தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறுகின்றன. இப்போது இருக்கும் கூட்டணிகள் உடைகின்றன என்ற கருத்து வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதற்கு சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் காரணம்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக நடத்திய பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் வாழ்த்து கூறியவர் திருமாவளவன். ‘அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’ என்று ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் எதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூற வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. அதிமுக கூட்டணிக்கு செல்ல அச்சாரம் போடுகிறார் என்ற கருத்துக்கள் பரவின.
சமீபத்தில் பேட்டியளித்த திருமாவளவன், ‘“எடப்பாடி பழனிசாமியை பாராட்டியதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. அவர் அடிமட்டத்திலிருந்து தலைமைக்கு உயர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. ஓபிஎஸ்ஸை பின்னுக்குத் தள்ளி தனது இடத்தை தக்கவைத்துள்ளார். தனது ஆளுமையை நிரூபித்திருக்கிறார். பா.ஜ.க ஆதரவுக்காகக் காத்திருக்காமல் வேட்பாளரை அறிவித்தார் இபிஎஸ்” என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். அந்தப் பேட்டியில் திமுக கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் சொன்ன வாழ்த்து செய்தியிலும் அதன்பிறகு அவர் அளித்த பேட்டியிலும் ஒரு பொதுவான அம்சத்தைப் பார்க்க முடிகிறது. அது பாஜக. வாழ்த்து செய்தியில் ‘மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்த பேட்டியில் பாஜகவின் ஆதரவுக்கு காத்திராமல் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி என்று கூறியிருந்தார். ஆக, திருமாவளவனுக்கு அதிமுக கூட்டணியில் பாஜகதான் உறுத்தும் விஷயமாக இருக்கிறது.
பாஜக இல்லையென்றால் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக கூட்டணி சம்மதமே என்ற எண்ணத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
திமுக கூட்டணி காட்சியைக் கட் செய்து விட்டு அதிமுக கூட்டணிக்கு வந்தால் அந்தக் கூட்டணி இப்போது பிரிந்துக் கிடப்பதைப் பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. பாமக இடைத் தேர்தலை புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது. எடப்பாடி பழனிசாமியின் அழுத்தத்துக்கு பணிந்து எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளரையே ஆதரிக்க வேண்டிய சூழல் பாஜகவுக்கு வந்தது. அந்தக் கூட்டணியின் பெயரையே மாற்றிப் போட்டு பேனர் கட்டி பாஜகவுக்கு எடப்பாடி பயத்தைக் காட்டியதையும் அப்போது பார்த்தோம்.
அதனைத் தொடர்ந்து வேறு சில காட்சிகளும் வந்தன. பாஜகவில் உட்கட்சிப் பிரச்சினையால் விலகியவர்களை எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து வாங்கி வரவேற்று அரவணைத்துக் கொண்டார். இதில் கூடுதல் மற்றும் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால் இப்படி எடப்பாடி பழனிசாமி அரவணைத்து வரவேற்ற பாஜகவினர் யாரென்றால் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வெளியேறியவர்கள்.
பாஜகவினரை அதிமுக அரவணைக்கிறது என்றதும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ‘நான் கருணாநிதி, ஜெயலலிதா போல ஒரு லீடர், மேனேஜர் இல்லை’ என்று சொல்ல அதிமுகவினருக்கு இன்னும் கோபம். அண்ணாமலை ஜெயலலிதாவா என்று கோபப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அண்ணாமலை அடுத்த குண்டை போட்டார். என் அம்மா ஜெயலலிதாவைவிட 100 மடங்கு பலம் வாய்ந்தவர், என் மனைவி 1000 மடங்கு பலம் வாய்ந்தவர் என்றார் அண்ணாமலை. இதற்கு அதிமுகவிலிருந்து கண்டனங்கள்.
அண்ணாமலைக்கு வாயடக்கம் வேண்டும் என்றார் செல்லூர் ராஜு. அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் வேண்டும் என்று கூறினார்.
