மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமான கலையரசன், இப்போது மெட்ராஸ்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார். வாலி மோகன்தாஸ் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மெட்ராஸ்காரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலையரசன் பேசியதாவது…
என் சொந்த ஊர் மெட்ராஸ். அந்த படத்தில் மூலம் பேசப்பட்டேன். இப்போது இந்த தலைப்பில் நடிக்கிறேன். எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இப்போதெல்லாம் ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர் ஓடிடி என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது.
இதில் சாம்.சி.எஸ் இசை பிரமாதமாக உள்ளது. என்னுடைய அடுத்த படத்திற்கும் சாம் சி எஸ் தான் இசையமைப்பாளர். அவர் இசை எப்போதும் நம்முடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம்தான், ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும்.
பல படங்களில் என் கேரக்டரை சாகடித்து விடுகிறார்கள். கதைக்காக அப்படி என்றாலும் சில சமயம் வருத்தமாக உள்ளது. இனிமேல் நல்ல அழுத்தமான கதைகளில் நடிப்பேன். இங்கே சில விஷயங்கள் ஆரோக்யமாக இல்லை இல்லை. மலையாளத்தில் மல்டிஸ்டார் படம் அதிகம். ஒரு நடிகர் சின்ன படம், சின்ன கேரக்டர் பண்ணுகிறார். பின்னர் அவரே ஹீரோவாக நடிக்கிறார். இங்கே அப்படி இல்லை. தொடர்ச்சியாக ஒரே மாதிரி வேடம் தருகிறார்கள். ஒரு ரோல் சாகிறது என்றால் என் பெயரை எழுதுகிறார்கள். ஒரு புது ஹீரோ என்றாலும், அந்த படத்தில் என்னை 2-வது ஹீரோவாக புக் பண்ணுகிறார்கள். என்னை 2வது இடத்தில் வைத்து இருக்கிறார்கள். அதேசமயம், பாராட்டுகளை ஏற்பது மாதிரி, விமர்சனங்களை ஏற்கிறேன்.
இவ்வாறு கலையரசன் பேசினார்.