் என மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவான சதீஷை தேடத் தொடங்கினர். சதீஷின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்தபோது அவர் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிவது தெரிந்தது. இதையடுத்து நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, கல்லூரி மாணவி சத்யா கொலையால் துக்கத்தில் இருந்த அவரது தந்தை மாணிக்கம் நேற்று இரவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மகள் கொலை, தந்தை மரணம் என ஆலந்தூர் காவலர் குடியிருப்பே பெரும் சோகத்தில் உள்ளது.

கல்லூரி மாணவி சத்யாவை எட்டி உதைத்து ரயில் முன்பு தள்ளி கொலை செய்த, 24 வயதாகும் சதீஷும், ஆலந்தூரைச் சேர்ந்தவர்தான். ஆலந்தூர் காவலர் குடியிருப்பு அருகே உள்ள ராஜா தெருவை சேர்ந்தவர். இவரது தந்தை தயாளன், பரங்கிமலை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின்னர் உதவி கமிஷனர் நடத்தும் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சதீஷுக்கு சரியாக படிப்பு வராததால் அவர் 8ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு ஊதாரியாக சுற்றி வந்துள்ளார். தந்தையின் ஓய்வூதிய பணத்தில் விலை உயர்ந்த பைக் ஒன்று வாங்கி வைத்து கொண்டு நண்பர்களுடன் சுற்றியுள்ளார்.

சதீஷ் வசித்து வரும் வீட்டின் அருகே தான் சத்யா வசித்து வந்த காவலர் குடியிருப்பு உள்ளது. இதனால், 4 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளியில் படித்து வந்த சத்யாவை பார்த்த சதீஷை அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். சத்யாவின் தோழிகள் உதவியுடன் அவரது செல்போன் எண்ணை வாங்கி சத்யாவுக்கு தனது காதலை சதீஷ் கூறியுள்ளார். அதை சத்யா முதலில் ஏற்கவில்லை. ஆனாலும், சினிமா பாணியில் தொடர்ந்து சத்யாவை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளார், சதீஷ்.

இந்நிலையில், பள்ளி படிப்பு முடித்த சத்யா தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் சேர்ந்தார். தினமும் கல்லூரிக்கு சத்யா தனியாகத்தான் சென்று வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சதீஷ், தினமும் சத்யா ஆலந்தூர் காவல் குடியிருப்பில் இருந்து பரங்கிமலை நிலையம் செல்வது வரை பின்தொடர்ந்து வந்து தனது காதலை ஏற்கச் சொல்லியுள்ளார். பல ஆண்டுகளாக பின் தொடர்ந்து வந்த சதீஷின் காதலை ஒரு கட்டத்தில் சத்யாவும் ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், தினமும் சதீஷ் பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யாவை சந்தித்து பேசி வந்துள்ளார். சில நேரங்களில் சதீஷ் தனது பைக்கிலேயே தி.நகரில் உள்ள கல்லூரிக்கும் சத்யாவை அழைத்து சென்று விட்டுவிட்டு மீண்டும் தனது பைக்கிலேயே அழைத்து வந்துள்ளார். இதுபோல் பல நேரங்களில் இருவரும் பைக்கில் ஒன்றாக சுற்றிவந்துள்ளனர்.

இது சத்யாவின் தாய் ராமலட்சுமிக்கு தெரியவந்த உடனே தனது மகளை கண்டித்துள்ளார். ஆனாலும், சத்யா தனது காதலன் சதீஷ் உடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சத்யாவின் பெற்றோர், ‘இனி கல்லூரிக்கு செல்ல வேண்டாம்; காதல் விவகாரம் நமது குடும்பத்திற்கு ஏற்றது இல்லை. இனி தவறு செய்தால் நாங்கள் தான் சாக வேண்டும்’ என்று கூறி சத்யாவை கண்டித்துள்ளனர். அதன்பிறகு மனம் மாறிய சத்யா தனது காதலன் சதீஷ் உடன் போனில் பேசுவதையும் மெசேஜ் அனுப்புவதையும் நிறுத்தியதுடன், அவருடனான நட்பையும் படிப்படியாக நிறுத்தியுள்ளார்.

