No menu items!

ஓபிஎஸ் ஜெயிப்பாரா? – ராமநாதபுரம் நிலவரம் என்ன?

ஓபிஎஸ் ஜெயிப்பாரா? – ராமநாதபுரம் நிலவரம் என்ன?

மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர்; அதிமுகவில் ஜெயலலிதா காலத்திலேயே ‘நம்பர் 2’ஆக இருந்தவர். ஆனால், இன்று ஒரு சுயேச்சை வேட்பாளராக, அதுவும் தனது சொந்த தொகுதியில்கூட நிற்க முடியாமல், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஒரு காலத்தில் அரசியலில் செல்வாக்காக வலம் வந்து, பிறகு எங்கே என்று தேடும் அளவிற்கு காணாமல் போனவர்கள் பட்டியல் மிகப்பெரியது. ஓ. பன்னீர்செல்வமும் அவர்களைப் போலவே பத்தோடு பதினொன்றாக காணாமல் போவாரா அல்லது மீண்டு வருவாரா? ராமநாதபுரத்தில் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் எப்படி? பார்க்கலாம்.

ராமநாதபுரத்தில் இதுவரை யார், யார் வென்றிருக்கிறார்கள்?

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள்: 7,97,012; பெண் வாக்காளர்கள்: 8,08,955; மூன்றாம் பாலினத்தவர்கள்: 83 பேர் உள்ளனர்.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி 1957 முதல் இதுவரை 16 தேர்தல்களை சந்தித்திருக்கிறது. இது காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், தமாகா, பார்வர்ட் பிளாக், சுயேச்சை வேட்பாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 4,69,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 1,27,122 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இத்தேர்தலில் அமமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜனின் மகன் ஆனந்த் 1,41,806 வாக்குகள் பெற்றிருந்தார். நாம் தமிழர் வேட்பாளர் புவனேஸ்வரி 46,385 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜய பாஸ்கர் 14,925 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

அதன்பின்பு 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆறு தொகுதிகளையும் திமுக கூட்டணி கட்சிகளே வெற்றிபெற்றன. ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருச்சுழி ஆகிய தொகுதிகளை திமுகவும், திருவாடானை, அறந்தாங்கி தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் வென்றன. ஒரு தொகுதியைக்கூட அதிமுக, பாஜக கூட்டணி கைப்பற்றவில்லை.

யார், யார் போட்டியிடுகிறார்கள்?

பாஜக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணியில் தற்போதைய எம்பியான நவாஸ் கனி, அதிமுகவில் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சியில் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 25 பேர் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

நவாஸ் கனி, பெரும் பலம்வாய்ந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சுறுசுறுப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நவாஸ் கனி. “எதிர்கட்சிகள் பிரிந்து நிற்பதால் எங்கள் வெற்றி உறுதி; இரண்டாம் இடம் யாருக்கு என்பதில்தான் போட்டியே” என்கிறார்கள் திமுகவினர்.

தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் ஓபிஎஸ் அதிக தீவிரத்துடனேயே வலம் வருகிறார். முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் அவர்கள் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடனேயே ஓபிஎஸ் இங்கே களம் இறங்கியுள்ளார்.

முக்குலத்தோர் வாக்குகளுடன் அதிமுகவில் ஒரு தரப்பினர் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என ஓபிஎஸ் நம்புகிறார். ஆனால், அதிமுகவின் கட்டமைப்பும் இரட்டை இலை சின்னமும் அதிமுக வேட்பாளர் ஜெயபாலுக்கு சாதகமாக இருக்கும். அவருக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்ட்டுள்ளனர். அரசியல் எதிரியான ஓபிஎஸ்ஸை தோற்கடித்தாக வேண்டும் என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தீவிரம் காட்டி வருவதால் தொகுதியில் பிரச்சாரம் சூடு பறக்கிறது. வெளியூர்க்காரர் என்பதும் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு பின்னடைவாக இருக்கும்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால், மீனவர் பிரச்சினை, தமிழர் உரிமை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஓபிஎஸ் வாழ்வின் திருப்புமுனைகள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1952இல் பிறந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அப்பா பெயர்: ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓட்டக்காரத்தேவர் தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு ‘பேச்சிமுத்து’ என்றுதான் முதலில் பெயரிட்டார். பின்னர் அது ‘பன்னீர்செல்வம்’ என மாற்றப்பட்டது.

