No menu items!

வெங்கடேஷ் சக்ரவர்த்தி மரணம் – பெண்கள் நடத்திய தகனம்

வெங்கடேஷ் சக்ரவர்த்தி மரணம் – பெண்கள் நடத்திய தகனம்

தமிழ் திரைப்பட திறனாய்வாளர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி (வயது 70) நேற்று காலமானார். தீவிர சினிமா, தீவிர இலக்கிய வட்டாரத்தில் சக்ஸ் என பிரபலமாக அறியப்பட்ட இவர் சினிமாவை கற்பித்த பேராசியரும்கூட. சென்னை எல்.வி. பிரசாத் திரைப்படக் கல்லூரி, சிவாஜி கணேசன் திரைப்படக் கல்லூரி, ஹைதராபாத் ராமா நாயுடு திரைப்படக் கல்லூரி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தனது ஸ்டைலிசான வாழ்க்கை முறை போலவே இறுதி நிமிடங்களிலும் வித்தியாசமானவராக இருந்துள்ளார் சக்ரவர்த்தி. அவரது விருப்பப்படி, இறந்த சில மணி நேரங்களில், முழுக்க முழுக்க குடும்ப பெண்களால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் சென்னையில் ஆச்சாரமான ஒரு ஐயங்கார் குடும்பத்தில் 1952 மார்ச் 21 அன்று பிறந்தவர், வெங்கடேஷ் சக்ரவர்த்தி. இவருடைய தந்தை சீனிவாச சக்ரவர்த்தி, மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்ற நிறுவனத்தின் இந்தியக் கிளையின் பொது மேலாளாராக பணிபுரிந்தவர்; திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவருடைய தாய் ராதா பாய், அந்த காலத்தில் புகழ்பெற்ற நடிகை. ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’, மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை குட்டி பத்மினி இவரது சகோதரி. இந்த பின்புலம் காரணமாக தமிழ் திரையுலகிலும் வெங்கடேஷ் சக்ரவர்த்திக்கு நிறைய நண்பர்கள் உண்டு.

ருத்ரையா இயக்கிய ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் முக்கிய பங்களிப்பை செய்துள்ள சக்ரவர்த்தி, சென்னை பற்றிய ஒரு ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். திராவிட இயக்கம், தமிழ் திரைப்படங்கள் குறித்த ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தத்துவம், உளவியல் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.

ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் பேசவும் கூடிய சக்ரவர்த்தி, ‘ப்ரண்ட் லைன்’, ‘இபிடபிள்யூ’ மாதிரியான பத்திரிகைகளில் தமிழ் சினிமா பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் பல்கலை ஆய்வு வட்டங்களில் மிகவும் மதிக்கப்படுகின்றன. மணிரத்னத்தின் ‘ரோஜா’, ‘இருவர்’, பாரதிராஜாவின் சினிமா, தமிழ் சினிமாவில் சாதி பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் முக்கிய பங்களிப்பாக கருதப்படுகிறது.

வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பரும், சமீபத்தில் ‘ஓ தட்ஸ் பானு’ திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கன தேசிய விருது பெற்றவருமான ஆர்.வி. ரமணி, சக்ரவர்த்தி பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“வெங்கடேஷ் சக்கரவர்த்தி, எங்கள் அனைவருக்கும் இரக்கமுள்ள நண்பர், சிறந்த அறிவுஜீவி. அவரது உள்ளம் உயர்ந்தது. நேற்று (27-07-2022) மாலை, திரைப்பட தயாரிப்பாளர் சஷிகாந்திடம் இருந்து எனக்கு திடீரென போன் வந்தது. ‘சக்ஸ் காலமாகிவிட்டார், அவரது இறுதிச் சடங்கு ஈஞ்சம்பாக்கம் சுடுகாட்டில் இன்னும் ஒரு மணி நேரத்தில் நடக்கும்’ என்றார்.

சக்ஸ் கடந்த சில மாதங்களாக குடல் சம்பந்தமான சிக்கல்களால் நோய்வாய்ப்பட்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். அறுவை சிகிச்சை மூலமே அவரது உயிரைக் காப்பாற்றி வந்தார். ஆனால், எப்போதும் பாதிக்கப்படக்கூடிய நிலையில்தான் இருந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன். அப்போது, சக்ஸ் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தார். வழக்கமான குண்டாக இல்லை. உடல் எடை குறைந்து மிகவும் பலவீனமாக இருந்தார். அவரால் சரியாக உணவு உட்கொள்ள முடியவில்லை. ஆனால், இவை அனைத்தும் அவர் இயல்பை மாற்றவில்லை. உற்சாகமாக இருந்தார்.

கடைசி காலங்களில் அவர் தனது உடலை நடைமுறை ரீதியாக, பகுத்தறிவுடன் பார்த்தார். புகைபிடிப்பதை விட்டுவிடுவது, விரும்புவதைச் செய்வது, நிறைய வாசிப்பது, படங்கள் பார்ப்பது, விவாதிப்பது, எழுதுவது என்று தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். ஆச்சரியமாக எப்போதும் போல் விழிப்புடன் படிப்பது, படங்கள் பார்ப்பது என்றிருந்தார்.

