மாளிகபுரம் ( Malikappuram மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
மலையாள திரையுலகில் ஒரு படம் 50 கோடி வசூலித்தாலே வெற்றிதான். மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களே 100 கோடி வசூலை எட்ட படாத பாடுபடும். இந்த சூழலில் 2 குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாக கொண்டு எடுக்கப்பட்ட மாளிகபுரம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தியேட்டர்களில் பெரும் வெற்றிபெற்ற அந்தப் படம் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
படத்தின் நாயகி 8 வயதான ஒரு பெண் குழந்தை. சபரிமலைக்கு செல்லவேண்டும், ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என்பதுதான் அந்த குழந்தையின் மிகப்பெரிய கனவு. அவளை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதாக கூறும் அப்பா, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துவிடுகிறார். அப்பா இல்லாத நிலையில் தன் வயதில் உள்ள சிறுவனின் உதவியுடன் யாருக்கும் சொல்லாமல் சபரிமலைக்கு கிளம்புகிறாள் அந்தப் பெண். வழியில் அவளைக் கடத்த ஒருவன் திட்டமிடுகிறான். ஆபத்தான நிலையில் அவளையும், அவள் நண்பனையும் காப்பாற்ற ஒருவர் துணைக்கு வருகிறார். அவர் யார்? அவரால் குழந்தைகளை காத்து பத்திரமாக சபரிமலைக்கு கொண்டு போக முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. தமிழர்களை தவறாக காட்டினார்கள் என்ற சர்ச்சையும் இந்த திரைப்படத்தின் மீது உண்டு.
பக்தி, ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படத்தை குழந்தைகளுடன் வீக் எண்டில் பார்க்கலாம். இப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் உண்டு.
சர்கஸ் (Cirkus இந்தி) – நெட்பிளிக்ஸ்
ரன்வீர் சிங் இரட்டை வேடத்தில் நடித்து சில நாட்களுக்கு முன் தியேட்டர்களில் வெளியான Cirkus திரைப்படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஒரே விதமான உடல் அமைப்பைக் கொண்ட 2 சகோதரர்கள் சிறுவயதில் பிரிந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் ஒரே நகரில் இருக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர்களின் உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்களே இப்படத்தின் மையக் கரு.
நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் தியேட்டரில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
எங்க ஹாஸ்டல் (தமிழ்) – அமேசான் பிரைம்
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற வெப் தொடரின் ரீமேக்தான் ‘எங்க ஹாஸ்டல். சதீஷ் சந்திரசேகர் இயக்கியுள்ள இந்த வெப் தொடர் அமேசான் பிரம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் ஹாஸ்டல் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, அது அவர்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றுகிறது என்பதை இந்த தொடர் நகைச்சுவையாக சொல்கிறது.
இந்தத் தொடரில் ஆபாச வசனங்கள் அடிக்கடி ஒலிக்கும், சில காட்சிகள் ஏற்கனவே வந்த திரைப்படங்களில் காட்டியது போல் இருக்கும். அந்த எச்சரிக்கையுடன் இந்த தொடரை அணுகுவது நல்லது.
ஸ்காம் 1992 (Scam 1992 -இந்தி வெப் சீரிஸ்) – ஜீ 5
இந்திய பொருளாதாரத்தில் இப்போது அதானியின் நிறுவன பங்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததால் இந்திய ஷேர் மார்க்கெட் சரிந்து வருகிறது. இந்த சமயத்தில் அதேபோன்றதொரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்காம் 1992 வெப் சீரிஸை இப்போது பார்த்தால் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து அயராது உழைத்து, படிப்படியாக முன்னேறி, செல்வந்தர்கள் மட்டும் பங்கேற்ற பங்கு வணிகத்தில் ஈடுபட்டு, அதில் அவர்களை மிஞ்சி, ஆட்டத்தின் போக்கை மாற்றி, வெற்றியின் உச்சம் தொட்ட அதே வேகத்தில் தோல்வியின் அதலபாதாளத்தில் வீழ்ந்த ஹர்ஷத் மேத்தாவின் கதைதான் ஸ்காம் 1992.
இந்த வெப் சீரிஸை சோனி லைவில் பார்க்கலாம்.