உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறது இந்திய அணி.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் ஏற்கெனவே கடந்த ஆண்டில் நடந்த 4 போட்டிகளின் இறுதியில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் கடந்த ஆண்டில் தடைபட, அது இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அப்படி தள்ளி வைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டி வரும் 1-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவுக்கு 2 சிக்கல்கள் உள்ளன. முதல் சிக்கல் அவர் இல்லாத நிலையில் அணிக்கு யார் தலைமை தாங்குவார் என்பது. இரண்டாவது சிக்கல், அவருக்கு பதில் யார் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்பது.
இப்போதைய இந்திய அணியைப் பொருத்தவரை, அதன் துணைக் கேப்டனாக பும்ரா உள்ளார். அதனால் இயல்பாக அவரிடம்தான் கேப்டன் பதவி செல்லவேண்டும். ஆனால் அவர் அனுபவமற்றவர் என்பதால், இந்தியாவுக்கு ஏற்கெனவே ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள ரிஷப் பந்தை தலைமையேற்க வைக்கலாமா என்று அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.
இந்த இருவரில் யார் கேப்டன் என்பது போட்டி நடக்கும் நாளில்தான் தெரியவரும்.
இந்த சவாலையாவது ஓரளவுக்கு சமாளித்து விடலாம். ஆனால் ரோஹித் சர்மா இல்லாத நிலையில், அவருக்கு பதில் யாரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கே.எல்.ராகுல் ஏற்கெனவே காயத்தால் ஆட முடியாத நிலையில், சுப்மான் கில்லுடன் இணைந்து யார் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இந்த சூழலில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்:
மயங்க் அகர்வால்:
ரோஹித் சர்மாவுக்கு கொரோனா என்றதும் மயங்க் அகர்வாலை உடனடியாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளது இந்திய தேர்வுக்குழு. 31 வயதான மயங்க் அகர்வால், ஏற்கெனவே சில போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர்தான்.
இந்தியாவுக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 4 சதங்கள் உட்பட 1,488 ரன்களைக் குவித்துள்ளார். அதனால் ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக முதலில் அவரது பெயர்தான் அடிபடுகிறது. ஆனால் கடந்த 2020-21-ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு பெரிய அளவில் சாதிக்காதது, இவரது மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. அத்துடன் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையை ஓரளவுக்கு பழகிய பிறகே அங்கு வீரர்களால் ஆட முடியும்.
ஆனால் போட்டி நடப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக அந்நாட்டுக்கு செல்லும் மயங்க அகர்வாலால் சரியாக ஆட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
கே.எஸ்.பரத்:
உள்ளூரில் நடக்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அனுபவம் உள்ள கே.எஸ்.பரத், இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்தில் லீகெஸ்டர்ஷெயர் அணிக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 70 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 43 ரன்களையும் அவர் குவித்துள்ளார்.
இப்படி தான் ஆடிய 2 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாக உள்ளது. ஆனால் இதுவரை இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில்கூட ஆடவில்லை என்பது இவரது மைனஸ் பாயிண்ட்.
ஹனுமா விஹாரி:
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார் ஹனுமா விஹாரி. தொடக்க ஆட்டக்காரருக்கு தேவையான பொறுமையைக் கொண்ட இவர், தடுப்பு ஆட்டத்தில் வல்லவர்.
அதனால் பந்து சற்று பழையதாகும் வரை தடுப்பாட்டத்தில் ஈடுபடும் விதமாக இவரை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாக உள்ளது. அதே நேரத்தில் இவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினால் இந்தியாவின் மிடில் ஆர்டர் பாதிக்கப்படுமே என்ற கவலையும் உள்ளது.
சேதேஸ்வர் புஜாரா:
இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்லும் முன்பே அந்நாட்டுக்கு சென்று அங்கு நடக்கும் கவுண்டி போட்டிகளில் ஆடியுள்ளார் புஜாரா. இதனால் அந்நாட்டின் சீதோஷண நிலையும், ஆடுகளங்களும் புஜாராவுக்கு அத்துப்படி. எனவே புஜாராவை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினால் என்ன என்ற கேள்வியும் தேர்வாளர்கள் மனதில் உள்ளது.
பொதுவாக தொடக்க ஆட்டக்காரர்களில் யாராவது முதல் சில ஓவர்களில் அவுட் ஆனால், புஜாராதான் 3-வது பேட்ஸ்மேனாக சென்று நிலைமையை சமாளிப்பார். இந்த சூழலில் அவரையே தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கலாம் என்பது கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாகவும் உள்ளது. ஆனால் அவரும் சில போட்டிகளாக இந்தியாவுக்கு ரன்களை குவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ரோஹித் சர்மா ஆடாத நிலையில், மேலே கண்ட 4 வீரர்களில் யாராவது ஒருவர்தான் சுப்மான் கில்லுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும். அந்த வீரர் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.