கிரிக்கெட் வீர்ர்களின் புகழை ரோலர் கோஸ்டரோடு ஒப்பிட்டு சொல்லலாம். எப்போது உயரத்துக்கு போவார்கள்… எப்போது கீழே இறங்குவார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் சுப்மான் கில்.
2023-ம் ஆண்டில் இந்திய அணியின் நாயகனாக இருந்தவர் சுப்மான் கில். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் உள்ளிட்ட பல சதங்களை அடித்த சுப்மான் கில், விராட் கோலியையும் தாண்டி இந்திய ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார். ஐசிசி தரவரிசை பட்டியலிலும் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆடாததால், அந்த நாற்காலியின் கால்கள் ஆட்டம் காண தொடங்கின.
உலகக் கோப்பைக்குப் பிறகும் அவர் சொல்லிக்கொள்ளும் வகையில் ஆடாததால், வீழ்ச்சியின் வேகம் அதிகமானது. அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் கில் பேட்டிங்கில் சொதப்பியதுடன், இந்தியாவும் தோற்றதால் கில்லின் ரோலர் கோஸ்டர் பயணம் ஆட்டம் காண தொடங்கியது. அவரை ரசிகர்கள் வில்லனாக பார்க்கத் தொடங்கினர். கடைசி 9 இன்னிங்ஸ்களில் கில் மொத்தமாகவே 153 ரன்களைத்தான் எடுத்திருந்தார் என்பதால் அவரைப் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
“புஜாரா, ரஹானே, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீர்ர்கள் இருக்கும்போது தேவையில்லாமல் கில்லுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன” என்று பல முன்னாள் வீர்ர்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பினர்.
எதிர்ப்புகள் அதிகமாவதை அறிந்த தேர்வுக்குழு, கடந்த சில நாட்களுக்கு முன் கில்லை அழைத்து பேசியிருக்கிறது. “விசாகபட்டினத்தில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிதான் உங்களுக்கான கடைசி வாய்ப்பு. இதிலும் சரியாக ஆடாவிட்டால் அணியில் இருந்து விலக்கப்படுவீர்கள். பின்னர் பஞ்சாப் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடி, மீண்டும் உங்களை நிரூபித்த பிறகுதான் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆட அடுத்த வாய்ப்பு கிடைக்கும்” என்று அவருக்கு திட்டவட்டமாக சொல்லப்பட்டது.
தேர்வுக் குழுவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ரஞ்சி போட்டியில் ஆட கில்லும் தயாராகி இருந்தார். “விசாகபட்டினம் டெஸ்ட் முடிந்த்தும் 9-ம் தேதி பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே தொடங்கவுள்ள ரஞ்சி போட்டியில் ஆடப் போகிறேன்” என்று பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருந்தார் சுப்மான் கில். அதற்கான காரணத்தையும் சொல்லியிருந்தார்.
மகனின் இந்த தகவலைக் கேட்டதும், அவரை சமாதானப்படுத்த குடும்பத்தோடு விசாகபட்டினம் வந்துவிட்டார் சுப்மான் கில்லின் அப்பா லக்வீந்தர் சிங். சிறு வயதில் மகனுக்காக வயலை காலியாகப் போட்டு மைதானம் அமைத்தவர் அவர். அந்த மைதானத்தில் உள்ளூர் பந்துவீச்சாளர்களை எல்லாம் கொண்டுவந்து சுப்மான் கில்லுக்கு பயிற்சி கொடுத்தவர் அவர்.
இப்போது சோர்ந்து நின்ற மகனை தேற்றிய அவர், “உன் பழைய ஆட்டத்தை திரும்ப வெளிப்படுத்து” என்று தட்டிக் கொடுத்து அவரை தேற்றினார். போட்டி நடக்கும்போது மைதானத்திலேயே சுற்றி வந்தார்.
லக்வீந்தர் சிங்கின் நம்பிக்கை வார்த்தைகளும், மைதானத்தை சுற்றி வந்ததும் பலனளித்தன. மைதானத்தில் அப்பா இருக்கும் நம்பிக்கையாலும், அவர் கொடுத்த உற்சாகத்தாலும், விசாகபட்டினம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தார் சுப்மான் கில். கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது.
இந்த சதத்துக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்மான் கில், இதற்கு காரணம் தனது அப்பாதான் என்பதை மறுக்கவில்லை. “என் கிரிக்கெட் பயணத்தில் அவர் அளித்த உற்சாகத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவர் மைதானத்தில் இருந்தது எனக்கு புத்துணர்ச்ச்சியை அளித்தது. இப்போதுகூட சதம் அடித்ததற்காக என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. கடைசியில் தேவையில்லாமல் ஷாட் அடிக்கப்போய் அவுட் ஆனதற்கு அப்பா திட்டுவாரோ என்ற பயம்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார் சுப்மான் கில்.