நம்மில் பலருக்கு தவிர்க்க முடியாத விஷயம் காபி குடிப்பது. காலையில் எழுந்து காபி குடித்தால்தான் பலருக்கு வேலையே ஓடும். அந்த அளவுக்கு காபிக்கு அடிமையாகி இருப்பார்கள்.
அடிக்கடி காபி குடிப்பது நல்லதில்லை என்று சொன்னாலும், நாளொன்றுக்கு ஐந்து அல்லது ஆறு முறை காப்பி குடிக்கும் மக்களும் இருக்கிறார்கள். காபி குடிப்பது தவறில்லை. ஆனால் எந்த நேரத்தில் காபி குடிப்பதால் பாதிப்பு ஏற்படாதோ அந்த நேரத்தில் காபி குடிக்க வேண்டும். காபி குடிப்பதற்கெல்லாம் நேரமா என்று கேட்பவர்களுக்காக சில டிப்ஸ்.
மாலை நேர காபி தூக்கத்தை கெடுக்கும்
மாலை நேரங்களில் பெரும்பாலோர் காபி எடுத்துக்கொள்வது உண்டு. மாலைநேரம் கடந்துவிட்ட பிறகு காபி குடித்தால், அது உங்கள் இரவுநேர தூக்கத்தை கெடுக்கும். நீங்கள் தினமும் இரவு 8 மணிக்கு தூங்குபவராக இருந்தால் நீங்கள் எங்கு இருந்தாலும் என்ன வேலை செய்துகொண்டு இருந்தாலும், இரவு 8 மணி ஆனவுடன் உங்களுக்கு தூக்கம் வரும். அதேபோல தான் உணவு உட்கொள்வதும். தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் காபி எடுத்துக்கொள்வது உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும்.
காலை காபி மன அழுத்தத்தை குறைக்கும்
“Cortisol” என்பது நம் உடலில் உள்ள “ஸ்ட்ரெஸ் ஹார்மோன்”. இந்த கார்டிசோல் ஹார்மோன்தான் நம் உடலில் உள்ள எனர்ஜி அளவுகளையும், ஸ்ட்ரெஸ் அளவுகளையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசோல் அளவுகள் பொதுவாகவே காலை நேரங்களில் அதிக அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. காலை எழுந்தவுடன் காபி எடுத்துக்கொள்வது நம் மன அழுத்தத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதிய வேளை காபி ஆற்றலை அதிகரிக்கும்
மதிய வேளையில், ஒரு மணியிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ளும் காபி, நம் ஆற்றலை அதிகரிக்கும். . “உண்ட மயக்கம்” என்று மதிய நேரங்களில் பெரும்பாலோருக்கு தூக்கம் வருவது இயல்புதான். இந்த நேரங்களில் காப்பி எடுத்துக்கொள்வது ஆற்றலை அதிகரிக்கத்தான். மதிய வேளையில் காபி உட்கொள்ளும் நபராக நீங்கள் இருந்தால் முடிந்த வரையில், அரைக் கப் காபி எடுத்துக்கொள்வது நல்லது என்று சொல்கின்றனர்.
சரி, எந்த நேரம் காப்பி உட்கொள்வதற்கு சரியானது?
அதை, நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இப்படி சொல்வதற்கு காரணம், பெரும்பாலானோர் ஒரே மாதிரியான அலுவலக நேரத்தை பின்பற்றுவதில்லை. இரவு நேரம் பணியாற்றுபவர்களும் இருக்கின்றனர். அவர்களது தூக்க நேரம், உணவு உட்கொள்ளும் நேரம் அனைத்துமே வேறுபடும். பெரும்பாலானோர் காப்பி எடுத்துக்கொள்ளும் நேரத்தைத் பொருத்துதான் இவை கூறப்பட்டுள்ளது. காப்பி பருகுவதற்கான முக்கிய காரணம் புத்துணர்ச்சி மற்றும் எனர்ஜிக்காக தான். தேவையற்ற நேரங்களில் காப்பி உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.