ஒருவழியாக சீனாவை இந்தியா முந்திவிட்டது. இப்போது நாம்தான் நம்பர் ஒன்.
எதில் என்று கேட்கிறீர்களா?… மக்கள்தொகையில்தான்…
உலக மக்கள்தொகையின் எண்ணிக்கையில் நேற்றுவரை சீனாதான் நம்பர் ஒன். ஆனால் இப்போது அந்த இடம் நமக்கு சொந்தமாகிவிட்டது. ஐநா சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் இப்போதைய மக்கள் தொகை 142.86 கோடி. சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி. சீனாவைவிட இந்தியாவின் மக்கள்தொகை சில லட்சங்கள் கூடிவிட்டது. இன்னும் ஓராண்டுக்குள் அது சில கோடிகளாவது கூடும் என்று கூறப்படுகிறது.
ஐநா அமைப்பின் தரவுகளின்படி இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். 15 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்கள் 68 சதவீதம் பேராகவும், 65 வயதைக் கடந்தவர்கள் 7 சதவீதம் பேராகவும் உள்ளனர்.
Pew Research Centre என்ற அமைப்பின் தரவுகளின்படி இந்தியாவின் மக்கள்தொகை கடந்த 1950-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 100 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. நமக்குத் தெரிந்து ஒரு காலத்தில் சுமார் 30 கோடியாக இந்தியாவின் மக்கள் தொகை இருந்திருக்கிறது. அதனால்தான் ’30 கோடி முகமுடையாள்’ என்று பாரதியார் எழுதினார். அவர் அப்படி எழுதிய காலத்தில் இந்தியாவுடன் பாகிஸ்தானும் சேர்ந்து இருந்தது. ஆனால் இன்று இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 142 கோடியைக் கடந்துவிட்டது. இந்த மக்கள்தொகை இன்னும் கூடி ஒரு கட்டத்தில் 165 கோடியை எட்டும் என்றும் அதன்பிறகு மக்கள்தொகையின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
மக்கள்தொகையை குறைக்க என்ன செய்யலாம் என்று இந்தியா யோசித்து வரும் நிலையில், சீனாவின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. 1960-க்கு பிறகு தொடர்ந்து அதிகரித்துவந்த சீனாவின் மக்கள் தொகை, கடந்த ஆண்டின் இறுதியில் சடாரென்று குறையத் தொடங்கியது. இதனால் மக்கள் தொகையை பெருக்க, அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்போருக்கு ஏகப்பட்ட சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகிறது.
1980-களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்று கட்டாயப்படுத்திய சீன அரசு, 2016 முதல் ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளையாவது பெற்றெடுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.
சீனாவில் மட்டுமல்ல ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள்தொகை வேகமாக குறைந்து வருகிறது. அதற்கு நேர்மாறாக ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது 2100-ம் ஆண்டுக்குள் இந்நாடுகளின் மக்கள்தொகை சுமார் 390 கோடியாக (இப்போது 140 கோடி) என்று ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.