சோம வள்ளியப்பன்
சென்னை புத்தகக் காட்சியின் மூன்றாம் நாள்… மாலை 5 மணி வாக்கில் போன போது ஸ்டால்களில் கூட்டம் இல்லை. ஒரு சில வாசகர்கள் அடையாளம் கண்டு புன்னகை பூத்தார்கள். வணக்கம் சொன்னார்கள். சிலர் செல்பி எடுத்துக்கொண்டார்கள்.
புத்தகங்களை பார்த்துவிட்டு காபி குடிக்கும் இடத்திற்கு வந்தேன். ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. கையில் நான் வாங்கி இருந்த கந்தரவன் முழு சிறுகதை தொகுப்பு இருந்தது. கிடைத்த நாற்காலியில் அமர்ந்து மேஜை மேல் புத்தகத்தை வைத்துவிட்டு காப்பியை குடிக்க ஆரம்பித்தேன். அதே மேஜையில் ஏற்கனவே அமர்ந்து பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர், புத்தக அட்டையில் இருப்பது யார் என்று கேட்க, விவரம் சொன்னேன்.
அதன் பிறகு தற்போது ஒரு டிரேடிங் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் நண்பர் ஒருவர் வந்தார். அவரது வேலை பற்றி விசாரித்த நான், “45 வயதுக்கு மேல் சிறிய நிறுவனங்களில் வேலை செய்யக்கூடாது. உங்களுக்கு கொடுக்கிற சம்பளம் ஒரு சுமையாக இல்லாத பெரிய நிறுவனங்களாக பார்த்து சேர்ந்து விட வேண்டும்” என்று சொன்னேன்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த கந்தர்வன் புத்தகம் குறித்து விசாரித்த அந்த நபர், முகத்தில் சற்று வியப்புடன் “சார் உங்க பேர் என்ன?” என்று கேட்டார்.
ஏன் கேட்கிறீர்கள் என்று சற்று தயங்கியவன், பின் சோம வள்ளியப்பன் என்றேன். அதன் பிறகு அவர் பல விஷயங்கள் கூறினார். அதன் சாராம்சம்:
அவர் என்னுடைய இட்லியாக இருங்கள் புத்தகம் படித்த பிறகு எமோஷனல் இன்டலிஜென்ஸ் 2.0, சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?, ஆல் த பெஸ்ட் போன்ற புத்தகங்களை படித்திருக்கிறார். என்னை சந்திக்கிற நேரம் காலில் விழுந்து விடவேண்டும் என்று நினைத்திருந்தேன் என்று சொன்னார். காரணம், அதுவரை பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் என்னுடைய இந்த புத்தகங்களை படித்த பிறகு அவருடைய மனவோட்டத்தில் மாற்றம் வந்ததாக சொன்னார். பெரும் கோபக்காரராக இருந்த அவர், இட்லியாக இருங்கள் புத்தகத்தால் மனமாற்றம் அடைந்ததாக கூறினார்.
நான் அவருக்கு ஏதும் பதில் சொல்லவில்லை. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன் என்ன நினைத்தாரோ, உடனடியாக வீட்டில் இருந்த மகளை அலைபேசியில் அழைத்து, வீட்டில் இருக்கிற என்னுடைய புத்தகங்களை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொன்னார். வந்த படத்தை காட்டினார்.
மகிழ்ச்சியாக இருந்தது.
ஜனவரி 6, சனிக்கிழமை… வாகனத்தில் இருந்து இறங்கி நுழைவாயிலுக்குள் போகிறபோது எவரையும் இடிக்காமல் சிரமப்பட வேண்டிய அளவு கூட்டம். சிலர் கைகளில் புத்தகங்கள் இருந்த கனமான பைகள். வேறு சிலர் கைகளில் சின்ன வேர்கடலை பொட்டலம். அவித்த வேர்க்கடலை வாசம் காற்றில் பரவி, நடப்பவர் நாசியில் படர்ந்தது. மக்கள் சுதந்திரமாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சுற்றி திரிந்து கொண்டிருந்தார்கள். பல குடும்பங்கள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்றும் பல வாசகர்களை சந்திக்க முடிந்தது. நேற்று சந்தித்திருந்த வாசகர் கையில் சுமார் 8, 10 புத்தகங்கள். பில் போட்டுக் கொண்டிருந்தார். எல்லாம் என்னுடைய புதிய புத்தகங்கள். நேற்று உணவகத்தில் சொன்னதை இன்று நான் எதிர்பாராத நேரம் செய்தார். பதறிப்போனேன்.
