No menu items!

தமிழ்நாட்டின் துப்பாக்கிப் பெண் – யார் இந்த எஸ்.ஐ.மீனா?

தமிழ்நாட்டின் துப்பாக்கிப் பெண் – யார் இந்த எஸ்.ஐ.மீனா?

இப்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்படும் பெயர் காவலர் சப் இன்ஸ்பெக்டர் மீனாதான்.

காரணம் தப்பி ஓடிய ரவுடியை சுட்டுப் பிடித்திருக்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக துப்பாகியால் சுட்டு ரவுடியை பிடித்த பெண் என்ற பெருமை எஸ்.ஐ. மீனாவுக்கு கிடைத்திருக்கிறது.

என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

கடந்த 20ஆம் தேதி அதிகாலையில் அயனாவரத்தில் காவல் துறையினர் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு பைக்கை நிறுத்தியபோது பைக்கில் இருந்த மூன்று பேர் அங்கிருந்த காவலர்களை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்கள்.

அவர்களில் இருவரை போலீஸ் பிடித்துவிட்டது. சூர்யா என்ற ஆள் மட்டும் தப்பிச் சென்று திருவள்ளூரில் ஒளிந்திருக்கிறார். அவரை கண்டுபிடித்து சென்னைக்கு அழைத்து வந்த போது சூர்யா தப்பி ஓடியிருக்கிறான்.

அவனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்திருக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் மீனா.

தமிழ்நாட்டு வரலாற்றில் பெண் காவல் அதிகாரி துப்பாகியால் சுட்டு தப்பியோடியவர்களைப் பிடிப்பது இதுதான் முதல் முறை.

இத்தனை வீரத்துடனும் தீரத்துடனும் செயல்பட்ட எஸ்.ஐ.மீனா யார்?

அவரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மீனாவின் சொந்த ஊர். மதுராந்தகம் பக்கத்தில் உள்ள தண்டரை குறிச்சேரி கிராமம்.

பெற்றோர்கள் தனசேகரன், பத்மாவதி தம்பதியினருக்கு இவர் இரண்டாவது குழந்தை.

மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பா தினசரி கூலி வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

தனது கிராமத்தில் இருந்து மூன்று கி.மீ நடந்து சென்று வேடந்தாங்கலில் உள்ள பள்ளியில் படித்திருக்கிறார் மீனா.

பள்ளி படிப்பு முடிந்த பிறகு காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி பெண்கள் கல்லூரிக்கு சென்று பி.பி.ஏ.படிப்பு.

வசதி இல்லாததால் அரசு இலவச ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறார்.

குடும்பத்தில் வறுமை. அண்ணன் ஹரி குடும்பத்தைக் காப்பாற்றவும் தங்கையைப் படிக்க வைப்பதற்காகவும் தனது படிப்பைவிட்டுவிட்டு மும்பைக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். தான் படிக்கவில்லையென்றாலும் தன் தங்கை மீனா நன்றாக படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் என்பது அவர் எண்ணம்.

மீனாவுக்கு சிறு வயதிலேயே காவல்துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. அண்ணனிடம் ‘நான் போலீஸ் வேலைக்குதான் போவேன்’ என்று கூறியிருக்கிறார். அண்ணன் ஹரிக்கும் அதில் மகிழ்ச்சி. தன் தங்கை படித்து காவல்துறையில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவருக்கும் இருந்திருக்கிறது.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் 2009ல் காவல்துறையில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார் மீனா.

காவல்துறை பயிற்சி காலத்திலேயே துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடிப்பாராம். துப்பாக்கி சுடுவதில் பல மெடல்களை வாங்கியிருக்கிறார்.

காவல் துறையில் சேர்ந்தப் பிறகு அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது.

பள்ளியில் தன்னுடன் படித்த ராஜேஷ்ஷை அவர் காதலித்து வந்தார். வேலை கிடைத்தவுடன் தான் திருமணம் என்ற முடிவுடன் இருவரும் இருந்திருக்கிறார்கள்.

ராஜேஷ் பி.காம் படித்தவர். தனியார் வங்கியில் பணிபுரிபவர். இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடந்திருக்கிறது.

மீனாவுக்கு சப் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கான தேர்வுகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் அவர் கணவர் ராஜேஷ்.

