No menu items!

ஜோதிமணி மீண்டும் வெல்வாரா? – கரூர் தொகுதி எப்படியிருக்கு?

ஜோதிமணி மீண்டும் வெல்வாரா? – கரூர் தொகுதி எப்படியிருக்கு?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களில் ஒருவர் ஜோதிமணி. அதிமுகவின் முக்கிய தலைவரான தம்பிதுரையை கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார். ஜோதிமணி மீண்டும் களம் காண்பதால் கரூர் தொகுதி முக்கிய களமாக மாறியுள்ளது. ஜோதிமணி மீண்டும் வெல்வாரா? கரூர் தொகுதி கள நிலவரம் என்ன? பார்ப்போம்.

இதுவரை யார், யார் வென்றார்கள்?

வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, விராலிமலை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது கரூர் நாடாளுமன்றத் தொகுதி. இந்தத் தொகுதி இதுவரை 16 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் – 7, அதிமுக – 6, திமுக – 1, தமாக -1 முறை வென்றுள்ளன.

இந்த தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி களம் கண்டார். அப்போது அவர் 6,95,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை 2,75,151 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

அதன்பின்னர் நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வென்றது; விராலிமலையில் மட்டும் அதிமுக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது யாருக்கு வெற்றி வாய்ப்பு

காங்கிரஸ் சார்பாக மீண்டும் ஜோதிமணி, அதிமுக சார்பாக கே.ஆர்.எல். தங்கவேல், பாஜக சார்பாக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பாக ரெ.கருப்பையா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

2019 தேர்தலில் கிட்டத்தட்ட 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றார்; மேலும், 2021இல் இந்த தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் திமுகவே வென்றது. எனவே, ஜோதிமணி சுலபமாக வெல்வார் என்று சிலர் கணிக்கிறார்கள்; ஆனால், இம்முறை களம் அவ்வளவு எளிதானதாக ஜோதிமணிக்கு இருக்காது எனவும் சிலர் கணிக்கிறார்கள்.

கடந்த முறை அதிமுக வேட்பாளர் தம்பிதுரை மீது எப்படி அதிருப்தி நிலவியதோ, அதுபோல தற்போது ஜோதிமணி மீதும் அதிருப்தி நிலவுவதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் களமிறக்கப்பட்டிருக்கும் தங்கவேல் எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளராக இருந்தவர். ஜோதிமணி மீதான அதிருப்தி வாக்குகள் மற்றும் அதிமுகவுக்கு இருக்கும் பிரதானமான வாக்கு வங்கி ஆகியவற்றை நம்பி அவர் களத்தில் இருக்கிறார். கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததால் அதன் எதிர்ப்பு அலை அதிமுகவுக்குப் பின்னடைவானது. ஆனால், இம்முறை தனித்துப் போட்டியைச் சந்திப்பதால் அதிமுகவுக்குச் சாதகமான நிலை ஏற்படவே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி, விந்தியா, காயத்ரி ரகுராம் என பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தவிர,

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில்நாதன் அதிமுகவில் இருந்தவர்தான். 2011-ம் ஆண்டு அதிமுக சார்பாக அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் முக்கியமான பொறுப்பிலும் இருந்திருக்கிறார். இவருக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் நட்டா இந்தத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெறமுடியாவிட்டாலும், கணிசமான வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்னும் நம்பிக்கையில் பாஜக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி கருப்பையா கடந்த பொதுத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். அங்கு நாம் தமிழருக்கு உள்ள வாக்கு வங்கியை நம்பி களத்தில் நிற்கிறார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கருப்பையாவை ஆதரித்து கரூர் புறநகர்ப் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக சில நடவடிக்கை மேற்கொண்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆகவே, தொகுதியில் அவருக்கு எதிரான சில நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவருக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால் எதிர்ப்புகளையும் மீறி மீண்டும் ஜோதிமணிக்கு வாய்ப்புகள் வழங்கபட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் உட்பட திமுகவினர் ஆரம்பத்தில் தேர்தல் வேலைகளில் உற்சாகம் காட்டவில்லை.

இதனால் ஜோதிமணிக்கு ஆதரவாக முதன்முதலில் கரூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் கரூருக்கு நேரடியாக வந்து பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்றாலும் நாமக்கலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேர்தல் இவருக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார். தொகுதியில் தேர்தல் பணிமனை திறந்து வைக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகை தந்திருந்தார். உதயநிதி ஸ்டாலினும் இவருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இறுதியாகக் கோவையில் நடைப்பெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இவருக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இத்தனை தலைவர்கள் தலையீட்டுக்கு பின்னர் திமுகவினர் தேர்தல் பணிகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

ஜோதிமணியை 5 லட்சம் வாக்குகள் மேல் பெற்று வெல்ல வைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலினும் பரப்புரையில் பேசினார். ஆனால், சென்றமுறை போல பாஜகவுக்கான தீவிர எதிர்ப்பலை களத்தில் இல்லை. ஆகவே, அதிக வாக்குகள் காங்கிரஸுக்குக் கிடைக்குமா என்பது கேள்விதான். இருப்பினும், வாக்குகள் குறைந்துவிடக் கூடாது என்பதில் திமுக காங்கிரஸ் என இரு கட்சிகளும் தீவிரமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...