தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய வால்வுகளில் ஏற்பட்டிருந்த அடைப்பு பைபாஸ் சர்ஜரி மூலம் நீக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் இருந்த பிரச்சினைகள் என்ன? அவருக்கு பைபாஸ் சர்ஜரி எப்படி செய்யப்பட்டது? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் அசோக் குமார் அளித்த பேட்டி இங்கே.
இதய வால்வுகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பு சேர்ந்து, அது வால்வை முழுமையாக அடைத்து, ஹார்ட் அட்டாக்காக மாறுவதற்கு சில வருடங்கள் அல்லது மாதங்கள் ஆகும் என்பதுதான் பொதுவாக நம்பிக்கை. அதேநேரம், திடீரென்று ஏற்பட்ட பதற்றத்தால், மன அழுத்தத்தத்தால் இதயத்தில் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தத்தால் இதய அடைப்பு ஏற்பட்டது என்று கூறுவது சரியானதா?
இதய வால்வுகளில் அடைப்பு உருவாக சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும். அது கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக்கொண்டே வரும். அந்த அடைப்பு காரணமாக இதய வால்வு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அப்படி வெடிப்பதைத்தான் ஹார்ட் அட்டாக் என்று சொல்கிறோம். அந்த அடைப்பு அறிகுறிகள் இல்லாமலே இருக்கும். இதனால், அடைப்பு இருக்கும் பலர் அது தெரியாமலே நடமாடிக்கொண்டே இருப்பார்கள். இந்த அடைப்பு வெடிப்பாக, அதாவது ஹார்ட் அட்டாக்காக மாறுவதற்கு ஒரு அழுத்தம் தேவைப்படுகிறது. அது சர்க்கரை அளவு அதிகமாவது, பல நாள் தொடர்ச்சியாக தூக்கம் இல்லாமல் இருப்பது அல்லது மன அழுத்தமாகக் கூட இருக்கலாம். அதனால், ரத்தம் அழுத்தம் (பிபி) அதிகமாகும். அதனால் இதயத்தில் இருக்கும் அடைப்பு வெடித்து ஹார்ட் அட்டாக்காக மாறுவது அல்லது நெஞ்சு வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுபோல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய வால்வுகளில் அடைப்பு சில வருடங்களாகவே உருவாகி வந்திருக்கும். இப்போது அமலாக்கத்துறை விசாரணை தந்த அழுத்தத்தால் நெஞ்சு வலி வந்து, அதைத் தொடர்ந்து ஆஞ்சியோகிராம் சோதனை மூலம் அவருக்கு மூன்று இதய வால்வுகளில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருதயம் தொடர்ந்து இயங்குவதற்காக இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்ல மூன்று வால்வுகள் உள்ளன. அந்த மூன்று வால்வுகளிலும் அவருக்கு அடைப்பு இருப்பதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சை முடிந்துவிட்டது. அது தொடர்பாகவும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அமைச்சருக்கு எப்படி பைபாஸ் செய்யப்பட்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
சாலைகளில் பழுது பார்க்கும் வேலைகள் நடக்கும் போது அந்த இடத்தில் மாற்றுப் பாதை வழியாக வண்டிகளை திருப்பிவிட்டு மீண்டும் பிரதான சாலையில் கொண்டு சேர்ப்பதை பார்த்திருப்பீர்கள். இதே வழிமுறைதான் பைபாஸ் சர்ஜரியில் செய்யப்படுகிறது. அதாவது அடைப்பு இருக்கும் இடத்தில் எக்ஸ்ட்ராவாக ஒரு வால்வை இணைத்து அதன் வழியாக ரத்த ஓட்டம் தடங்கள் இல்லாமல் நடக்கச் செய்துவிட்டு, அடைப்பு இருக்கும் இடைத்தை சரி செய்வோம். சரிஜரி முடிந்ததும் மீண்டும் மெயின் வால்வு வழியாக ரத்த ஓட்டம் தடையில்லாமல் நடக்கும். இதுதான் பைபாஸ் சர்ஜரி.
ஆஃப் பம்ப், ஆன் பம்ப் என்று இரண்டு பைபாஸ் அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. இருதயம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற நிலைகளில், பைபாஸ் சர்ஜரியின்போது இருதயத்தை தூங்கச் செய்துவிடுவோம். அப்போது உடலுக்கு வெளியே இருக்கும் ஒரு இயந்திரத்தில் வால்வுகள் இணைக்கப்பட்டு அதன் மூலம் உடல் இயங்க தடையில்லாமல் ரத்த ஓட்டம் நடந்து கொண்டிருக்கும். சிகிச்சை முடிந்ததும் தூங்கச் செய்த இருதயத்தை மீண்டும் இயங்கச் செய்துவிடுவோம். இது ஆஃப் பம்ப் பைபாஸ் சர்ஜரி. இதில் கொஞ்சம் ரிஸ்க் உண்டு.
ஆன் பம்ப் பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தை தூங்கச் செய்யாமல் அது இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இருதய வால்வுகளில் இருக்கும் அடைப்புகளை நீக்குவது. இதில் ரிஸ்க் குறைவு. எனவே, இப்போது நிறைய இருதய அறுவைச் சிகிச்சைகள் ஆன் பம்ப்தான். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் ஆன் பம்ப் பைபாஸ் சர்ஜரி நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.