ஆனால் இது ஒருநாள்தான். மறுநாள் (மார்ச் 9) செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தன் குரலைக் குறைத்துக் கொண்டார். ”அதிமுக – பாஜக கூட்டணி தொடருகிறது. அதிமுக – பாஜக மோதல் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்ன மோதல் உள்ளது? மோதல் இல்லை. ஐடி விங்கை சேர்ந்தவர்கள் சிலர் கருத்து கூறினார்கள். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழக அளவில் அதிமுக தலைமையில் கூட்டணி. அண்ணாமலை தலைவர்கள் பற்றி கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. எங்களுடைய தலைவருக்கு நிகரானவர் இனி தமிழகத்தில் பிறக்கப் போவது கிடையாது” என்று கூறி அடங்கிக் கொண்டார். டெல்லியிலிருந்து எடப்பாடிக்கு ஏதாவது அழைப்பு வந்திருக்கலாம்.
திருமாவளவன், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையைத் தாண்டி திமுக என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்ப்போம்.
திமுக கூட்டணி உடைகிறது என்று திருமாவளவன் அணி மாறுகிறார் என்று செய்திகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தாலும் தனது பிறந்தநாள் விழாவில் திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார் திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
அங்கு மட்டுமில்லாமல் கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துக் கொண்ட விழாவில் திருமாவளவனும் கலந்துக் கொண்டார். இன்று ஈவிகேஎஸ் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் திருமாவளவன் கலந்துக் கொண்டிருக்கிறார்.
இவைதான் வெளியில் தெரியும் காட்சிகள். கட்சிகளும் தேர்தல் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கும்.
அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது அதற்கு வாக்கு இழப்புதான். ஆனால் அதிமுகவுக்கு வேறு கட்டாயங்கள் இருக்கின்றன. ஓபிஎஸ் பிரச்சினை, தேர்தல் வழக்குகள், சின்னம் சிக்கல்கள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இவற்றுக்கு மேலே அதிமுக தலைவர்கள் மீது இருக்கும் வழக்குகள். இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என் தொண்டர்கள் இருக்கிறார்கள், என்னை கரை சேர்ப்பார்கள் என்ற ஜெயலலிதாவின் துணிச்சலைப் போல் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பாரா என்பது சந்தேகமே. இன்னும் அவருக்கு அத்தனை ஆளுமை வரவில்லை. 2024 தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல். அது பிரதமர் பதவிக்கான தேர்தல். அதில் இப்போது அதிமுகவுக்கு பெரிய இலக்கு இருக்காது. பாஜக இல்லாமல் வேறு கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும் அதற்கு கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால் பாஜகவைப் போல் அதிக அதிகாரத்துடன், பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்காமல் மெல்லிய பெரும்பான்மையுடன் ஒரு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதிமுகவுக்கு வசதியே. அதன் மீது அத்தனை அழுத்தம் விழாது. அந்த அடிப்படையில் பார்த்தால் 2024 தேர்தல் நெருக்கத்தில் பாஜகவை கழற்றிவிடவும் எடப்பாடி துணியலாம்.
பாஜகவை கழற்றிவிட்டு விசிகவை இணைத்துக் கொள்வதில் அதிமுகவுக்கு சில சிக்கல்கல்கள் இருக்கின்றன. இப்போது அதிமுக அணியில் தேமுதிக, பாமக குழப்ப நிலையில் இருக்கின்றன. இரண்டு கட்சிகளுமே..முக்கியமாய் பாமக வட மாவட்டங்களில் நல்ல ஓட்டு வங்கி வைத்துள்ள கட்சி. விசிகவுக்காக பாமகவை இழக்க அதிமுக தயாராக இருக்குமா?
ஆனால் பாமகவே கூட்டணியைவிட்டு வெளியேறி திமுக அணியில் இணைந்தால் விசிக வெளியே வரும். அப்போது அதை அரவணைக்க அதிமுக தயாராக இருக்கும். அதைதான் விசிகவை வரவேற்போம் என்று செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.
பாமகவின் நிலைப்பாட்டைப் பொறுத்துதான் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு மாறும்.
