சிவகார்த்திகேயன் நடிக்க, ஆறு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படம் ‘அயலான்’.
பொங்கலுக்கு வெளியான படங்களில் அயலானுக்கும், கேப்டன் மில்லருக்கும்தான் போட்டி என எதிர்பார்க்கப்பட்டது. தன்னை அறிமுகப்படுத்திய தனுஷின் படத்திற்கு எதிராக தன்னுடைய படத்தையும் சிவகார்த்திகேயன் களத்தில் இறக்கியதால் இந்த எதிர்பார்பு உருவானது.
இந்த பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் சிவகார்த்திகேயன் முன்னணி இடத்தைப் பிடித்துவிட்டார். இதனால் சிவகார்த்திகேயனுக்கு சந்தோஷம் மிக மிக அதிகமாம்.
இசையமைப்பாளர் இமான் கூறிய பிரச்சினைக்கும் பின்பாக தன்னுடைய படத்திற்கு இந்தளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பதுதான் சிவகார்த்திகேயனின் சந்தோஷத்திற்கு காரணம்.
கேப்டன் மில்லரா அயலானா என்ற கேள்விக்கு விடையாக வசூலில் கேப்டன் மில்லரை அயலான் முந்தியிருக்கிறது. இந்த சந்தோஷத்தைக் கொண்டாடுகையில், தெலுங்குப் பக்கமும் இதே போட்டி நிலவியிருக்கிறது. காரணம் இந்த இருப்படங்களிலும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கின்றன.
அயலானை தெலுங்கில் நினைத்த நாளில் வெளியிட முடியாமல் போனது. வார இறுதியில் வெளியிட்டால் வசூலைப் பார்க்கலாம் என நினைத்த சிவகார்த்திகேயனுக்கு அது நிறைவேறாமல் போய்விட்டது.
அடுத்து எல்லாம் தயார் என பிரம்மாண்டமான ரிலீஸூக்காக காத்திருந்த அயலானுக்கு அடுத்தடுத்து பிரச்சினை. இதனால் சட்டரீதியான பிரச்சினையால் இப்படம் தெலுங்கு பேசும் ஏரியாக்களில் வெளியிடமுடியாமல் போனது. பல காட்சிகள் அங்கே ரத்தானது.
இப்படி காட்சிகள் ரத்தாக காரணம், தெலுங்கு ரிலீஸ் தொடர்பாக இருந்த நிதிப்பிரச்சினைகள்தான். இதனால் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுக்கவேண்டிய கட்டாயமும் உருவானது. விளம்பரங்களை அதிகம் செய்த போதிலும், குறித்த நேரத்தில் படம் வெளியாக முடியாமல் போனது.
இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படமும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பினாலும், இந்தப்படமும் தெலுங்கில் சரியாக ஓடவில்லை.
தொடர் தோல்விகள், சிவகார்த்திகேயனின் தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சிக்கு தடையாக இருந்து வருகின்றன.
ஆனால் மறுபக்கம் சிவகார்த்திகேயன் யாரை முந்த வேண்டுமென நினைக்கிறாரோ அதே தனுஷின் படங்கள் ஓரளவிற்கு தெலுங்கில் வசூலை அள்ளி வருகின்றன. மேலும் தனுஷ் தெலுங்கு இயக்குநர்களின் படங்களில் நடிப்பதை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது.