மத்திய அமைச்சர் எல்.முருகனும் (பாஜக), முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் (திமுக) நேருக்கு நேர் மோதுவதால் இந்த தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதியாக நீலகிரி இருக்கிறது. இவர்கள் இருவரைத் தவிர அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்.ஜெயக்குமார் ஆகியோரும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.
தொகுதியின் வரலாறு
நீலகிரி மக்களவைத் தொகுதி. உதகை, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர்(தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், சுதந்திரா கட்சி 1 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும், பாஜக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.பிரபு, அதிகபட்சமாக 4 முறை இத்தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004-ம் ஆண்டுவரை பொதுத் தொகுதியாக இருந்த நீலகிரி, 2009-ம் ஆண்டுமுதல் தனித் தொகுதியாக மாறியுள்ளது. கடைசியாக நடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மொத்த வாக்காளர்கள்:
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 5,73,624 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,74,497, பெண் வாக்காளர்கள் 2,99,107. மூன்றாம் பாலினத்தவர் 20.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பொருளாதாரமானது சுற்றுலா மற்றும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது. இந்த தொகுதியில் இந்துக்கள் 80 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 6 சதவீதமும், மற்ற மதத்தினர் 4 சதவீதமும் உள்ளனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக படுகர் சமுதாயத்தினர் 30 சதவீதமும், ஆதிதிராவிடர் 20 சதவீதமும் உள்ளனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக ஒக்கலிக கவுடர் சமுதாயத்தினர் 50 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும் இருக்கின்றனர்.
2 ஆண்டுகளாக சுற்றிவரும் எல்.முருகன்:
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன், இதற்காக கடந்த 2 ஆண்டுகளாகவே தொகுதியில் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் தொகுதியின் பல பகுதிகளிலும் உள்ள மக்களிடையே நெருங்கிப் பழகியுள்ளார். இது தனது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எல்.முருகன் நம்புகிறார்.
பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், சமையல் எரிவாயு இணைப்புகள் ஆகியவற்றைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். படுகர் இன மக்கள் மத்தியில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். இவற்றோடு அதிருப்தி வாக்குகளும் தங்களுக்கு வரும் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
கூட்டணி பலத்துடன் ஆ.ராசா:
திமுக கூட்டணியில் போட்டியிடும் ஆ.ராசா, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட தேசிய அளவிலான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். தங்களின் கூட்டணி பலம் இந்த தேர்தலில் பெரிய அளவில் கைகொடுக்கும் என்பது திமுகவினரின் நம்பிக்கையாக இருக்கிறது. அத்துடன் எதிர்கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் 2 அணிகளாக பிரிந்து கிடப்பதும் அவர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
விடாமல் போராடும் டி.லோகேஷ்:
அ.தி.மு.க. வேட்பாளர் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரை தனது பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குகளை கேட்டு வருகிறார். “ஆ. ராசா, எல். முருகன் ஆகிய இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஏதாவது செய்து கொடுத்துவிட்டு வாக்கு கேட்டால் பரவாயில்லை. எதுவுமே செய்யாமல் வாக்கு கேட்கிறார்கள். அதனால், எல்லா இடங்களிலும் எனக்குத்தான் வரவேற்பு இருக்கிறது” என்று உற்சாகமாக களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார் லோகேஷ்.