வெற்றிமாறனின் ‘விடுதலை’ தொடர்பாக ஈழக் கவிஞர், நடிகர் ‘ஆடுகளம்’ ஜெயபாலன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி…
எழுத்தாளர் சாரு நிவேதிதா ‘விடுதலை’ படம் பற்றி ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். அதில், ‘வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும். வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் பொழுதுபோக்கு அம்சத்தை விட கலையம்சம் அதிகம். அதன் காரணமாகவும், படத்துக்கு வந்த அதீதமான வரவேற்பினாலும் மிகுந்த எதிர்பார்ப்புடனேயே விடுதலையைக் காணச் சென்றேன். ஆனால், படம் மொத்தமுமே பிளாஸ்டிக்கை மெல்வது போல்தான் இருக்கிறது’ என்று சொல்லியுள்ளார். உங்களுக்கு ‘விடுதலை’ எப்படியிருந்தது?
எனக்கு உண்மையாகவே ‘விடுதலை’ மிகவும் பிடித்திருந்தது. இது தமிழில் வெளிவந்துள்ள சிறந்த படங்களில் ஒன்று என்றே நான் சொல்வேன். இந்தப் படம் கதை சொல்லும் படமல்ல; அரசு, குடும்பம், அதிகாரம் உள்பட அமைப்புக்கும் தனி மனிதனுக்கும் இடையிலான உறவை சொல்கிற படம் இது. இந்த அமைப்புகள் எப்படி தனிமனிதனுக்கு எதிராக செயல்படுகிறது, தனிமனிதன் விதியை எப்படி நிர்ணயிக்கிறது, தனிமனிதன் சுதந்திரமாக செயல்படுவதை எந்தவகையிலும் அனுமதிக்காமல் எப்படி தடுக்கிறது போன்றவை உள்பட தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையில் நடக்கிற ஊமைப் போராட்டத்தை மிகத் தெளிவாக தமிழில் புலப்படுத்திய ஒரே படம் என்று நான் ‘விடுதலை’யைத்தான் சொல்வேன். அமைப்பு, தனிமனிதன் என்பது பற்றி வெற்றிமாறன் முன்வைக்கும் தர்க்கமும் அதை படமாக்கிய வேல்ராஜ் வல்லமையும் மிக முக்கியமானவை.
எனது ஓவிய ஆசிரியர் பிக்காஸோவின் ‘கியுபிச’ ஓவியங்கள் குப்பை என்று சொன்னார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுபோல்தான் இப்போது சாரு நிவேதிதா ‘விடுதலை’ படம் பற்றி சொல்வதும் உள்ளது.
சாரு நிவேதிதா அந்த விமர்சனத்தில் சொல்கிறார், ‘விடுதலையில் வரும் ரயில் விபத்து என்ற ஆரம்பக் காட்சியை பலருமே உலகத் தரம் என்று எழுதியிருந்தார்கள். அதனால், படத்தை ஒரு நிமிடம் கூட விடக் கூடாது என்று அரங்கத்தின் உள்ளே முதல் ஆளாகவே போய்விட்டேன். அமெச்சூரிஷ் என்ற வார்த்தை உங்களுக்குத் தெரியும், அதுதான் அந்த ரயில் விபத்துக் காட்சி. ஒரு அட்லி, ஒரு சுந்தர் சி படத்தில்கூட இதை விட நன்றாகக் காண்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு ரயில் விபத்தை எத்தனை மட்டமாக, எத்தனை அமெச்சூரிஷாகக் காட்சிப்படுத்த முடியுமோ அத்தனை மட்டமாக எடுத்திருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்’ மாதிரியெல்லாம் படம் வந்த பிறகும் இப்படி ஒரு அபத்தமான, அரைவேக்காட்டுத்தனமான ரயில் விபத்துக் காட்சி வருகிறது என்றால், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் நடக்கும் டிராமாவைப் போலவே இருந்தது அந்தக் காட்சி’ என்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
‘விஸ்வரூபம்’ படத்தையும் நான் பார்த்துள்ளேன். நிச்சயமாக இரண்டையும் ஒப்பிடவே இயலாது. விஸ்வரூபத்தில் எல்லா காட்சிகளும் மல்டிபிள் ஷாட் காட்சிகள். ஆனால், ‘விடுதலை’ படத்தின் ரயில் விபத்து காட்சி லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விதமான ஷாட்களும் தரும் அனுபவங்கள் வேறு வேறு. லாங் ஷாட்டுக்கு தமிழ் சினிமா பழக்கப்படவில்லை. இந்த காட்சியில் வெற்றிமாறன், வேல்ராஜ் இருவரின் திறமையும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளதை பார்க்க முடியும்.
தொடரும்