“நான் இதுவரை எவர் காலிலும் விழுந்ததில்லை. நீங்கள் எனக்கு பலவற்றை புத்தகங்கள் மூலம் சொல்லிக் கொடுத்தவர் ” என்றார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அலைபேசி எண் வாங்கிக் கொண்டார்.
இரு இளம் பெண்கள் ஒரே ஒரு சுஜாதா புத்தகத்தை மட்டும் பில் போட கொடுக்க, ஆர்வ மிகுதியில் புத்தகத்தின் பெயரை எட்டிப் பார்த்தேன். ஜீனோ.
“நல்ல புத்தகம். இதற்கு முன் சுஜாதா படித்திருக்கிறீர்களா ?” என்று கேட்டேன். இதுதான் முதல் முறை என்றார்கள். ”இனி விட மாட்டீர்கள்” என்றேன்.
சென்னையை ஒரு கலாச்சார நகரம் என்பார்கள். அந்தப் பரந்த வெளியில், மக்கள் குடும்பம் குடும்பமாகவும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகவும், அமைதியாக, சந்தோஷமாக இயல்பாக சுற்றிக் கொண்டிருந்ததையும் பேசிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டும், புத்தகங்கள் வாங்கிக்கொண்டும் இருந்ததை பார்த்தபோது அது உண்மைதான் என்று தோன்றியது.
11.1.24… கூட்டம் இல்லை. இல்லை இல்லை. கூட்டமே இல்லை. அதனால் வந்தவர்கள பொறுமையாக சுற்றிப் பார்க்க, புத்தகங்களை புரட்டித் தேடி பார்க்க, வாங்க வாய்ப்பான நாள்.
என்னுடைய புத்தகங்கள் மிக அதிகமாக இருக்கின்ற கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு போவதற்கு முன்பே, சத்யா என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருக்கும் என் புத்தகங்களை பார்க்க போன வழியில், இரு இளைஞர்கள் ஓடி வந்தார்கள். ரயில்வேயில் பணிபுரிபவர்கள்.
“நாங்கள் யூட்யூபில் ஆப்ஷன் டிரேடிங் தில் பெரும் பணம் பார்த்த, வழி காட்டுகிற PR சுந்தர் வீடியோக்கள் பார்ப்போம். கூடுதல் விவரம் தெரிந்து கொள்ள நண்பர்களிடம் விசாரித்தால், அவர்கள் உங்கள் புத்தகங்களைத்தான் படிக்க சொல்லுகிறார்கள்” என்று சொல்லி, விடாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
போகும் வழியில் பார்த்த முகமாக இருக்கிறதே என்று தயங்கி நின்றேன். வேட்டியில் வந்திருந்த அவர், ‘ வாசிப்பது எப்படி’ புத்தகத்தின் ஆசிரியர் செல்வேந்திரன். அவர் இட்லியாக இருங்கள் புத்தகத்தின் பிரியமான வாசகர் என்று சொன்னது போக, மற்றொரு இன்ப அதிர்ச்சியான தகவலையும் கொடுத்தார். அது, கமலஹாசன் வீட்டு நூலகத்தில் என்னுடைய 30க்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன என்ற தகவல். அவருடைய பணிக்காக வாழ்த்திவிட்டு நகர்ந்தேன். (தகவலுக்காகவும்தான்)
82 வயதாகும் மூத்த எழுத்தாளர் அரு அழகப்பனை சந்திக்க முடிந்தது. கடந்த 32 ஆண்டுகளாக இடைவிடாது சென்னை புத்தகக் காட்சிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாராம். என்னை வாழ்த்தினார். பாதம் பணிந்து வாழ்த்து பெற்றேன்.