’எங்கள் தலைமையில்தான் கூட்டணி, 2026ல் எங்கள் ஆட்சிதான்’ என்று அன்புமணி ராமதாஸ் இப்போது கூட கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் டயர் நக்கி என்று கூறிவிட்டு அதிமுக அணியில் இணைந்த பாமகவை நம்ப இயலாது. எங்கள் தலைமையில்தான் கூட்டணி, நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்றெல்லாம் அதிரடியாக பேசிக் கொண்டிருந்தாலும் பாமகவுக்கும் சிக்கல்கள் இருக்கின்றன. 2016 தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று தனித்துப் போட்டியிட்டு 234 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அழுத்தத்தில் பாமக இருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தால் நிச்சயம் அது திமுக கூட்டணிக்கு மாறுவதற்கான பலமான முயற்சிகளில் இறங்கும்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் அதிமுக, பாமக போன்ற பெரிய கட்சிகளுடன் அணி சேர்ந்து போட்டியிட்டால்தான் பாஜகவால் கொஞ்சமாவது வாக்குகள் வாங்க முடியும். தொகுதிகளை வெல்வது குறித்து யோசிக்க முடியும்.
அதனால் அது அதிமுகவின் கூட்டணியை விட்டுவிடாது. எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நிலை தெளிவாக தெரிவதால்தான் பாஜகவின் விருப்பமான ஓ.பன்னீர்செல்வம் இணைப்பையும் தட்டிக் கழித்து உறுதியாக நிற்கிறார். தன்னிடம்தான் பாஜக வரும் என்பது அவருக்குத் தெரியும். 2024 தேர்தல் நெருக்கத்தில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காட்டிய உறுதியைவிட அதிகம் காட்டுவார் எடப்பாடி.
திமுக வெற்றி வாய்ப்புள்ள நிலையில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி குறித்து பல கருத்துக்கள் இருந்தாலும் அதன் வாக்குசதவீதம் குறையவில்லை என்பதை அந்த வெற்றி காட்டுகிறது. ஆனால் இந்த சூழல் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடிக்கும் என்றே நம்பப்படுகிறது. குறிப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் வழங்குவதற்கான அறிவிப்பு வந்து செயல்படுத்தப்பட்டால் திமுகவுக்கான வாக்கு வங்கி அதிகரிக்கும். குறையாது.
திமுக கூட்டணிக்கு விசிகவைவிட அதிக வாக்கு வங்கி உள்ள கட்சியான பாமக வந்தால் கூடுதல் பலம்தான். ஆனால் இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் ஒரே தலித் கட்சியாக விசிக இருக்கிறது. திராவிடத்துக்கு திமுக, தேசியத்துக்கு காங்கிரஸ், கம்யூனிசத்துக்கு இடதுசாரிகள், அம்பேத்கரியத்துக்கு விசிக, சிறுபான்மைக்கு இஸ்லாமிய கட்சிகள் என திமுக கூட்டணி அனைவரையும் உள்ளடக்கிய கூட்டணி என்ற பிம்பத்துடன் இருக்கிறது. விசிக வெளியேறினால் அந்த பிம்பம் உடையும். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உடன்படுவாரா என்பது சந்தேகமே.
திமுக கூட்டணியில் இருப்பதுதான் பாதுகாப்பானது என்பது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தெரியும். ஆனால் கூட்டணிக்குள் கூடுதலாக பாமக வருவது கருத்தியல் பிரச்சினை மட்டுமல்ல, இடங்கள் ஒதுக்குவதிலும் சிக்கல் வரும் என்பதையும் விசிக புரிந்து வைத்திருக்கிறது. 2019 நாடளுமன்றத் தேர்தலில் விசிகவுக்கு இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டன. இரண்டிலுமே வென்றது. பாமக உள்ளே வந்தால் நிச்சயம் ஒரு இடம் குறையும்.
பாமக வரவில்லையென்றாலுமே திமுக கூட்டணியில் இட சிக்கல் இருக்கிறது. 2019போல் தொகுதிகள் ஒதுக்கப்படுவது 2024ல் சந்தேகமே. கமலின் மக்கள் நீதி மய்யம் வந்தால் ஒரு இடம் அதற்கு கொடுக்கப்படும். எஸ்.ஆர்.எம். பச்சமுத்து வெளியேறியிருக்கிறார். அவர் இடம் கமலுக்குப் போகலாம். மத்தியில் கூட்டணி ஆட்சி உருவாகும் பட்சத்தில் திமுகவுக்கு அதிக எம்.பி.க்கள் இருப்பது நல்லது என்று திமுக கருதும். அப்படி ஒரு சூழல் உருவானால் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் கை வைக்க வேண்டியிருக்கும். அதை உணர்ந்த திருமாவளவன் இப்போதே அதிமுகவுடனும் சின்ன நட்புடன் இருக்கிறார் என்று புரிந்துக் கொள்ளலாம்.