“முதற்கட்டத் தேர்தலில் தெற்கே தொடங்கும் இந்தியா கூட்டணிக்கான அலை இறுதிக்கட்டம் வரை நாடு முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மனதில் எழுச்சியும் மாற்றத்திற்கான தேவையும் தெளிவாகத் தெரிகிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் உள்ளார்கள். இந் நிலையில், தேர்தல் களம் குறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின். அந்தப் பேட்டில் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
“முதற்கட்டத் தேர்தலில் தெற்கே தொடங்கும் இந்தியா கூட்டணிக்கான அலை இறுதிக்கட்டம் வரை நாடு முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மனதில் எழுச்சியும் மாற்றத்திற்கான தேவையும் தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு, பா.ஜ.க. மட்டுமே ஒரே கட்சி, மோதி மட்டுமே ஒரே தலைவர் என்று சொன்னவர்கள்கூட தற்போது தங்கள் சுருதியைக் குறைத்திருப்பதைக் காண முடிகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இது இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான தேர்தல் என்ற மனநிலை நாடு முழுவதும் அலையாக எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதால், வரப்போகும் ஆட்சி இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் என்று உறுதியாக நம்புகிறேன்.
பல மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு சுமுகமாக அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி தன்னுடைய வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்த பா.ஜ.க.வின் வியூகம் தகர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.கவின் நேரடிப் போட்டி அ.தி.மு.கவுடன்தான். கருத்தியலில் பா.ஜ.க.தான் நாட்டுக்கே எதிரி என்பதால், பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.வை வீழ்த்துவதுடன், அ.தி.மு.க.வின் பலவீனத்தை சாதகமாக்கிக்கொள்ள நினைக்கும் பா.ஜ.க.வின் வியூகத்தையும் தகர்த்தெறியும் வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் செயல்பாடு அமையும். எங்கள் கூட்டணி முழுமையான வெற்றி பெறும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டருமே, கலைஞரின் வார்ப்புகள். அதனால்தான், அவர் இல்லாதபோதும் கட்சி கட்டுக்கோப்பான தலைமையில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால், கலைஞருக்குப் பிறகு தி.மு.க.வில் வெற்றிடம் என்று ஏதுமில்லை. அம்மையார் ஜெயலலிதாவுக்குப் பிறகு, அ.தி.மு.க. எத்தனையெத்தனை பிளவுகளைச் சந்தித்துள்ளது என்பதையும், தலைமைப் போட்டியில் யார் யார் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதையும் எதையெதை அடகு வைத்தார்கள் என்பதையும் உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் உள்பட அனைவரும் அறிவார்கள்.
அதனால்தான், அ.தி.மு.க.வை பலவீனமாக்கி, அதனுடைய இடத்தை அடைய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. பதவி ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு 4 ஆண்டுகள் பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்த பழனிசாமி கம்பெனியாரின் செயல்பாடுகளும், பா.ஜ.க.வுக்கு விசுவாசி நீயா-நானா என்பதில் அ.தி.மு.க.வின் அனைத்துப் பிரிவின் தலைவர்களும் போட்டி போடுவதாலும், பா.ஜ.க. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆள் பிடிக்கிறது. ஆனால், மதவாத அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதால் பா.ஜ.க. இங்கே காலூன்ற முடியாது.
ராகுல்காந்தி நம்பிக்கைக்குரிய இளந்தலைவராக இருக்கிறார். தன்னுடைய அயராத உழைப்பால் இந்தியா முழுவதும் நடந்து மக்களிடம் செல்வாக்கைப் பெற்றிருக்கிறார். நாடாளுமன்றத்தில் அவருடைய குரல் உண்மையான தேசபக்தியுடன் ஒலித்தது. அதனாலேயே, போலி தேசபக்தர்கள் அவருடைய எம்.பி. பதவியைப் பறிக்க முயன்று தோற்றுப் போனார்கள். சகோதரர் ராகுல் தன்னை அரசியலில் நிலைநிறுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளும் விளம்பர மோகம் இல்லாமல், இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.
பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகளாக இருந்தாலும், பா.ஜ.க ஆட்சியில்லாத மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தாலும் அவர்கள் மீது மட்டுமே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ (மத்திய புலனாய்வுத்துறை) ஆகியவை பாய்கின்றன. எதிர்க்கின்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க பக்கம் தாவிவிட்டால், இந்தத் துறைகளின் பாய்ச்சல் அடங்கிவிடுவது மட்டுமல்ல, அதற்கு முன்பு வரை ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் பா.ஜ.கவின் வாஷிங் மெஷினில் கறை நீங்கியவர்களாக ஆக்கப்பட்டு வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். அமைச்சர்களாக ஆக்கப்படுகிறார்கள். பிரதமர் மோதிக்கு நெருக்கமானவர்களாகி விடுகிறார்கள். பா.ஜ.க.வை உறுதியாக எதிர்க்கும் தி.மு.க. போன்ற கட்சிகள் இத்தகைய நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டுதான் வருகின்றன. சட்டரீதியான முயற்சிகளால் நீதிமன்றங்கள் மூலம் சில தீர்வுகள் கிடைத்துள்ளன. எனினும், ஜனநாயக ரீதியான முழுமையான தீர்வை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தரும்.