மனைவி படிப்பதற்கு உடன் இருந்து உதவி செய்திருக்கிறார். அந்தக் காலக் கட்டத்தில் மனைவியுடன் இருப்பதற்காக வேலையையும் ராஜினாமா செய்திருக்கிறார்.

மனைவி படிப்பதற்கு நீ ஏன் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் ராஜேஷ் விமர்சனங்களை பொருட்படுத்தவில்லை. என் மனைவியின் கனவு நிறைவேற அவளுடனே இருப்பேன் என்று மீனாவுடனேயே அவர் படிப்புக்கு உதவியாக இருந்திருக்கிறார். அவருக்கு பாடங்களைச் சொல்லித் தருவது, பயிற்சித் தேர்வுகளை நடத்துவது என்று கூடவே இருந்திருக்கிறார்.

கணவரின் உதவி, ஊக்கம், உற்சாகத்தினாலும் தன்னுடைய கடுமையான முயற்சியினாலும் 2016ஆம் ஆண்டு மீனா சப் இன்ஸ்பெக்டராக தேர்வானார்.

சப் இன்ஸ்பெக்டர் பயிற்சிக்கு செல்வதற்கு முன்பு மீனாவிற்கு குழந்தை பிறந்தது. குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ பயிற்சிக்கு செல் என்று தைரியம் கொடுத்திருக்கிறார் கணவர் ராஜேஷ்.

காவல்துறை பணி என்பது நேரம் இல்லாத பணி. பல சமயங்களில் வீட்டுக்கே செல்ல இயலாத நிலை ஏற்படும். அப்போதெல்லாம் கணவரின் குடும்பத்தினர் மீனாவுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். தங்கள் மருமகள் கடமையுணர்ச்சியுடன் செயல்படுவதை பெருமையாக கருதுகிறார்கள். மீனாவின் குடும்பத்தினருக்கும் தங்கள் மகள் சப் இன்ஸ்பெக்டராக இருப்பது மகிழ்ச்சிதான்.

குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாவிட்டாலும் தான் இருக்கும் நேரங்களில் குடும்பத்தினரை நன்றாக கவனித்துக் கொள்வது மீனாவின் வழக்கம் என்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

தனது பணியிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார் மீனா.

குற்றவாளிகளை எக்காரணம் கொண்டும் தப்ப விட்டுவிடக் கூடாது என்ற உறுதியுடன் இருப்பாராம் மீனா.
அந்த உறுதியும் வீரமும்தான் அவரை துப்பாக்கியால் சுட வைத்திருக்கிறது.

மீனாவுக்கு ஒரு ரோல் மாடல் இருக்கிறார். அது இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வந்தால் அந்தப் பகுதியில் கிரிமினல்களே இருக்க மாட்டார்களாம். எல்லோரும் ஓடிவிடுவார்களாம். அவர்தான் தன் ரோல் மாடல் என்று தனது நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் மீனா.

துப்பாக்கியால் சுட்டு ரவுடியைப் பிடித்ததற்கு பின்னணியில் அவருடன் பணிபுரிந்த காவலர்களும் அவர்களை வழி நடத்தும் உதவி கமிஷனர் ஜவஹரும் இருக்கிறார்கள்.

குற்றவாளிகளை பிடிக்கும் சிறப்புப் படையில் இருக்கிறார். இதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்.

ஒரு முறை ராமநாதபுரத்துக்கு குற்றவாளிகளைப் பிடிக்க மீனா சென்ற போது அங்கிருந்த மக்கள் ஆச்சர்யப்பட்டார்களாம். சினிமாவில்தான் துப்பாகியுடன் பெண் போலீஸ் வருவதை பார்த்திருக்கிறோம் என்றார்களாம்.

காவல் பணியில் இருக்கும்போது காயங்களும் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு குற்றவாளியைப் பிடிக்க விரட்டி சென்றபோது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்திருக்கிறார் மீனா. அத்தனை பெரிய காயம்.

இப்போது காயம் குணமாகி மீண்டும் பணி.

மீனாவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள். வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

மீனா போன்றவர்கள் காவல்துறையில் அதிகரித்தால் குற்றங்கள் மட்டுமல்ல – குற்றவாளிகளும் தானாகவே குறைந்துவிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...