No menu items!

அரசியலுக்கு அண்ணாமலை லீவ்! – மிஸ் ரகசியா

அரசியலுக்கு அண்ணாமலை லீவ்! – மிஸ் ரகசியா

“அடுத்த மூணு மாசத்துக்கு தமிழக பாஜக தமிழிசை கையில இருக்கப் போகுது” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அப்ப அண்ணாமலை?”

“அவர் படிப்பு சம்பந்தமா 3 மாசம் வெளியூர் போகப் போறாராம். அதுக்கு கட்சித் தலைமையும் ஒப்புதல் சொல்லியிருக்காம்.”

“எங்க போறார்? என்ன படிப்பு. அவர் இருபதாயிரம் புக் படிச்சவராச்சே. இன்னும் படிக்க வேண்டியது இருக்கா?”

“இப்படி மடமடனு கேள்வி கேட்டா எப்படி? அண்ணாமலை இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்துக்கு போறதா நியூஸ் இருக்கு. என்ன படிக்கப் போறார்னு தெரியல. இங்க ஐபிஎஸ் படிச்சதுக்கே ஆட்டம் தாங்கல். ஆக்ஸ்ஃபோர்ட்ல படிச்சா என்னாகுமோ…”

“இப்படினு யார் சொல்றா?”

“திமுக, அதிமுக இல்லை கமலாலயத்துலதான் இப்படி கமெண்ட் வருது. இந்த சூழல்லதான் தமிழிசையை டெல்லிக்கு வரச் சொல்லி அமித் ஷா சந்திச்சிருக்கார். ‘அண்ணாமலை ஏதோ படிப்புக்காக 3 மாசம் வெளிநாடு போறார். அவர் வர்ற வரைக்கும் நீங்க கட்சியை பார்த்துக்கங்க. கட்சில இருக்கிற பிரச்சினையையெல்லாம் சரி பண்ணுங்க. அதுதான் முக்கியம்’ன்னு இந்த சந்திப்புல தமிழிசைகிட்ட அமித் ஷா சொல்லி இருக்கிறதா ஒரு தகவல். அதனால தமிழிசை அக்காவுக்கு ரொம்பவே சந்தோஷம். கொஞ்ச நாளைக்கு அதிமுக பத்தி ஏதும் பேசிக்க வேண்டாம்னும் சொல்லி அனுப்பி இருக்காராம் அமித்ஷா.”

“தமிழிசை மாதிரியே ஆளுநரும் டெல்லி போயிருக்காரே? அவருக்கும் ப்ரமோஷனா?”

“ப்ரமோஷனெல்லாம் ஒண்ணும் இல்லை. 2019-ம் ஆண்டு மேகாலயா ஆளுநரா ஆர்.என்.ரவி பதவியேற்றார். அந்த வகையில் பார்த்தா அவர் ஆளுநராகி 5 வருஷம் முடியப் போகுது. அதனால பதவி நீட்டிப்பு சம்பந்தமா பேச அவர் டெல்லிக்கு போனதா சொல்றாங்க. ஆனா அங்க அவருக்கு பாசிடிவா ஏதும் நடக்கலையாம். தமிழக அரசியல்ல ஆளுநர் தலையிடறதால இங்க பாஜகவுக்கு கெட்ட பெயர் வருது. அதனால அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டாம்னு தமிழக பாஜகல இருந்து எதிர்ப்புக் குரல் வந்திருக்கு. டெல்லி தலைமையும் இதை ஏத்துக்கிட்டு இருக்கும். அதனால தமிழகத்துக்கு கூடிய சீக்கிரம் புது ஆளுநர் வரலாம்.”

தமிழிசை மாதிரி ரவியும் நேரடி அரசியலுக்கு வந்திடுவாரா?”

“வரலாம். இப்பவே அவர்தான் அண்ணாமலைக்கு நிறைய நியூஸ் சொல்றதுனு ஒரு தகவல் இருக்கு. சமீபத்துல இந்திராகாந்தியோட எமர்ஜென்சி பத்தி அண்ணாமலை பேசுனார்ல. அது கூட கிண்டி தலைவர் கொடுத்த தகவல்தானாம்”

“என்ன தகவல்?”

“இந்திராகாந்தி நாட்டை விட்டு கிளம்ப ரெடியா இருந்தார். விமானம் கூட காத்திருந்ததுன்ற மாதிரி அண்ணாமலை பேசியிருந்தார். இந்தத் தகவலை அண்ணாமலைக்கு கொடுத்தது கிண்டியார்தானாம். ஆனா அது தப்பான தகவல்னு சொல்றாங்க”

”என்ன தப்பு?”

“மக்கள் தன் மீது கோபமாய் இருந்ததால் இந்திராகாந்தி நாட்டை விட்டு ஓட இருந்தார், அதற்கான விமானத்தை அவரது மகன் ராஜீவ் காந்தி தயாராய் வைத்திருந்தார் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய்தான். மக்கள் மன்னித்துவிடுவார்கள். நாட்டை விட்டு ஓடாதீர்கள் என்று கூறி தடுத்தார் என்று அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் அதை மறுக்கிறார்கள் அரசியல் வரலாறு அறிந்தவர்கள். அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. அது மட்டுமில்லாமல் இந்திரா காந்தி மீது மொரார்ஜி கடும் கோபத்தில் இருந்தார். இடைத் தேர்தலில் போட்டியிட்டு இந்திரா வென்றபோது கூட அதை நாடாளுமன்றத்தில் தீர்மானம் போட்டு ரத்து செய்தார். அவரா இந்திராவுக்கு ஆலோசனை கொடுத்திருப்பார் என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள். இது வாட்சப் யுனிர்வசிட்டியில் தயாரிக்கப்பட்ட கட்டுக்கதை என்கிறார்கள்”

“ஏன் திடீரென்று எமர்ஜென்சி பற்றி பாஜகவினர் அதிகமாக பேசினார்கள். பின்னணி இருக்கா?”