கிழக்கில் நின்றுகொண்டு வேறு சிலரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வேட்டி சட்டை, கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் திருநீருடன், உடன் தன் மகளை கைப்பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்த ஒருவர், திடுமென என்னை பார்த்ததும் முகம் மலர்ந்தார். வேகமாக வந்தார், கால் தொட்டு வணங்கி நிமிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். “உங்களை சந்திப்போம் என்று நினைக்கவே இல்லை, என்ன பாக்கியம்” என்றார்.
அவரும் இட்லியாக இருங்கள் புத்தகத்தில் தொடங்கி, எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 என என்னைத் தொடர்ந்து படிக்கிறவர்.
சொந்த ஊர், சீர்காழி. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவர். அவர் மகளும் என் புத்தகங்கள் படித்திருப்பதாக மகிழ்வோடு சொல்ல, “சரி. மற்ற புத்தகங்களை பாருங்கள்” என்று அவர்களை அரங்குக்குள் அனுப்பிவிட்டு நான் வேறு ஒரு வாசகருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய அலைபேசியை கொண்டுவந்து என்னிடம் கொடுத்த சீர்காழிக்காரர், “எங்க மருமக உங்க கிட்ட பேசணுமா சார். அயர்லாந்துல இருக்காங்க. என் பையனும் மருமகளும் உங்களுடைய பெரிய வாசகர்கள்” எனச் சொல்லிக் கொடுக்க, வாட்ஸ் அப் காலில் பேசினார். இல்லை.கொட்டித்தீர்த்து விட்டார். என்னுடன் பேசியது தெரிந்தால் கணவர் மிகவும் மகிழ்வார் என்றார்.
எப்படிப்பட்ட மாமனார்; எப்படிப்பட்ட மருமகள்!! எப்படிப்பட்ட குடும்பம்! எழுத வந்ததற்காக மிகவும் மன மகிழ்ந்த தருணங்களில் எதுவும் ஒன்று.
அடுத்து வந்த இரு பெரியவர்களில் ஒருவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் சந்திரமௌலி. அவருடைய உறவினரோடு வந்தவர் அள்ள அள்ளப் பணம் 1 பங்குச் சந்தை அடிப்படைகள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னோடு மகிழ்வாக சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த விட்டு சென்றார்கள்.
சிங்கப்பூர் சென்ற போது சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகளம் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு பேசிய அதே மாலை மற்றொரு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் ஐயப்பன் மாதவனையும் இன்று சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி.
அவருடைய புத்தகங்களை காட்டினார். அவற்றில் ஒன்று, உரைநடை கவிதை.
இப்படி கூட எழுதலாம் என்று அவர் சொன்ன போது, கவிஞர் வைரமுத்து மேடைகளில் பேசுவது எல்லாமே இப்படி இருக்கிறது என்று நினைத்து பார்த்தேன். அவரிடமும் சொன்னேன் ஆமோதித்தார்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் சிங்கப்பூர் எழுத்தாளருடைய படைப்புகள் ஒரு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விருந்தினர் புத்தகத்தில் எழுத கேட்டார்கள். புத்தகங்களை மட்டுமல்ல அவற்றை காட்சிப்படுத்த வந்திருக்கும் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆண்டி அப்பன் உட்பட மற்றவர்களையும் பாராட்டி விட்டு வந்தேன்.
12.1.24… இன்றும் கூட்டம் குறைவுதான். நான் கிழக்கு பதிப்பக வாசலில் புத்தகங்களுக்கு பில் போடுபவர் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். ஆரம்பமே ஜோராக இருந்தது.
அங்கிருந்து பார்த்தபோது அரங்கத்துக்குள் இருந்த ஒரு 35 வயதுக்காரர் என்னுடைய புத்தகங்கள் இருக்கும் ரேக்கை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார். பிறகு, அள்ள அள்ளப் பணம் 6,7, 8, 9 புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து பில் போடுபவரிடம் கொடுத்தார்.