வீட்டில் இருந்து ரயில் நிலையம் செல்வது வரை சத்யாவின் பெற்றோர்களில் யாராவது ஒருவர் சத்யாவை ரயில் ஏற்றுவதும், பிறகு கல்லூரி முடிந்து வரும் போது ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கும் அழைத்து வருவதுமாக இருந்துள்ளனர். சத்யாவின் செல்போனையும் பெற்றோர் வாங்கி வைத்து கொண்டனர். இதனால் சதீஷுக்கு சத்யாவை நேரில் பார்த்து பேசவோ போனில் பேசவோ வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா படிக்கும் கல்லூரிக்குள் சென்று ‘என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்… நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். நீ இல்லை என்றால் நான் இல்லை’ என்று கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், சத்யாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். அதன்படி சத்யாவின் பெற்றோர் மாம்பலம் காவல் நிலையத்தில் தனது மகளை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக சதீஷ் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் சதீஷ் மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து ‘இனி சத்யாவை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அதன் பின்னரும் விடாமல் சத்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார், சதீஷ்.

இதனையடுத்து சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கி, பொறியாளர் ஓருவருக்கு சத்யாவை பேசி முடிவு செய்துள்ளனர். சத்யாவுக்கு வரும் மாதம் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் அவரது பெற்றோர் செய்து வந்துள்ளனர்.

இந்த தகவல் தெரிந்து ஆத்திரமடைந்த சதீஷ், நேற்று வழக்கம் போல் சத்யா கல்லூரி செல்ல தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்ததும் பின் தொடர்ந்து நேரில் வந்து, ‘என்னை நீ காதலிக்க வில்லையா… வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க போவதாக சொல்றாங்களே அது உண்மையா…’ என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு சத்யா, ‘ஆமாம்’ என்று கூறி, ‘இனியும்  தொந்தரவு செய்யாதே. தொந்தரவு செய்தால் என் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து ரயில் நிலையத்திலேயே சத்யாவுடன் சதீஷ் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நிலையில்தான், தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அந்த ரயிலில் ஏற சத்யா தனது தோழியுடன் ஒதுங்கி நின்றுகொண்டிருந்தபோதுதான், சதீஷ், ‘என்னையே ஏமாற்றுவியா’ என்று கூறியபடியே பின்னால் இருந்து சத்யா முதுகில் ஓங்கி தனது காலால் எட்டி உதைத்து ரயில் இன்ஜின் முன்பாக தண்டவாளத்தில் தள்ளினார். இதில் சத்யா மீது ரயில் ஏறியதில் தலை துண்டித்த நிலையில் உயிரிழந்தார்.

சுவாதி கொலைக்கு பின்னர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது, சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவது என உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதையே சத்யா கொலை உறுதிபடுத்துகிறது. மேலும், தொடர்ந்து சத்யாவுக்கு சதீஷ் தொந்தரவளித்து வருவது தொடர்பாக காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது முறையாக நடவடிக்கை எடுத்திருந்தாலும் இன்று சத்யா உயிரோடு இருந்திருப்பார். அலட்சியம் அதிர்ச்சிக்கு காரணமாகியுள்ளது.

மேலும் பல கேள்விகளை சத்யா கொலை எழுப்புகிறது. குறிப்பாக காதலிக்க மறுப்பதால் கல்லூரி மாணவிகள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்வது பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

2016 ஜூன் 24ஆம் தேதி தந்தையுடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்த கல்லூரி மாணவி சுவாதியை, இளைஞர் ஒருவர் மறைத்து  வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது வாயில் வெட்டியதில்,  ரத்த வெள்ளத்தில் சரிந்த சுவாதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சுவாதிக்குப் பின்னரும் பல மாணவிகள் காதலிக்க மறுத்ததாலேயே கொல்லப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு, தனியார் நர்சிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த 21 வயதான ஸ்வேதா என்ற மாணவி தாம்பரம் ரயில்வே குடியிருப்பு பகுதி அருகே வந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தில் ஓங்கி குத்தினார். இதனால் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு ஸ்வேதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருச்சி, திருவெறும்பூர், நொச்சிவயல் புதூரை சேர்ந்த வித்யாலட்சுமி என்ற பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவியை, ஒருதலைக்காதல் நபரும் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து, விஷம் கலந்த குளிர்பானத்தை, கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றி குடிக்கவைத்து கொலை செய்தனர்.

கடலூர், காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்., டபிள்யூ. பட்டபடிப்பு மாணவி மகாலட்சுமி காதலிக்க மறுத்ததால் கல்லூரி வாசலிலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

திருவையாறை அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஆஷா  அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் என்பவரால் பேருந்தில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டார்.

இவர்களைப் போல் பலர். காதல் என்ற மென்மையான உணர்வே கொடூர கொலைக்கு காரணமாகிவிடுகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலைக் காதலால் கல்லூரி மாணவிகள் கொல்லப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. எனவே, ஆண் நண்பர்களை தேர்வு செய்யும் விஷயத்தில் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...