“ஜூன் 25 எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட தினம். ஆனால் அது மட்டுமில்லை. எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட கட்சிகள், தலைவர்கள் பலர் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார்கள். அவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதற்கு இப்படியொரு திட்டத்தை பாஜக தலைமை போட்டது என்கிறார்கள்”

”சரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பத்தி நியூஸ் இல்லையா?”

“அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்கிட்ட டாக்டர் ராமதாஸ் பேசியிருக்காரு. அப்ப, ‘உங்க தலைவர்கிட்ட பேசி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல எங்களுக்கு ஆதரவு தரச் சொல்லுங்க. அப்படி செஞ்சா, சட்டமன்றத் தேர்தல்ல பாமக உங்களோட கூட்டணி அமைக்கும். அதுக்கு நான் உத்தரவாதம்’னு சொல்லி இருக்கார்.”

“அதுக்கு சி.வி.சண்முகம் என்ன சொன்னாராம்?”

“அண்ணா, நீங்க சொல்லித்தான் நாடாளுமன்ற தேர்தல்ல கூட்டணி தொடர்பா கட்சித் தலைவர்கிட்ட நான் பேசினேன். உங்களோட எல்லா கோரிக்கைகளையும் தலைவர் ஏத்துக்கிட்டார். ஆனா கடைசியில அன்புமணி சொன்னதை நம்பி பாஜகவோட நீங்க கூட்டணி வச்சீங்க. அதனால கட்சியில எனக்கு கெட்ட பெயர் வந்ததுதான் மிச்சம். இப்ப திரும்பவும் உங்க பேச்சைக் கேட்டு கூட்டணி பத்தி பேச நான் தயாரா இல்லைன்னு சி.வி.சண்முகம் கராறா சொல்லிட்டாராம்.”

“சி.வி.சண்முகம் சிபாரிசு பண்ணினாலும் பாமகவை ஆதரிக்கற மூட்ல அதிமுக இல்லைன்னு கேள்விப்படேனே.”

“ஆமாம். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பா சட்டமன்றத்துல அதிமுக ஆவேசமா போரிடும்போது பாஜகவோட சேர்ந்து பாமகவும் அமைதி காக்குதுன்னு எடப்பாடி நினைக்கறார். அதனால இனி பாமக உறவே வேணாம்னு அவர் முடிவு எடுத்திருக்கறதா சொல்றாங்க.”

“அப்ப சட்டமன்ற தேர்தல்லயும் அதிமுக கூட்டணியில பெரிய கட்சிகள் இருக்காதே?”

“நீதான் அப்படி நினைக்கற. ஆனா விஜய்யோட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானோட நாம் தமிழர் இயக்கத்தோட சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கறதுதான் எடப்பாடியோட ப்ளான். அவங்களோட விஜயகாந்த் கட்சியையும் கூட்டணியில தக்க வைக்க எடப்பாடி திட்டம் போடறாராம். அதிமுக உண்ணாவிரதத்துக்கு சீமான் ஆதரவு தெரிவிச்சதை இதுக்கான தொடக்கப் புள்ளியா பார்க்கலாம்.”

“சீமான் ஓகே… ஆனா விஜய் இதுக்கு சம்மதிப்பாரா?”

“தன்னோட கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இல்லைங்கிறதை விஜய் உணர்ந்திருக்கார். அதனால ஆந்திரால பவன் கல்யாண் செஞ்ச மாதிரி ஏதாவது கட்சியோட கூட்டணி அமைக்கறது அவரோட திட்டம். அப்படி கூட்டணி சேர்றதா இருந்தா பாஜக மற்றும் திமுகவைத் தவிர மற்ற கட்சிகளோட கூட்டணி வைக்கலாம்கிறது விஜய்யோட திட்டம். அந்த வகையில அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளோட கூட்டணி வைக்க விஜய் தயாரா இருக்கார். புதுச்சேரியைப் பொறுத்தவரை, விஜய் ஒரு வார்த்தை சொன்னால் பாஜக கூட்டணியை உதறித்தள்ள முதல்வர் ரங்கசாமி தயாரா இருக்காராம்.”

“சட்டமன்றத்துல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பா பெரிய அளவுல விவாதங்கள் நடந்துட்டு இருக்கு. ஆனா ஓபிஎஸ் அவைக்கே வராம இருக்காரே?”

“அவரோட இருக்கையை பின்வரிசைக்கு மாத்தினதுதான் இதுக்கு காரணம். இதுவரை கம்பீரமா முன்வரிசைல அமர்ந்த ஓபிஎஸ், இப்ப பின்வரிசைல இருக்கறதை அவமானமா நினைக்கறாரு. தன்னோட இருக்கையை முன்வரிசைக்கு மாத்தச் சொல்லி அவர் கடிதம் கொடுத்திருக்காரு. இருக்கை முன்வரிசைக்கு மாறினா மட்டும்தான் அவர் சட்டமன்றத்துக்கு வருவாராம். இதைக்கேள்விப்பட்ட அதிமுக உறுப்பினர்கள், ‘இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே’ங்கிற சினிமா டயலாக்கை சொல்லி சிரிக்கறாங்களாம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...