நான் எடுக்கும் திரைப்படத் தயாரிப்பு பாடத்திற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வது எப்படி என்பது பற்றி பேசினார். நான் என்ன வேலை செய்கிறேன் என்பதை அறிய விரும்பினார். நான் எடுக்க திட்டமிட்டிருந்த ஒரு படத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நான் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சி, நான் எதிர்கொண்டிருந்த இக்கட்டான சூழ்நிலைகள் பற்றி கூறினேன். அந்தப் படத்தை எப்படித் தயாரிப்பது என்பது குறித்து எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அந்தப் படத்துக்காக சக்ஸுடன் சேர்ந்து ஸ்கிரிப்ட்டில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

எங்களின் கடைசி சந்திப்பில், சக்ஸ் எனக்கு நிறைய ‘அசைன்மென்ட்’ கொடுத்திருந்தார். ஆனால், அவர் கொடுத்த ‘அசைன்மென்ட்’ எதையும் நான் செய்யவில்லை. அதனால், அவரைப் பார்க்காமல் குற்ற உணர்வுடன் இருந்தேன்.

வெங்கடேஷ் சக்கரவர்த்தி, அற்புதமான ஒரு குடும்ப மனிதரும்கூட. அவரது இரு மகள்களுக்கும் அற்புதமான தந்தை. அவரும் அவரது மனைவி ப்ரீதமும் ஒரு காவிய இணையாக இருந்தனர்.

சஷிகாந்திடம், ‘தகனம் செய்யப் போகிறீர்களா’ என்று கேட்டேன். அவர் மிகவும் உணர்ச்சி வசப்படுவதை என்னால் உணர முடிந்தது. நான் உடனே, ‘சரி நான் தகனத்துக்குப் போகிறேன்’ என்றேன். ஹைதராபாத்தில் இருந்து அவரது சில மாணவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்கு பதிலளித்து செய்தியை உறுதிப்படுத்திய பிறகு நான் புறப்பட்டேன். கலைராணி (நடிகை) என்னுடன் சுடுகாட்டிற்கு வந்தார்.

சுடுகாட்டில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உடல் வரும் வரை காத்திருந்தோம். சிறிது நேரத்தில் அவரது உடல் குடும்ப உறுப்பினர்களுடன் வேனில் வந்தது. மனைவி ப்ரீதம், மகள்கள் சம்யுக்தா, மாளவிகா மற்றும் பிற பெண் குடும்ப உறுப்பினர்கள் சக்ஸின் உடலை விரைவாக தூக்கி, மேல் தளத்தில் உள்ள மின்சார தகன இடத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து நான் சென்றேன்.

தகன மேடை தண்டவாளத்தில் உடலை வைக்கும் இறுதி இடத்தை அவர்கள் அடைந்ததும், சுடுகாட்டின் ஆண் காவலர்கள், உடலை அவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர். உடலை வாங்க நானும் வேகமாக பின்னால் இருந்து அருகில் சென்றேன். அந்த நேரத்தில், குடும்பத்தின் பெண் ஒருவர், வெறுமனே சைகை செய்து, உடலை கையாள பெண்களிடம் விட்டு விடுங்கள் என்றார். அது எனக்கு பெருமையாக இருந்தது.

அது முழுக்க முழுக்க குடும்பப் பெண்களால் நடத்தப்பட்ட தகனம். எந்தவித சடங்குகளும் இல்லை. வெறும் காதல், காதல், காதல் என்று கொட்டியது. உடலை தண்டவாளத்தில் வைத்ததும் இளைய மகள் மாளவிகா, வேகமாக தன் தந்தையிடம் சென்று, அவரது முகத்தைப் பிடித்து, நெற்றியில் ஆழமாக முத்தமிட்டாள். இந்த முழு செயல்முறையிலும், சக்ஸின் பேத்தியான குழந்தை யாழினி, அவளைக் கவனித்துக் கொள்ளவும் ஆறுதல்படுத்தவும் தனது குடும்ப உறுப்பினர்களின் கைகளுக்கிடையே தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தாள்.

சக்ஸின் உடல் உள்ளே தள்ளப்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அவருடைய கடைசி நிமிடங்கள் இப்படி நிகழ்ந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். 1 மணி நேரத்தில் சாம்பல் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ப்ரீதமுடன் பேசினேன். “கடந்த சில நாட்களில் சக்ஸின் உடல்நிலை மோசமடைந்தது. 2 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சக்ஸ் தனது உடலை மேலும் தாங்க முடியாது என்று உணர்ந்தார். எனவே, வீட்டிற்குத் திரும்ப விரும்பினார். தனது குடும்பத்துடன் தனது கடைசி தருணங்களை செலவிட விரும்பினார். அவரது விருப்பப்படி குடும்பத்துடன் நிம்மதியாக வீட்டில் காலமானார்” என்றார்.

என்ன சொல்வது என்று தெரியாமல் சக்ஸின் மூத்த மகள் மாளவிகாவை அப்படியே கட்டிப்பிடித்தேன். அப்போது, “உங்கள் தேசிய விருதுக்கு வாழ்த்துகள் ரமணி. நேற்று ராத்திரி வரைக்கும் அப்பா நல்லா இருந்தார். உங்கள் விருது பற்றிகூட சொல்லிகொண்டு இருந்தார். படங்களைக் காட்டி சந்தோசப்பட்டார். இந்த விருதை வென்றதற்கு நன்றி ரமணி” என்றாள். நான் அப்போது பேரிழப்பை உணர்ந்தேன்” என்றார் ஆர்.வி. ரமணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...