ஸ்விக்கி ஆர்டர் பட்டியலில் இந்த வருடமும் பிரியாணிதான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிரியாணி முதலிடத்தில் இருப்பது இது எட்டாவத் முறை.
ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த வருடத்தில் தங்களிடம் அதிகமாய் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிடுகிறது. இந்த முறையும் வெளியிட்டிருக்கிறது.
கடந்த வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் அதிக மாற்றமில்லை. மக்கள் கூடுதலாக உணவு வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த வருடப் பட்டியலிலும் முதலில் இருப்பது பிரியாணி. ஒரு நொடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகள் வாங்கப்பட்டது என்கிறது அந்தப் பட்டியல். முக்கியமாய் சிக்கன் பிரியாணிதான் முந்தியிருக்கிறது. 5.5 சிக்கன் பிரியாணிகளுக்கு ஒரு வெஜிடேபிள் பிரியாணி என்ற விகிதத்தில் சைவ பிரியாணியும் வாங்கியிருக்கிறார்கள்.
புதிதாய் ஸ்விக்கியியில் ஆர்டர் செய்தவர்களில் 25 லட்சம் பேர் பிரியாணியை தங்கள் முதல் ஆர்டராக கொடுத்திருக்கிறார்கள். சுமார் 40 லட்சம் பேர் பிரியாணியை ஸ்விக்கியில் தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் வாங்கப்பட்ட 6 பிரியாணிகளில் ஒன்று ஹைதராபாத்தில் வாங்கப்பட்டிருக்கிறது என்ற கூடுதல் தகவலையும் தந்திருக்கிறது ஸ்விக்கி. ஒருவர் கடந்த வருடத்தில் மட்டும் 1633 பிரியாணிகள் வாங்கியிருக்கிறார்.
உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின்போது ஒரு நிமிடத்துக்கு 250 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன. மேட்சைப் பார்த்தார்களா பிரியாணியை சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை. இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியின்போது பீட்சாக்கள் அதிகம் விற்றிருக்கிறது. ஒரு நிமிடத்தில் 188 பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன.
பிரியாணி அதிகமாய் விற்ற நாள் ஜனவரி 1 2023. மொத்தமாக 4.3 லட்சம் பிரியாணிகள் ஸ்விக்கி மூலம் விற்பனையாகியிருக்கிறது. அன்று 83 ஆயிரத்து 500 நூடுல்ஸும் விற்றிருக்கிறது.
இந்த வருடம் ஸ்விக்கியில் ஒருவர் 42 லட்ச ரூபாய்க்கு உண்வுகள் வாங்கியிருக்கிறார். மகராஷ்டிராவை சார்ந்த இவர் ஆர்டர் செய்ததுதான் இந்தியாவிலேயே மிக அதிகம்.
சைவர்களின் முதல் சாய்ஸ் மசாலா தோசை. பொதுவாய் மசாலா தோசையை சுடச்சுட வீட்டிலோ ஓட்டலிலோ சாப்பிட விரும்புவார்கள். ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்து மசாலா தோசை வாங்கியிருப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது.