இந்திய குடும்பங்களின் கடன் உயர்ந்து, சேமிப்புகள் குறைந்திருப்பதாக நிதி நிறுவனமான மோதிலால் ஒஸ்வால் (Motilal Oswal) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. விலைவாசி உயர்வும் மக்களின் வருமானத்தில் ஏற்பட்ட சரிவும் இந்திய மக்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது குறித்த இந்த அறிக்கை பொதுத் தேர்தலுக்கு முன்பு வெளிவந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?
நிதிச்சேவை நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், இந்திய மக்களின் கடன் மதிப்பு, சேமிப்பு தொடர்பான தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின்படி, மக்கள் கடன் சுமை நாட்டின் ஜிடிபியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இதுபோல் சேமிப்பும் ஜிடிபியில் 5 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவலையும் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், “வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால், உத்தரவாதமின்றி வழங்கப்படும் தனி நபர் கடன்கள் காரணமாக, மக்களின் கடன் சுமை வெகுவாக அதிகரித்து விட்டதை அறிய முடிகிறது. குடும்ப வருவாய் குறைவாகவே நீடிப்பதால், சேமிப்பு மிக குறைந்த பட்ச அளவாக, அதாவது ஜிடியில் 5 சதவீதமாக உள்ளது.
கடந்த நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அதாவது மார்ச் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியக் குடும்பங்களின் மொத்த நிதி சேமிப்பு (gross financial savings) 2022-23ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 10.5 சதவீதத்திலிருந்து 10.8 சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன்களும் 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 2022-23ஆம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் வாங்குதல் (annual borrowings) அளவீடு, உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது சுதந்திர இந்தியாவில் இரண்டாவது அதிகப்படியான உயர்வாகும். 2022-23ஆம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் கைவச சேமிப்பு பத்தாண்டுகளின் உச்சத்தை எட்டியபோதிலும், அவற்றின் மொத்த சேமிப்பு ஜிடிபி-யில் 18.4 சதவீதமாக ஆறு ஆண்டுகளின் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு சேமிப்பு (GDS) 2013-14 மற்றும் 2018-19க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான 31-32 சதவீத வரம்பைவிட 30.2 சதவீதம் என்ற குறைவான அளவீடாக உள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துதான் இந்த ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் மோதிலால் ஒஸ்வால், “இந்தியக் குடும்பங்களின் வருமானம் தொடர்ந்து பலவீனமாக இருப்பதுடன், இதனால் ஜிடிபியில் சேமிப்பின் அளவு 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைவானது வியப்புக்குரியதாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
விவசாயிகள், வர்த்தகர்கள் பலரும் கடன் சுமையில் சிக்கி தவிப்பதையும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், மக்களின் சேமிப்பு 2022-23 நிதியாண்டில் 5.1 சதவீதமாக சரிந்துவிட்டது என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2022-23 நிதியாண்டுக்கான மதிப்பீட்டிலும், மக்களின் நிகர சேமிப்பு ஜிடிபியில் 5.3 சதவீதமாகத்தான் இருந்தது. இதுவும் 47 ஆண்டுகளில் இல்லாத சரிவுதான். இதை விட மிக மோசமான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்பதையே மோதிலால் ஓஸ்வால் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குடும்பங்கள் கடன் சுமை அதிகரிக்க என்ன காரணம்?
இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைவானதற்கு கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவையே முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக எரிபொருள், தங்கம் உள்ளிட்டவற்றின் பொருட்கள் கடுமையான விலை உயர்வைக் கண்டு வருவதால் குடும்பங்களில் சேமிப்பு அளவு குறைந்து வருகிறது.
மேலும், பொருட்களின் விலை உயரும் அளவுக்கு மக்களின் வருமானம் உயராததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் இந்திய குடும்பங்கள் சேமிக்கும் அளவைக் குறைத்துவிட்டு, அத்தியாவசிய செலவுக்கான தொகையை அதிகப்படுத்திவிட்டனர். இதனால்தான் இந்தியர்களின் பாரம்பரிய பழக்கமான சேமிப்புத் திறன் குறைந்து கடன் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது என சொல்லப்படுகிறது.
“ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வதும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்த பிறகு மக்களின் சேமிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. யுபிஐ மூலம் சுலபமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை முறைகளால் பணம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையே மக்கள் அறிவதில்லை. இதுவும் சேமிப்பு குறைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
மக்களின் கடன் சுமை அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘இது இந்திய பொருளாதாரத்துக்கான எச்சரிக்கை மணி. ஆனால், மோடி இதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவரது ஆட்சியில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, சமத்துவமின்மை ஆகியவை அதிகரித்து விட்டது. மக்கள் பாடுபட்டு சேர்த்து வைத்த நகைகளை கூட அடகு வைத்து கடன் வாங்க வேண்டிய அவல நிலைக்கு வந்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.