2022-இல் வெளியான நூல்களில் அதிகம் விற்பனையான டாப் 5 எது? டிஸ்கவரி புக் பேலஸ், பரிசல் புத்தக நிலையம் தரும் பட்டியல் இங்கே…
ஆகோள் – கபிலன் வைரமுத்து
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் புதிய நாவல் ‘ஆகோள்’. ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இதனை எழுதியுள்ளார். “சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளை களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பட்டிருக்கிறேன்” என்கிறார் கபிலன் வைரமுத்து. 1920ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் இந்த நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது.
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
தாலி மேல் சத்தியம் – இமையம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையத்தின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு, ‘தாலிமேல சத்தியம்’. தமிழ்நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற சாதி வேறுபாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் தனது படைப்புகளில் தொடர்ந்து முன்வைத்து வருபவர், இமையம். பேசுவதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள் பலவும் மிகச் சாதாரணமாக, கொஞ்சம்கூட முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் சமூகத்தில் நடப்பதை இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார். நம் கிராமங்கள் எப்படி ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை என்பதை இக்கதைகள் மூலம் இமையம் வலுவாக எடுத்துச்சொல்கிறார்.
வெளியீடு: . க்ரியா பதிப்பகம்
ஸலாம் அலைக் – ஷோபா சக்தி
பிரான்சில் வசிக்கும் இலங்கை தமிழ் எழுத்தாளர் ஷோபா சக்தியின் புதிய நாவல் இது. இலங்கை வடபுலத்தில் மண்டை தீவில் ஒரு நயினா தீவு சாத்திரியாருக்கும் வெளியுலகம் அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணுக்கும், அக்கா – தங்கை என இரண்டு சகோதரிகளுக்கு நடுவே பிறந்த ஜெபானந்தனின் கதையே ‘ஸலாம் அலைக்’. சொந்த ஊரிலும், இடம்பெயர்ந்து உயிரைப் பாதுகாக்க ஓடி ஒளித்துத் திரியும் கிராமங்களிலும், பற்றைக் காடுகளிலும், இயக்கத்தின் தடுப்பு முகாமிலும், அங்கிருந்து தப்பி வந்து கொழும்பு ஜிந்துப் பிட்டியிலிருந்து தலை மாற்றப்பட்ட கடவுச்சீட்டு மூலம் தாய்லாந்துக்கு தப்பிச்சென்று, அங்கிருந்து பிரான்ஸுக்கு ஓடிய ஜெபானந்தனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் நாவலாக விரிகிறது.
வெளியீடு: கருப்பு பிரதிகள் பதிப்பகம்
யாத் வஷேம் – நேமிசந்த்ரா
இந்த ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாவல் இது. கன்னடத்தில் இருந்து தமிழில் கே. நல்லதம்பி மொழிபெயர்த்துள்ளார். இந்நாவலில், 1940களில் இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளால் கைது செய்யப்பட்டு கான்சென்ட்ரேஷன் கேம்ப்களில் அடைபட்ட மனைவி, மூத்த மகள், மகன்களை விட்டு தன் இளைய மகளுடன் தப்பி ஓடி இந்தியா வருகிறார் ஒரு யூதர். பெங்களூர் வந்தவர் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு அமர்ந்து, இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சைன்ஸில் விஞ்ஞானியாக வேலை செய்துகொண்டு, 1942இல் இறந்துவிடுகிறார். அவரது ஒன்பது வயது மகளை பக்கத்து வீட்டார் எடுத்து வளர்த்து தங்கள் மகனுக்கே பிறகு திருமணம் செய்து வைக்கிறார்கள். தன் அறுபதுகளில் தனது வேரைத் தேடி ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜெரூசலம் என பல நாடுகளில் அலைந்து திரிந்து கடைசியாக உயிருடன் இருக்கும் தன் 70 வயது அக்காவை கண்டுபிடிக்கிறார். அப்போது அக்கா இஸ்ரேலில் குடியேற அழைக்க, அதை மறுத்து இந்தியாதான் தனது நாடு என்று இந்தியாவுக்குத் திரும்புகிறார்.
வெளியீடு: எதிர் பதிப்பகம்
வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா – ஆ.இரா. வேங்கடாசலபதி
கடன் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் யாராவது ஏமாற்றினால், அதை ‘காந்திக் கணக்கு’ என்று சொல்லும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனாருக்கு சேர வேண்டிய பணத்தை மகாத்மா காந்தி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்றும், அதனாலேயே வராக் கடன்களை ‘காந்திக் கணக்கு’ என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால், உண்மையில் ‘காந்தி கணக்கு’ என்பதன் வரலாறு உப்பு சத்தியாகிரகம் போராட்டத்துடன் தொடர்புடையது. சரி, வ.உ.சி. பணத்தை காந்தி அபகரித்தாரா இல்லையா? உண்மையில் நடந்தது என்ன? இந்த கேள்விகளுக்கு விடை சொல்லும் நூல்தான் இது. வ.உ.சி.க்கும் காந்திக்கும் இடையே நடைபெற்ற 19 கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த கேள்விகளுக்கான விடையை கண்டுபிடித்துள்ளார், சலபதி.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
எப்போதும் டாப் 1
2022இல் வெளியான புத்தகங்களில் அதிகம் விற்பனையானவை மேலே உள்ளவை என்றால், மொத்தத்தில் அதிகம் விற்பனையானது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தான். எப்போதுமே விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் இந்நாவல் இந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் சினிமாவாகவும் வெளியாக, தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து தமிழர்கள் மொத்தம் மொத்தமாக அள்ளிக்கொண்டு சென்றார்கள்.