No menu items!

உலகக் கோப்பை தோல்வி: பிசிசிஐ அதிரடி

உலகக் கோப்பை தோல்வி: பிசிசிஐ அதிரடி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சந்தித்த தோல்வி, ரசிகர்களைப் போலவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் (பிசிசிஐ). கடுமையாக பாதித்துள்ளது. ஐசிசி சார்பில் நடத்தப்படும் ஒரு பிரம்மாண்டமான போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டில்தான். அந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றபிறகு, கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அணி பெரிய கோப்பை எதையும் வெல்லவில்லை. இது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

இத்தனைக்கும் உலகிலேயே மிகப் பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ. உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களும் இந்திர்கள்தான். கிரிக்கெட்டுக்கான மிகப்பெரிய சந்தையும் இந்தியாவில்தான் இருக்கிறது. இப்படி பல விஷயங்கள் இருந்தும் இந்திய அணியால் கடந்த 9 ஆண்டுகளில் ஒரு சர்வதேச சாம்பியன்ஷிப்பை வெல்ல முடியாதது பிசிசிஐ நிர்வாகத்தை கலங்க வைத்துள்ளது. அத்துடன் இதே நிலை தொடர்ந்தால், இந்திய ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதுள்ள விருப்பம் காணாமல் போய்விடும். அதனால் கிரிக்கெட்டுக்கான சந்தை காணாமல் போய்விடும் என்ற அச்சமும் பிசிசிஐ நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் அடுத்து செய்யவேண்டியது என்ன என்று முடிவெடுப்பதற்காக பயிற்சியாளர் ராகுல் திராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, மூத்த வீரர் விராட் கோலி, தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா உள்ளிட்டோரை அழைத்து மிகப்பெரிய அளவில் பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் ஓய்வு பெறுவதைப் பற்றி விவாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றதிலேயே வயதான அணியாக இந்திய அணி உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் சராசரி வயது 30.6. இதில் அதிக வயதான வீரர் தினேஷ் கார்த்தில். இவரது வயது 37, அவரைத் தொடர்ந்து அஸ்வின், முகமது ஷமி, விராட் கோலி, ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் என பல வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.

அடுத்த உலகக் கோப்பை 2024-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. இதே வீரர்களை தொடர்ந்து அணியில் வைத்துக்கொண்டிருந்தால் சராசரி வயது இன்னும் கூடும். ஆனால் டி20 ஆட்டமோ இளம் வீரர்களுக்கானது. அதனால் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் அணியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

எனவே டி20 கிரிக்கெட்டை விட்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் ஆலோசனை சொல்லப்படலாம். அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு மாற்றாக இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

இங்கிலாந்து அணி சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்களையும் அணிகளையும் தேர்ந்தெடுத்து அந்த அணி விளையாடி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. அதேபோல் இந்திய அணியிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தலாமா என்றும் பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. மூத்த வீரர்கள் மற்றும் தேர்வுக்குழுவுடன் விவாதித்த பிறகு இந்த விஷயத்தில் பிசிசிஐ முடிவு எடுக்கும்.

2007-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்தியா தோற்றதும் சச்சின், திராவிட், கங்குலி போன்றோரை குறுகிய கால போட்டிகளில் இருந்து விலக்கிவைத்து பிசிசி புதுமை செய்தது. அதன் பலனாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணி வலிமையாக இருந்தது. அதுபோல் இப்போதும் செய்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள் ரசிகர்கள்.

பிசிசிஐ செய்யுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...