No menu items!

வீரப்பனை உயிருடன் ஏன் பிடிக்கவில்லை – Vijayakumar IPS Reveals All – 3

வீரப்பனை உயிருடன் ஏன் பிடிக்கவில்லை – Vijayakumar IPS Reveals All – 3

நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘The Hunt for Veerappan’ சீரியஸைத் தொடர்ந்து வீரப்பன் வேட்டை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், ‘வாவ் தமிழா’ யூ டியூப்  சேனலுக்காக விஜயகுமார் ஐபிஎஸ்ஸை சந்தித்தோம்.

வீரப்பன் கதையில் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வு. ராஜ்குமார் ரிலீஸுக்காக பெரும்பணம் வீரப்பனுக்கு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது, அந்த பணம் எல்லாம் என்ன ஆனது? ராஜ்குமார் ரிலீஸ்க்கு பின்னர் என்ன நடந்தது?

ராஜ்குமார் சம்பவத்துக்கு பிறகு வீரப்பனுக்கு நிறைய பணம் வந்துவிட்டது; ஆனால், பணம் வந்ததும் பிரச்சினைகளும் நிறைய வந்துவிட்டது. நிறைய பேர் பணத்துக்காக அவனை தொந்தரவு செய்ய தொடங்கிவிட்டார்கள்.

ராஜ்குமாரை ரிலீஸ் செய்த அன்று பவானி பக்கத்தில் ஹெலிபேட் தயார் செய்து அவர் காட்டைவிட்டு வெளியே வந்து அங்கிருந்து பெங்களூரு சென்ற அதே இரவு, வீரப்பன் கேங்க் ஒரு மெட்டடோர் வேன் எடுத்துக்கொண்டு அவினாசி வழியா, கோயம்புத்தூர் போய், வெள்ளிங்கிரி மலை பக்கத்தில் இருக்கும் செவ்வந்தி மலை போய்விட்டார்கள். வெள்ளிங்கிரி சென்றது வீரப்பனுக்கு ஒரு பின்னடைவாகிவிட்டது. கொஞ்ச பணம்தான் எடுத்துக்கொண்டு போக முடிந்தது. மீதி பணத்தை ஆங்காங்கே புதைத்து வைத்திருந்தார்கள். அதில் பெரும்பணத்தை மீட்கமுடியவில்லை. வீரப்பன் கதை முடிந்தபின்னர், அப்படி புதைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தைத் தேடித்தான் ஒரு கூட்டம் காட்டுக்குள் போனது.

சரி, அந்தக் கதை நமக்கு தேவையில்லை. வீரப்பன் ஆபரேசனுக்கு வருவோம்…

ராஜ்குமார் ரிலீஸூக்குப் பின்னர் மீண்டும் சிறப்பு அதிரடிப் படைக்கு உதவியாக பிஎஸ்எஃப் (எல்லை பாதுகாப்புப் படை) அழைக்கப்பட்டது. நான் அப்போது பிஎஸ்எஃப்பில் காஷ்மீர் கமிஷனராக இருந்தேன். பிஎஸ்எஃப் ஐஜி என்னை அழைத்து, தமிழ்நாட்டில் இருந்து கேட்கிறார்கள் என்றார். அந்த ஆபரேசனுக்கு கமிஷனர் நிலையில் இருக்கும் ஒருவர் போக வேண்டியதில்லை, ஒரு கமெண்டர் அனுப்பினால்  போதும். இருந்தாலும் வீரப்பன் வேட்டை மீது எனக்கிருந்த ஆர்வத்தால், என் தலைமையில் ஒரு ஏர்கிராப்ட்டுக்கு 150 வீரர்கள் வீதம், மூன்று ஏர்கிராப்டுகளை அழைத்து வந்தோம்.

அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக திரு கருணாநிதி இருந்தார். மரியாதை நிமித்தம் அவரை சென்று சந்தித்தேன். அப்போது கருணாநிதி அவர்கள்,  “சிறப்பு அதிரடிப் படைக்காக உங்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், சிலர் வேண்டாம் என்று அபிப்ராயப்பட்டதால் அழைக்கவில்லை” என்றார். நான் பதில் எதுவும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே விடைபெற்று வந்துவிட்டேன்.

காட்டுக்குள் சென்ற பின்னர் மீண்டும் ஒரு என்கவுண்டர். அந்த என்கவுண்டரில் சேத்துக்குழி கோவிந்தன் நெஞ்சில் ஒரு புல்லட் பாய்ந்தது. ஆனால், கிட்டதட்ட நான்கு லட்சம் ரூபாய் பண்டிலை அவன் நெஞ்சோடு சேர்த்து கட்டியிருந்ததால் அந்த குண்டு பணத்தை துளைத்து செல்லவில்லை. அதுவே ஏகே 47ஆக இருந்திருந்தால் அன்று சேத்துக்குழி கோவிந்தன் கதை முடிந்திருக்கும்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி மாறி ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் நீங்கள் சென்னை கமிஷனர் ஆகிவிட்டீர்கள். மீண்டும் சிறப்பு அதிரடிப் படைக்கு ஏன் சென்றீர்கள்?

மேடம் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனதும் என்னை சென்னை கமிஷனராக அழைத்தார். ஆபரேசனை முடிக்காமல் திரும்பக்கூடாது என்பதால் நான் கிட்டதட்ட மறுத்துவிட்டேன். ஆனால், அவரிடம் அப்படி மறுப்பது சிரமம். சென்னைக்கு உங்களுடைய தேவை அவசியம், நீங்கள் வந்துவிடுங்கள் என்றுவிட்டார். இரண்டு ஆண்டுகள் சென்னை கமிஷனராக இருந்தேன். பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் வீரப்பன் வேட்டை சிறப்பு அதரடிப் படைக்கே சென்றுவிட்டேன்.

அதற்குக் காரணம், இதனிடையே ஒரு சம்பவம் நடந்தது. திருமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்ற காவல்துறை அதிகாரி. இவர் முதலமைச்சர் பாதுகாப்புப் படையில் இருந்தார். மிக திறமையான அதிகாரி. அவரை நான் என் ஆர்வத்தில், மேடம் ஜெயலலிதாவிடம் ரிக்வெஸ்ட் செய்து, வீரப்பன் வேட்டை சிறப்பு அதிரடிப்படைக்கு அனுப்பினேன். ஆனால், துரதிஷ்டவசமாக ஒரு என்கவுண்டரில் அவர் கண்ணில் குண்டு பாய்ந்து மரணமடைந்துவிட்டார். அது எனக்கு பெரும் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அன்று இரவு நான் சாப்பிடவில்லை, மிக இறுக்கமாக இருந்தேன் என்று என் மனைவி சொன்னார். ஏனெனில், செந்தில் மரணத்துக்கு ஏதோ ஒரு வகையில் நான் காரணமாகிவிட்டேன் என்ற எண்ணம் என்னை மிகவும் பாதித்தது. எனவேதான், சென்னை கமிஷனர் பதவியில் இருந்து விடுபட்டதும், சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதுபோல், மீண்டும் சிறப்பு அதரடிப் படைக்கே சென்றுவிட்டேன்.

அதன்பின்னர், பத்தாவது மாதத்தில் வீரப்பன் வேட்டை ஆபரேசன் முடிந்தது.

ஆனால், வீரப்பனை என்கவுண்டர் செய்யவில்லை; அது ஒரு போலி என்கவுண்டர். வீரப்பனுக்கு மோரில் விஷம் கலந்துகொடுத்து கொன்றுவிட்டார்கள் என்றெல்லாம் தகவல்கள் வெளியானது. உண்மையில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...