No menu items!

விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

ஆய்வுப் பணிகளுக்காக விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸை வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியுமா? அப்படியே கொண்டுவந்தாலும் அவரது உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படுமா என்பதுதான் அறிவியல் உலகின் இப்போதைய முக்கிய கேள்வியாக இருக்கிறது.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் சேர்ந்து கடந்த மாதம் 5-ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். 5-ம் தேதி பூமியில் இருந்து புறப்பட்ட சினிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் 7-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். பொதுவாக நாசா அமைப்பின் விண்கலத்தில்தான் விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்ப்ப்படுவார்கள். ஆனால் முதல் முறையாக ஸ்டார்லைனர் என்ற தனியார் நிறுவனத்தின் விண்கலத்தில் விஞ்ஞானிகள் அனுப்பப்பட்டனர்.

தாமதமான பயணம்

நாசாவின் திட்டப்படி, அவர்கள் இருவரும் சுமார் ஒரு வார காலம் மட்டுமே விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருக்க வேண்டும். அதன்பிறகு 13-ம் தேதி அவர்கள் அங்கிருந்து பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியவில்லை. முதலில் அவர்கள் 13-ம் தேதி திரும்புவார்கள் என்று அறிவித்த நாசா, பின்னர் 26-ம் தேதி திரும்புவார்கள் என்று அறிவித்தது. ஆனால் அன்றைய தினமும் அவர்களால் திரும்ப முடியவில்லை. அவர்கள் பயணிக்க வேண்டிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இதற்கு காரணமாக கூறப்பட்டது.

விண்கலத்தில் என்ன பிரச்சினை?

விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் திரும்ப வேண்டிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் நிரப்பப்பட்டிருந்த ஹீலியம் எரிவாயு 5 இடங்களில் கசிவதாக முதலில் கண்டறியப்பட்டது. விண்கலத்தை இயக்குவதில் அதில பொருத்தப்பட்டுள்ள ‘த்ரஸ்டர்’ கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விண்கலத்தில் மொத்தம் 28 த்ரஸ்டர்கள் உள்ளன. ஹீலியம் எரிவாயு கசிவால் இந்த 28 த்ரஸ்டர்களில் 5 த்ரஸ்டர்கள் பழுதாகி உள்ளன. இதில் 4 த்ரஸ்டர்கள் இதுவரை சரிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள த்ரஸ்டரை சரிசெய்து, ஹீலியம் எரிவாயு கசிவை நிறுத்த நாசா விஞானிகள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.

உடல்நலப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு

குறிப்பிட்ட காலத்தைவிட அதிக நாட்கள் விண்வெளியில் தங்குவதால், சுனிதா வில்லியம்ஸுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிக அளவில் கதிர்வீச்சை எதிர்கொள்வதால் சிறுநீரகத்தில் கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பூஞ்சைத் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர்களை விரைவாக பூமிக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் விண்கலத்தை சீரமைக்கும் பணிகள் முடிந்து வருவதாகவும் சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் விரைவில் பூமிக்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ தலைவர் கருத்து

சுனிதா வில்லியம்ஸுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பரிசோதனை முயற்சியாக முதல் முறை விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்ததற்காக அவரது தைரியத்தை பாராட்ட வேண்டும். அதில் ஏற்பட்ட ஹீலியம் எரிவாயு கசிவால் த்ரஸ்டர்கள் இயங்காததை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. அதனால் அவர் பூமி திரும்பவுதில் தாமதம் ஏற்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பாதுகாப்பான இடம். அங்கு தற்போது மொத்தம் 9 விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். அனைவரும் ஒருநாள் பூமி திரும்பியாக வேண்டும். தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் தாமதத்தால் அவர்கள் ஒர் இடத்தில் சிக்கி கொண்டதாக கருதக்கூடாது. அவர்களை பூமி அழைத்து வரும் திறன் நாசாவுக்கு உள்ளது.

இப்போதுள்ள பிரச்சினை புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தையும், அது விண்ணுக்கு சென்று மீண்டும் பூமி திரும்பும் திறனையும் பரிசோதிப்பதுதான். விண்வெளி வீரர்கள் நீண்ட நாட்கள் தங்குவ தற்கு சர்வதேச விண்வெளி மையம் பாதுகாப்பான இடம். சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பவேண்டும். அவர் தனது பயண அனுபவங்களில் கற்றதை விண்கலம் உருவாக்குவதற்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் சோம்நாத் கூறினார்.

அவர் சொன்னபடி சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வந்தால் மகிழ்ச்சிதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...