விராட் கோலி – அனுஷ்கா ஜோடிக்கு இன்று 6-வது திருமண நாள். இதை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பதிவிட்டு வருகிறார்கல்.
இந்த ஜோடியின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 2013-ம் ஆண்டில் ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக சென்றபோதுதான் அனுஷ்காவை முதல் முறையாக சந்தித்திருக்கிறார் விராட் கோலி. அது ஒரு ஷாம்பூ விளம்பரம். படப்பிடிப்புக்கு முதலில் சென்ற விராட் கோலி, அங்கு இருந்தவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து சிரித்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் காரில் படப்பிடிப்பு தளத்தில் வந்து இறங்கியுள்ளார் அனுஷ்கா சர்மா.
பாலிவுட் நடிகைகளில் அனுஷ்கா கொஞ்சம் உயரமானவர். அன்றைய தினம் படப்பிடிப்புக்கு வந்தபோது உயரமான ஹீல்ஸ் கொண்ட காலணியை அனுஷ்கா அணிந்திருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தார். அதே நேரத்தில் விராட் கோலி கொஞ்சம் குள்ளம். அனுஷ்காவைவிட ஒருசில அங்குலங்கள்தான் உயரமாக இருப்பார். காரில் இருந்து அனுஷ்கா இறங்கியதும், முதலில் அவரது உயரத்தைத்தான் கோலி கவனித்துள்ளார்.
ஏற்கெனவே உயரமான பெண்ணாக இருந்த அனுஷ்கா, மிகப்பெரிய ஹீல்ஸ்களையும் அணிந்து இருந்ததால், இன்னும் உயரமாக தெரிந்தார். அதனால் அவருக்குப் பக்கத்தில் தான் நின்றால் குள்ளமாக தெரிவோமோ என்று விராட் கோலிக்கு பட்டுள்ளது.
“இதைவிட உயரமான ஹீல்ஸ் செருப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் கேட்டுள்ளார் விராட் கோலி. ஆனால் அவர் எதற்காக அப்படி கேட்கிறார் என்று அனுஷ்காவுக்கு புரியவில்லை.
“என்ன கேட்டீர்கள்” என்று திரும்பக் கேட்டுள்ளார். முதல் சந்திப்பிலேயே அனுஷ்காவை கிண்டலடித்து விட்டோமோ என்று நினைத்த கோலி, “ஒன்றுமில்லை, சும்மா ஜோக்குக்காக சொன்னேன்” என்று பேச்சை மாற்றியுள்ளார். பின்னாளில் தினேஷ் கார்த்திக்குக்கு அளித்த பேட்டி ஒன்றில் இத்தகவலைச் சொல்லியுள்ளார் விராட் கோலி.
அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் ஜாலியாக கோலி பழகிய விதம் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துப் போனது. விராட் கோலி, அனுஷ்கா ஆகிய இருவருமே மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தங்கள் துறையில் முன்னுக்கு வந்தவர்கள். விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய 2008-ம் ஆண்டில்தான் அனுஷ்காவின் திரையுலகப் பயணமும் தொடங்கியுள்ளது. இப்படி பல விஷயங்களில் தங்களுக்குள் ஒற்றுமை இருந்ததால் இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. ஒன்றாக சேர்ந்து வெளியில் சுற்றத் தொடங்கினார்.
2014-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியதும், அனுஷ்காவின் வீட்டுக்கு விராட் கோலி சென்றது மிகப்பெரிய செய்தியானது. இதைத்தொடர்ந்து நியூஸிலாந்துக்கு இந்திய அணி ஆடச் சென்றபோது, விராட் கோலியை உற்சாகப்படுத்துவதற்காக அனுஷ்கா சர்மாவும் நியூஸிலாந்துக்கு சென்றார். இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றபோதும் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள டார்லிங் ஹார்பரில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது பலரது புருவங்களை உயர்த்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து, யுவராஜ் சிங்கின் திருமணம் என பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று, ‘ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம்’ என்பதை இவர்கள் சொல்லாமல் சொன்னார்கள். 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் சதமடித்த கோலி, மைதானத்தில் அனுஷ்கா இருந்த இடம் நோக்கி ஒரு ‘பிளையிங் கிஸ்’ பறக்கவிட்டு தனது காதலை பகிரங்கப்படுத்தினார்.
.
இந்த நிலையில் யாருடைய கண் பட்டதாலோ, 2016-ம் ஆண்டில் அவர்களின் காதலில் சிறிய விரிசல் விழுந்தது. ஜோடிப் புறாக்களாக சுற்றித் திரிந்த இருவரும், சில காலம் நேரில் சந்திப்பதைக்கூட தவித்தனர். இந்த காலகட்டத்தில் விராட் கோலி சமூக வலைதளங்களில், ‘என் இதயம் நொறுங்கிக் கிடக்கிறது’ என்று பதிவிட்டார். மற்ற காதல்களைப் போல இந்தக் காதலையும் கோலி முறித்துக்கொண்டார் என்றுகூட சிலர் பேசிக்கொண்டனர். ஆனால் அந்தப் பிரிவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. அவர்களின் காதல் மீண்டும் துளிர்விட்டது.
இந்தச் சூழலில் கோலி – அனுஷ்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் டிசம்பர் 11-ம் தேதி, வெளியாட்கள் யாரும் இல்லாமல் உறவினர்களை மட்டும் வைத்து அனுஷ்காவைத் திருமணம் செய்துகொண்டார் கோலி. அவர் நினைத்திருந்தால் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்திருக்கலாம். ஆனால் தனது திருமணத்தை தனிப்பட்ட விஷயமாகக் கருதிய விராட் கோலி, நெருங்கிய உறவினர்களான 42 பேரை மட்டும் வைத்து திருமணத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகு இந்தியாவில் நண்பர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.