குகதர்ஷன்
உள்ளொழுக்கு – மலையாள படம்.
தியேட்டரில கூட்டமே இல்லை. அப்ப நல்ல படமாத்தானிருக்கும்னு போனா… மாமியார் மருமகள் கதை. மாமியார் ஊர்வசி. மருமகள் பார்வதி. இரு நடிப்பு அரக்கிகளை வைத்து கவிதை செய்திருக்கிறார்கள்.
கேரளாவில் வெள்ளம் வந்திருந்த நேரத்தில் நடந்த கதை.
விதவை மருமகள் பேரன் பெற்றுத் தருவாள் என ஏங்குகிறாள் மாமியார். ஆனால், அந்த குழந்தையின் தந்தை தனது மகன் இல்லை என தெரிந்து இடிந்து போகிறாள் தாய். ஃபிளாஷ் பேக்கில் ஒரு காதல். ஒருபக்கம் காதலனின் காதல். மறுபக்கம் இறந்துபோன கணவனின் ஞாபகங்கள். இடையில் திணறும் பார்வதி நடிப்பு சூப்பர்.
ஊர்வசிக்கும் பார்வதிக்கும் நடிப்பில் பயங்கர போட்டி. பார்வதி சிறந்த நடிகையானாலும் வென்றது ஊர்வசிதான். நடிப்பா அது? உயிர் துடிப்பு. மகனை எண்ணி கலங்கும் காட்சிகள் பிரமாதம்…. “மோனே…” என்ற போது ‘அந்தப் பார்வை..’ காவியம்.
தன்னோடு இருக்குமாறு பார்வதியிடம் ஊர்வசி கெஞ்சும் காட்சியில் கண் கலங்குகிறது. உணர்ச்சி போராட்டத்திற்கு வெள்ளப் பெருக்கு ஒரு பின்புலம் காட்டுவது சிறப்பு.
முடிவு தெரிந்ததென்றாலும்… அதிலொரு நிம்மதி.
கருந்தேள் ராஜேஷ்
படம் முழுக்கவே உணர்வுகள்தான். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை ஊர்வசி, பார்வதி இருவரின் உணர்வு ரீதியான போர். இந்தப் போரில் பிற கதாபாத்திரங்கள் சின்னச்சின்ன உதவிகள் செய்திருக்கிறார்கள்.
படத்தின் தீம் – விரும்பாத திருமணம் (பெண்ணின் பக்கம்) & வலுக்கட்டாயமான திருமணம் (ஆணின் பக்கம்). இதனிடையே ஒரு காதலும் உண்டு. ஒரு மரணம் உண்டு. அந்த மரணத்தால் வெளிவரும் சில உண்மைகளும் உண்டு. இடைவிடாத பெருமழை பெய்து கொண்டிருக்கும்போது ஒருவரை எங்கே எப்படிப் புதைப்பார்கள்? என்ற கேள்வியும் உண்டு.
ஊர்வசிக்கென்றே சில முத்திரைக் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அதேசமயம் அந்தக் காட்சிகளுக்குப் பதில் காட்சிகளாக பார்வதியின் பாயிண்ட் ஆஃப் வியூவை வெளிப்படையாகச் சொல்லும் காட்சிகளும் உண்டு. சில காட்சிகளில் ஊர்வசியைப் பார்த்தால் கோபமும், சில காட்சிகளில் பரிதாபமும் வரும் வகையான கதாபாத்திரம்.
படத்தில் டெம்ப்ளேட்டாக ஒரு கதாபாத்திரம் வரும். அந்தக் கதாபாத்திரத்தால் படத்தின் இறுதியில் க்ளைமேக்ஸ் காட்சி என்னவாக இருக்கப்போகிறது என்பது பாதியிலேயே தெரிந்துவிடும். இதுவும் படத்தில் மைனஸ்களில் ஒன்று.
படத்தில் சில காட்சிகள் உங்களுக்கு நடந்ததுபோல இருந்தாலும் இருக்கும். அதுதான் படத்தின் வெற்றி. அதேசமயம் இரண்டே மணி நேரங்கள் ஓடினாலும், இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றும் தோன்றியது. பெங்களூரில் தியேட்டரில் ஆளே இல்லை. நாங்கள் இருவர். எங்களைத் தவிர மொத்தமே ஏழு பேர். திங்கள் காலை என்பது காரணமாக இருக்கலாம்.
உங்களுக்கு இரண்டு மணி நேரங்கள் முழுக்க முழுக்க மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு இடத்தில் நடக்கும் முற்றிலும் உணர்வு சார்ந்த ஒரு கதை ஓக்கே என்றால் தாராளமாகச் சென்று பார்க்கலாம்.
பி.கு – இந்தப் படம் பார்க்கையில் இன்னொரு தீம் தோன்றியது. சற்றே நகைச்சுவை கலந்து, ஒரு பிணத்தை ஒரு பெருமழைக் காலத்தில் எங்கே எப்படிப் புதைப்பது என்பதையே தனியாக ஒரு சினிமாவாகக் கொண்டு வரலாம் (Ee.Ma.Yau. போல அல்ல. நான் சொல்லும் சிச்சுவேஷன் இந்தப் படம் பார்த்தால் புரியும்).