காமராஜரின் 121ஆவது பிறந்த நாள் இன்று.
காமராஜர் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர் காலத்திற்கு பின்னரும் சரி பலரால் பலமுறை கேட்கப்பட்ட கேள்வி… ‘காமராஜர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?’
காமராஜர் காலத்தில் கல்யாண வயதைக் கடந்தும் அவர் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது குறித்து அவருடன் நெருங்கி பழகிய பலரது மனத்திலும் இந்த கேள்வி இருந்தது. ‘வயசாகி கொண்டே போகிறதே… ஏன் காமராசர் இன்னும் திருமணம் செய்யவில்லை?’ என்கிற கேள்வி அன்று தமிழ்நாடு அரசியலிலும் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், பொதுக்கூட்டங்களில் காமராஜர் பேசும்போது, அவர் மீதுள்ள அதீத அன்பால், மக்கள் அவரிடமே இந்த கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள். ‘ஒரு கல்யாணம் பண்ணிக்கலாமில்லையா ஐயா?’ என்ற மக்கள் வேண்டுகோளுக்கு, ‘இப்ப அதுக்கு என்ன அவசரம்னேன்’ என்று தன் வழக்கமான ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்து வந்தார், காமராஜர்.
அப்போதைய பல தலைவர்களும் கூட பலமுறை காமராஜரை திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தி வந்தார்கள். யாரிடமும் காரணம் சொல்லாமலே, ‘என்ன அவசரம்னேன்’ என தன் திருமண விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தார் காமராஜர்.
ஒரு கட்டத்தில் இந்தக் கேள்வியை அவரிடத்தில் கேட்க யாருக்கும் துணிவு வரவில்லை. எல்லோருமே அமைதியாகி விட்டனர்.
காமராஜர் நண்பர்களுக்கும் மக்களுக்கும் இந்த கவலை இருக்கும்போது அவரை பெற்ற தாய்க்கு இல்லாமல் இருக்குமா?
தன் ஒரே மகனுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று காமராஜரின் தாயார் ஆசைப்பட்டார். பலமுறை காமராஜரிடம் சொல்லி, அவர் கேட்காத நிலையில், கடைசியாக ஒரு முயற்சியில் இறங்கினார். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
அந்த முயற்சி என்ன? எப்படி தோல்வியில் முடிந்தது?
இந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறது, எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் எழுதியுள்ள ‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்னும் புத்தகம். இதில் ஒரு கட்டுரை காமராஜர் பற்றியது.
ஸ்டெல்லா புரூஸ் தந்தையும் காமராஜரும் ஒரே ஊர்க்காரர்கள், நெருங்கிய நண்பர்கள். சிறுவயதில் இருவரும் அரசியலில் ஈடுபட்டு சேவை செய்ய விரும்புகிறார்கள். அதற்கு குடும்பம் ஒரு தடையாக இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது. எனவே, திருமணம் செய்துகொள்ளக்கூடாது என முடிவு செய்கிறார்கள். ஒருவருக்கொருவர் இதனை மீறமாட்டேன் என உறுதி செய்துகொள்கிறார்கள்.
ஸ்டெல்லா புரூஸ் குடும்பம் விருதுநகரில் மிகவும் செல்வாக்கான குடும்பம். நிலபுலன்கள், வியாபாரம் என அக்காலத்திலேயே பெரும் பணக்காரர் அவரது தாத்தா. இவ்வளவு வசதி இருக்கிறது; ஆனால், பையன் திருமணம் செய்துகொள்ளாமல் அடம்பிடிக்கிறானே என அவருக்கு வருத்தம். வீட்டில் எல்லோரும் வற்புறுத்தி சொல்லிப் பார்த்தும் ஸ்டெல்லா புரூஸ் தந்தை கேட்கவில்லை. கடைசியில் அவரது தாத்தா, ‘காமராஜ் சொன்னால் இவன் கேட்பான்’ என்று காமராஜரை அழைத்து பேசுகிறார். அவ்வளவு பெரிய மனுஷன் கேட்டதால் முடியாது என காமராஜரால் மறுக்க முடியவில்லை. ஸ்டெல்லா புரூஸ் தந்தையிடம் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி காமராஜரே வற்புறுத்துகிறார். காமராஜர் சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் அவரும் திருமணம் செய்துகொள்கிறார்.
காமராஜர் வீட்டிலும் இதே கதை. காமராஜர் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என அடம்பிடிப்பது குறித்து அவரது அம்மாவுக்கு ஏகப்பட்ட வருத்தம். எல்லோரும் சொல்லிப் பார்த்தும் காமராஜர் கேட்கவில்லை. இந்நிலையில், காமராஜர் கேட்டுக்கொண்டதால் ஸ்டெல்லா புரூஸ் தந்தை கல்யாணம் செய்துகொண்ட தகவல் கேள்விப்பட்டு, அவர் அம்மாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. உடனே, ‘ஸ்டெல்லா புரூஸ் தந்தை சொன்னால் இவன் கேட்பான்’ என்று அவரை அழைத்துப் பேசுகிறார், காமராஜர் அம்மா.
அவரும், ‘காமராஜிடம் நான் சொல்கிறேன்; நீங்கள் கவலைப்படாதீர்கள்’ என உறுதியளிக்கிறார். ஆனால், ‘திருமணம் செய்துகொண்டதால் நான் தான் கொண்ட லட்சியத்தில் இருந்து விலகிவிட்டேன். அவனாவது செய்துகொண்ட உறுதிபடி அரசியல் சேவை செய்யட்டும்’ என திருமணம் பற்றி காமராஜருடன் பேசாமலே இருந்துவிடுகிறார். இது ரொம்பப் பின்னால் காமராஜருக்குத் தெரிய வருகிறது. ஆனால், அவருக்கு ஸ்டெல்லா புரூஸ் தந்தை நடந்துகொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியே.
தான் வற்புறுத்தி இருந்தால் ‘காமராஜ் திருமணம் செய்து கொண்டிருக்கக்கூடும்’ என்று ஸ்டெல்லா புரூஸிடம் அவர் தந்தை பிற்காலத்தில் சொல்லி இருக்கிறார்.
ஸ்டெல்லா புரூஸூம் கல்யாண வயது கடந்தும் திருமணம் செய்யாமல், வேலைக்கும் போகாமல் சுற்றிக்கொண்டிருக்க, அதுபற்றி கவலைப்பட்ட அவரது தந்தை, ‘காமராஜ் சொன்னால் இவன் கேட்பான்’ என்று அவரிடம் சொல்ல, காமராஜர், ஸ்டெல்லா புரூஸை அழைத்து பேசியதும் பிற்காலத்தில் நடந்திருக்கிறது. காமராஜர் சொல்லிப் பார்க்கிறார். ஸ்டெல்லா புரூஸ் வாயைத் திறக்காமல் உட்கார்ந்திருக்கிறார். “அது சரி… உனக்குப் பிடிக்கலேன்னா யார் என்ன செய்ய முடியும்?” என்று முடித்து விடுகிறார், காமராஜர்.
ஸ்டெல்லா புரூஸ் தந்தை வற்புறுத்தி, காமராஜரும் திருமணம் செய்துகொண்டிருந்தால்… தமிழக அரசியல் சரித்திரத்தில் ‘12பி’ திரைப்படம் போல் வேறு மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கவும் சாத்தியம் உள்ளது.