No menu items!

காணாமல் போன கோடீஸ்வரர்கள்!

காணாமல் போன கோடீஸ்வரர்கள்!

மோகன ரூபன்


திக்..திக்..திகில் தேடல்

ஒரேயொரு கண்ணாடி ஜன்னல், உட்கார்வதற்கு கொஞ்சம் இடம், சின்னதாக ஒரு கழிப்பறை, ஜில்லென்று குளிர்…

இதெல்லாம் என்ன என்கிறீர்களா? அட்லாண்டிக் கடலடியில் காணாமல்போன டைட்டன் என்ற குட்டிநீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிய வர்ணனைதான் இது.

1912ஆம் ஆண்டு, அட்லாண்டிக் பெருங்கடலில் ஐஸ்பெர்க் என்படும் மிதக்கும் பனிப்பாறை மோதி டைட்டானிக் உல்லாசக்கப்பல் மூழ்கிப்போனது தெரிந்த சங்கதித்தான். டைட்டானிக் திரைப்படத்தில் வரும் காதலர்கள் ரோஸ், ஜேக் போலவே, இந்தக் கப்பல் இப்போது 2 தனித்தனி துண்டுகளாக கடலின் அடியாழத்தில் கிடக்கிறது.

கடலில் மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் கண்டுவர, ஓசன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் என்ற தனியார் நிறுவனம் நீர்மூழ்கிச் சேவையை நடத்தி வருகிறது.

12 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் இருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்த்துவிட்டு திரும்பி வர 8 மணிநேரம் ஆகும். இதற்கான கட்டணம் 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். நம்மூர் கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்!

இந்தமுறை டைட்டானிக் கப்பலைப் பார்த்துவர, ஓசன்கேட் நிறுவனத்தின் நிறுவனர், 3 பெரும் பணக்காரர்கள், கூடவே பைலட் ஒருவரும் சென்றிருந்தனர். எம்.வி.போலார் பிரின்ஸ் கப்பல்மூலம், டைட்டானிக் மூழ்கிக் கிடக்கும் கடற்பரப்பில் இந்த ஐந்து பேர்களும் டைட்டன் என்ற குட்டிநீர்மூழ்கிக் கப்பல்மூலம் கடலுக்குள் இறக்கிவிடப்பட்டனர்.

பாவம். பெரிய அண்ணன் டைட்டானிக் கப்பலைப் பார்த்து வருவதற்காகப் போய், சின்னத்தம்பி டைட்டன் சிக்கலில் சிக்கிக்கொள்வார் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

சரியாக ஒரு மணிநேரம் 45 நிமிடம்! 4 ஆயிரம் மீட்டர் ஆழம்! அதுவரை டைட்டன் குட்டிநீர்மூழ்கிக் கப்பல் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. பிறகு திடீரென தொலைத்தொடர்பு அறுந்து போக,  ஒரு திகில் நிறைந்த திரைப்படம் போல பரபரப்பு தொடங்கி விட்டது.

22 அடிநீளமுள்ள டைட்டன், 5 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறிய கடற்கலம். அதன் உள்ளே இருப்பில் இருக்கும் ஆக்சிஜன் காற்றை வைத்து 96 மணிநேரத்துக்கு மட்டுமே சுவாசிக்க முடியும்.

டைட்டன், ஏற்கெனவே 50 முறை சோதனை செய்யப்பட்ட கப்பல்தான். பலமுறை 13 ஆயிரத்து 123 அடி ஆழத்தை எல்லாம் தொட்டு விட்டுத்திரும்பிய கப்பல்தான். ஆனால், டைட்டனைக் காணவில்லை என்ற தகவல்வந்தபிறகுதான், இந்த குட்டிநீர்மூழ்கி கலத்தைப் பற்றிய பல தகவல்கள் வெளியே கொட்ட ஆரம்பித்திருக்கின்றன.

‘டைட்டன் கலம், 5 அங்குல கனத்தில், வழக்கத்துக்கு மாறாக, மலிவான கார்பன் நாரிழை கூடவே டைட்டானியம் தகடுகளை கூட்டுச் சேர்த்து கட்டப்பட்ட கப்பல். போதாக்குறைக்கு, கோள வடிவத்துக்குப் பதிலாக குழாய் வடிவமைப்பில் கட்டப்பட்ட கலம் இது. இந்த வடிவமைப்பு, கடலடி அழுத்தத்தை சமமாக பகிர்ந்து பரவச் செய்யாது.

டைட்டனில் உள்ள ஜன்னல் கண்ணாடி 1,300 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடியது. டைட்டன் கலத்துக்குள் கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரிக்காற்றை நீக்குவதற்கான ஸ்கிரப்பர் கருவி எதுவும் இல்லை’ இப்படி கப்பல் கட்டுமான வல்லுநர்கள் குறை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

சரி. டைட்டனுக்கு என்னதான் நடந்திருக்கும்? ஒருவேளை தொலைத் தொடர்பு கருவி பழுதாகி இருக்கலாம். அல்லது மின்சக்தி போயிருக்கலாம். மின்சக்தி போய்விட்டால் ஆக்சிஜன் காற்றின் அளவு குறைந்து, கரிக்காற்றை அதிகம் சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி சுவாசித்தால் அறுவை சிகிச்சைக்கு முன் அனஸ்தீசியா தருவார்களே, அதைப்போல மயக்கநிலை ஏற்படும். ரத்தநாளங்களில் கரிக்காற்று ஏறி ஹைபர்கேப்னியா என்ற நிலை ஏற்படும்.

டைட்டன் குட்டிநீர்மூழ்கிக்குள் ஏற்கெனவே குளிர் கொட்டமடித்தபடி இருக்கும். அந்த கலம் ஒருவேளை கடலடியில் தரைதட்டியிருந்தால், குளிர் அதிகமாகி உள்ளே இருப்பவர்களுக்கு ஹைபோதெர்மியா நிலை ஏற்பட வாய்ப்புண்டு. மின்சக்தி இல்லாவிட்டால் இந்த குட்டி கலத்துக்குள் ஹீட்டர் வேலை செய்யாது. அது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். தவிர டைட்டனில் நீர்க்கசிவு ஏற்பட்டு அதனால்கூட விபத்து நேரிட்டிருக்கலாம்.

இதோ, இந்த நிமிடம் வரை, டைட்டன் குட்டி நீர்மூழ்கிக் கப்பல், அதன் உள்ளே இருந்து ஐந்து பேர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அட்லாண்டிக் கடலில் 10 ஆயிரம் சதுர மைல் பரப்பளவில் 12 கப்பல்கள், பலப்பல விமானங்கள், ஆளின்றி இயங்கும் தானியங்கி நீர்மூழ்கிக் கலங்கள், குட்டி நீர்மூழ்கி ரோபோக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு, மலேசியப்பயணிகள் விமானமான எம்.எச்.370 காணாமல் போனபோது ஏற்பட்ட பரபரப்பு, 2000ம் ஆண்டில் ரஷிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் விபத்தில் சிக்கியபோது ஏற்பட்ட அதே பரபரப்பு, இப்போது டைட்டன் குட்டிநீர்மூழ்கிக் கப்பல் சம்பவத்திலும் ஏற்பட்டுள்ளது.

மகிழ்ச்சிகரமான நல்ல முடிவுக்காக உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...