No menu items!

செஸ் ஒலிம்பியாட் – சென்னை ரெடி

செஸ் ஒலிம்பியாட் – சென்னை ரெடி


44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக முழு வேகத்தில் தயாராகி வருகிறது. 187 நாடுகள் பங்கேற்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள். இந்த போட்டிக்காக என்னென்ன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என்று தெரிந்துகொள்ள மாமல்லபுரத்தில் கள ஆய்வு மேற்கொண்டோம்…

செஸ் ஒலிம்பியாட் நடக்கும் முதலாம் அரங்கில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் அமர்ந்து செஸ் விளையாடுவதற்கு வசதியாக நாற்காலிகளும் டேபிள்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள டேபிள்களில் இப்போதே செஸ் போர்டுகள் மற்றும் காயின்கள்கூட சரியாக அடுக்கப்பட்டிருந்தன.

மாமல்லபுரம் வெப்ப பகுதி என்பதாலும், குளிர் பிரதேசங்களைச் சேர்ந்த பல வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டுக்கு வருவார்கள் என்பதாலும் அரங்கை குளிர்விக்கும் வகையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அந்த அரங்கின் பல இடங்களில் பச்சை நிற சட்டைகளை அணிந்த தன்னார்வலர்களைக் காண முடிந்தது.


அந்த தன்னார்வ ஊழியர்களில் ஒருவரான விதான் ஜோஷியிடம் பேசினோம். “நான் மும்பையில் இருந்து வந்திருக்கிறேன். இங்கு என்னைப்போல் சுமார் 400 தன்னார்வலர்கள் உள்ளனர். இப்போது நாங்கள் கடைசி கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். குழுக்களாக பிரிந்து வேலை பார்ப்பதால் வேலைகள் எளிதாக முடிகிறது” என்றார்.

போட்டிகளின் முக்கிய அமைப்பாளரும் அரங்கப் பொறுப்பாளருமான அனந்தராமனிடம் பேசியபோது, “செஸ் ஒலிம்பியாடுக்கான பணிகள் 99.5% நிறைவடைந்துள்ளன. கடைசி கட்ட வேலைகள் மட்டும் கொஞ்சம் இருக்கிறது. இந்த போட்டிகள் சென்னையில் நடப்பது நமக்கு கிடைத்த பெருமை. அனைத்திந்திய செஸ் ஃபெடரேஷன் செயலாளர் பரத் சிங்கின் நீண்ட நாள் ஆசை இது. இப்போட்டிக்கு தேவையான நிதியைக் கொடுத்த தமிழக அரசு, தேவையான பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்றார்

போட்டிகள் நடக்கும் இரண்டாவது அரங்கில் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. 44,500 சதுரடி கொண்ட அந்த அரங்கில் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார் சர்வதேச செஸ் ஆர்பிட்டரான பழனியப்பன்.

‘ஆர்பிட்டர் என்றால் என்ன?’ என்ற கேள்வி பலருக்கும் எழலாம். செஸ் விளையாட்டு வீரர்களுக்குள் ஏதாவது சர்ச்சை ஏற்பட்டால் அவற்றை சரி செய்பவரை ஆர்பிட்டர் என்று அழைக்கிறார்கள். மற்ற விளையாட்டுகளில் நடுவர் எப்படியோ, அப்படித்தான் செஸ் விளையாட்டில் ஆர்பிட்டர்.

செஸ் ஒலிம்பியாட் பற்றி நம்மிடம் பேசிய பழனியப்பன், “இந்த இரண்டாவது அரங்கில், மொத்தம் 512 போர்டுகள் உள்ளன. மொத்தம் 1024 வீரர்கள் விளையாட முடியும். போட்டிக்கான ஏற்பாடுகள் 99% முடிந்துள்ளன. வீரர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

அங்கு ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்த உருகுவே நாட்டைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளரான சப்ரீனா, “நான் இந்தியாவுக்கு வருவது இதுதான் முதல் முறை. இங்கிருக்கும் மக்கள் அனைவரும் மிகவும் நட்பாக நடந்து கொள்கின்றனர். இங்கு உணவு மிகவும் அருமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கொரோனா தொற்றால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு செஸ் ஒலிம்பியாட் நடக்கிறது. அனைவரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.

அங்கு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வந்தார். அவரிடமும் சில கேள்விகளை கேட்டோம்.


“செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. போட்டியை நடத்த தயாராக இருக்கிறோம். இந்த போட்டிக்கான பணிச்சுமை அனைத்தையும் முதல்வரே ஏற்றுக்கொண்டார். பணிகளில் அவர் முழு கவனத்தையும் செலுத்தினார். இப்போட்டியின் சின்னமான தம்பியை உருவாக்க 5 நாட்களுக்கு மேல் விவாதித்தோம்.

கடைசியில் முதல்வர் கொடுத்த யோசனைப்படிதான் தம்பியை சின்னமாக தேர்ந்தெடுத்தோம். இதற்கு ‘தம்பி’ என்ற பெயரையும் முதல்வர்தான் வைத்தார். மக்களுக்குள் சகோதரத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கை வலியுறுத்தும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. போட்டிக்கு வரும் அனைவரும் திருத்தியாக தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

ஆக சர்வதேச செஸ் ஒலிம்பியாடுக்கு சென்னை ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...