ஓ. பன்னீர்செல்வத்துடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.

பி.ஏ. படித்து முடித்தபிறகு பால்பண்ணை ஒன்றை நடத்தினார், ஓபிஎஸ். அதன்பின்னர், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார். டீக்கடை நடத்திக்கொண்டே அவ்வப்போது அதிமுக கட்சிக் கூட்டங்களுக்கும் போய்வந்து கொண்டிருந்தார். 1987இல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணி – ஜானகி அணி என அதிமுக இரண்டானது. ஜானகி அணியில் இருந்த ஓபிஎஸ், கம்பம் செல்வேந்திரன் நெருக்கம் காரணமாக பெரியகுளம் நகர செயலாளரானார். 1991இல் அதிமுக ஒருங்கிணைந்த பிறகும் பெரியகுளம் நகர செயலாளராக தொடர்ந்தார். பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநர் பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது. 1996 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தோல்விக்கு பின்னர் நடைபெற்ற பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் ஓபிஎஸ் வெற்றிபெற்றார்.

1999 பாராளுமன்றத் தேர்தலில், அப்போது அதிமுகவில் பெரும் செல்வாக்குடனும் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாகவும் இருந்த டிடிவி. தினகரன்பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிபெற்று எம்.பியான தினகரன், தொகுதிக்குள்ளேயே குடியிருக்கும் திட்டத்தில் 2000ஆம் ஆண்டில் பெரியகுளத்தில் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு சொந்தமான வீட்டிற்கு குடியேறினார். இதுதான் ஓபிஎஸ் வாழ்க்கையின் திருப்புமுனை.

டிடிவி தினகரன் மனதில் இடம்பிடித்த ஓபிஎஸ்ஸுக்கு அதன்பிறகு எல்லாமே ஏறுமுகம்தான். நகர்மன்றத் தலைவர் பதவி முடிவதற்குள்ளாகவே டிடிவி தினகரன் சிபாரிசால் 2001 சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைத்தது. வெற்றி பெற்று வருவாய்த் துறை அமைச்சரானார். 4 மாதங்களில் டான்சி வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்க, ஓபிஎஸ் தமிழக முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார். ஆறுமாத காலம் முதல்வராக இருந்தார். மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற போது ஓ. பன்னீர்செல்வம் விரும்பிய பொதுப்பணித்துறையே இவருக்குத் தரப்பட்டது.

ஜெயலலிதாவின் 2001 – 2006 ஆட்சிக் காலத்தில் செல்வாக்குடன் இருந்த அமைச்சர்கள் பலர் அதன்பின்பு இருந்த இடம் தெரியவில்லை காணாமல் போனார்கள். ஆனால், சில இறக்கங்கள் இருந்தாலும், அதிலிருந்தெல்லாம் மீண்டு வந்து, ஜெயலலிதா மறைவு வரை அவருக்கு நம்பிக்கையானவராகவும் செல்வாக்கானவராகவும் வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மூன்றாவது முறை முதலமைச்சரானார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கையை பெற்றார். அதுதான் ஓபிஎஸ் வாழ்வில் தொட்ட உச்ச இடம். அதன்பின்னர் எல்லாம் இறங்கு முகம்தான். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டு வரலாம் என்று தீவிரத்துடன் களம் இறங்கியுள்ளார்.

மீண்டு வருவாரா என்பது ஜூன் 4ஆம் தேதி தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...