அவற்றை எழுதிய ஆசிரியர் நான், அங்கேதான் அமர்ந்திருக்கிறேன் என்பதை அவர் கவனிக்கவில்லை என்று நினைத்தேன். சில வினாடிகள் போன பிறகு என்னைப் பார்த்தார். பின், பார்வையை அப்படியே நகர்த்தி பில் போடுகிறவர் கையில் இருந்த புத்தகங்கள் பக்கம் கொண்டுபோனார். மீண்டும், பார்வையை என் பக்கம் கொண்டுவந்து, தலையை மேலும் கீழும் ஆட்டி, ’அது நான் தானா?’ என்பது போல கண்களாலேயே வினவினார். எல்லாம் விஸ்பரூபம் திரைப்படத்தில் நமாஸ் செய்ய கைக்கட்டு அவிழ்க்கப்பட்ட கமலஹாசன் சண்டை செய்த வேகத்தில், ஓரிரு வினாடிகளில் நடத்து முடிந்தது.
கவுண்டனில் இருந்து நான் எழுந்துவிட்டேன். ” உங்கள் பார்வை, இந்த ’பிரச்னையை’ செய்தது நீதானா?’ என்று கேட்பது போலல்லவா இருக்கிறது!” என்று நான் சொன்னதும், பில் போட்டுகொண்டிருந்தவர் சத்தமாக சிரித்துவிட்டார். பின்பு அவரிடம் புத்தகங்களைக் கொடுத்தபடி, ”அ அ ப வரிசையில் மொத்தம் ஒன்பது புத்தகங்கள்” என்றார் பில் போடுபவர்.
“தெரியும். அதெல்லாம் ஏற்கனவே படிச்சிட்டேன், வச்சிருக்கேன்’ என்றவர், என்னிடம் புத்தகங்களில் கையெழுத்து வாங்கவில்லை. போய்விட்டார். வாசகர்கள் பலவிதம்.
கிழக்கிலிருந்து கிளம்பி ஜீரோ டிகிரி பக்கம் போனேன். வழியில் இரண்டு இனிமையான சந்திப்புகள். முதலாவது சிரிப்பு யோகாவை மிக வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கும் சிரிப்பானந்தாவை சந்தித்தேன். சற்று மெலிந்திருக்கிறார் ஆனால் சிரிப்பு அப்படியே வீரியம் குறையாமல்.
அடுத்த சந்திப்பு, திருமதி தாயம்மாள் உடனானது. இவர்கள் ஒரு பேராசிரியர். ஒரு ஆண்டு விடாமல் கணவர், க.ப. அறவாணன் நூல்களை விற்பனை செய்யும் தமிழ்கோட்டம் என்ற அவர்களது ஸ்டாலில் அமர்ந்திருப்பார். சிரித்த முகத்தோடு இருப்பார். பிரியமாக பேசுவார். சுமார் எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு புத்தகக் காட்சியில் என்னை அடையாளம் கண்டு, அப்போது நான் தினமணியில் எழுதிவந்த நடுப்பக்க கட்டுரைகள் குறித்து பாராட்டி பேசி, அறிமுகமானவர். அதுவரை அறவாணன் பற்றி அதிகம் அறிந்திராத என்னை கட்டாயப்படுத்தி, ஒரு சிறிய நூலை படிக்கச் சொல்லி கேட்டார். விலை கொடுத்து வாங்கிப் படித்தேன். மிக அற்புதமான நூல். தமிழன் அடிமையானது ஏன்?
பசித்தது. வெளியில் வந்தேன். மேடையில் பாரதி பாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார். நாற்காலிகள் 90% நிறைந்திருந்தன. உணவு ஸ்டாலில் கூட்டம். வடை கட்லெட் எதுமில்லை. தீர்ந்துவிட்டது என்றார். புத்தக காட்சியில் கூட்டமில்லையே! இவை தீர்ந்துவிட்டனவே என்றேன். இங்க கூட்டம் என்றார். சுட சுட கிரில் செய்த சீஸ் சேண்ட்விட்ச் தக்காளி சாஸுடன் சாப்பிட்டேன். 90 ரூபாய்.
விற்பனை, வியாபாரமெல்லாம் இரண்டாம்பட்சம்தான். புத்தகக் காட்சி எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கிறது. எவ்வளவு விதவிதமான நல்ல மனிதர்கள்ளை பார்க்க, அவர்களுடன் உரையாட, பகிர்ந்துகொள்ள முடிகிறது. எல்லாம் எழுதியதால் ஆய பயன் என நினைத்துக்கொண்டேன்.
புத்தகங்கள் வாழ்க.