No menu items!

சிறுகதை: அதிபர் – என். சொக்கன்

சிறுகதை: அதிபர் – என். சொக்கன்

https://soundcloud.com/sap-tamizhaa/n-chokkan-short-story
இக்கதையை எழுத்தாளர் என். சொக்கன் குரலில் கேட்க

சுந்தரேசன் ஒரு தொழிலதிபராகவேண்டும் என்று தீர்மானித்து பல ஆண்டுகளாகிறது.

ஏன் என்றா கேட்கிறீர்கள்? அந்த வார்த்தையைக் கவனித்தாலே புரியுமே.

தொழில் அதிபர்… யாராவது தொழில் அதிபன் என்று சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? பெயரிலேயே மரியாதையைக் கொண்டிருக்கும் கௌரவம் அது.

சுந்தரேசனுக்கு மரியாதைதான் பெரிய பிரச்சினை. அவரை யாரும் மதிப்பதில்லையே என்று மிகவும் குறைப்பட்டுக்கொள்வார்.

இத்தனைக்கும் அவர் பெரிய நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிறவர். கை நிறைய சம்பளம், சொந்த வீடு, கார், குழந்தைகள் நன்றாகப் படிக்கிறார்கள்; மனைவி, உறவினர்கள் எல்லாரும் அவர்மீது அன்பு செலுத்துகிறார்கள்.

ஆனால், இதெல்லாம் எல்லாருக்கும்தான் கிடைக்கிறது. அதைத் தாண்டிய ஒரு மரியாதையைச் சுந்தரேசன் எதிர்பார்த்தார்.

உதாரணமாக, அவர் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த நேரம், சுற்றியிருக்கிற எல்லாரையும்போல் தானும் இருப்பதை விரும்பாமல், கார் வாங்கினார்.

ஆனால், அதே நேரம், ஊரில் எல்லாப் பயலும் கார் வாங்கிவிட்டார்கள். சாலையில் காரை ஓட்டிச் சென்றால் சுற்றிலும் வதவதவென்று நூற்றுக்கணக்கான கார்கள். அவர்களைவிட தான் வித்தியாசம் என்று அவர் எப்படி நிரூபிப்பார்? எப்படித் தனக்கான மரியாதையைப் பெறுவார்? கார் மீது ஏறி நின்று கத்தினால்தான் உண்டு.

அப்போதும், ஊர் மதிக்காது. ‘பயப்புள்ள நல்லாதானே இருந்துச்சு?’ என்று பரிதாபப்படும்.

சுந்தரேசனுக்குத் தேவை பரிதாபம் அல்ல, மரியாதை. ‘இவர் தனித்துவமான ஆள்’ என்று நாலு பேர் சொல்லவேண்டும். தெருவில் நடக்கும்போது சுற்றியிருக்கிறவர்களைவிட அவர் வித்தியாசப்பட்டுத் தெரியவேண்டும், அவ்வளவுதான்.

அதற்கு ஒரு வழி, சொல்லப்போனால் ஒரே வழி, தொழிலதிபர் ஆவது.

இதைச் சுலபமாகத் தீர்மானித்துவிட்ட சுந்தரேசன் என்ன தொழில் செய்வது என்ற சிந்தனையிலேயே பல ஆண்டுகளைக் கடத்தினார். ஹோட்டல் வைக்கலாமா? தியேட்டர் நடத்தலாமா? கல்யாண கான்ட்ராக்ட் எடுக்கலாமா? ஜவுளி மொத்த வியாபாரம் செய்யலாமா?

அவருக்கு எல்லாத் தொழில்களும் பிடித்திருந்தன. ஆக்டோபஸ்போல் தனக்கு எட்டுக் கைகள் இருந்தால் ஒரே நேரத்தில் அனைத்து வேலைகளையும் செய்யலாமே என்று ஏங்கினார் அவர்.

ஆனால், அவருக்கிருப்பது இரண்டே கைகள். அவையும் பகல் நேரத்தில் அலுவலக வேலை செய்யவேண்டிய கைகள், ஓய்வு நேரம்தான் தொழிலுக்கு.

இன்னொரு விஷயம், தொழில் செய்ய ஆர்வம்மட்டும் போதாது, முதலீடு தேவை.

சுந்தரேசனிடம் சேமிப்பு கணிசமாக இருந்தது. ஆனால், மரியாதைக்காக அதையெல்லாம் தொழிலில் போடத் தயங்கினார். சுமார் ஒன்றிரண்டு லட்சங்கள்வரை ரிஸ்க் எடுக்கலாம், அதற்குமேல் அவருக்குத் தைரியம் இல்லை.

ஆகவே, ஒன்றிரண்டு லட்ச முதலீட்டில், ஓய்வு நேரத்தில் மட்டும் செய்யக்கூடிய ஒரு தொழில் அவருக்குத் தேவை. அப்போதுதான் அவர் தொழிலதிபராக இயலும். அதைத் தேடுவதில்தான் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஒருகட்டத்தில், சுந்தரேசன் தன்னுடைய சுயபுத்தியைமட்டும் நம்புவதை நிறுத்திக்கொண்டார், அதாவது, தாற்காலிகமாக. மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க ஆரம்பித்தார்.

முதல் ஆலோசனை, அவருடைய மேனேஜரிடம். ‘பார்ட் டைமா ஒரு பிஸினஸ் செய்யலாம்ன்னு இருக்கேன், நம்ம கம்பெனி ரூல்ஸ்படி அதுக்கு அனுமதி உண்டா சார்?’

இதைக் கேட்ட மேனேஜர் சுந்தரேசனைப் புதிய மரியாதையுடன் பார்த்தார். ‘வெரி குட் ஐடியா!’ என்றார். ‘ஆஃபீஸ் நேரத்துக்கு வெளியே, நம்ம கம்பெனி பிஸினஸுக்குச் சம்பந்தமில்லாம நீங்க தாராளமா என்ன தொழிலும் செய்யலாம்!’

சுந்தரேசனுக்குத் திருப்தி. இத்தனை நாளாகக் கிட்டத்தட்ட புழுபோல் பார்த்துக்கொண்டிருந்த மேனேஜர் இப்போது புதுத் தொழில் தொடங்குகிறேன் என்றவுடன் மரியாதையாகப் பார்க்கிறார், முதல் வெற்றி!

ஆகவே, வரவழைத்துக்கொண்ட பெருமிதத்துடன், ‘தேங்க் யூ ஸார், உங்க சப்போர்ட் அவசியம் தேவை’ என்றார்.

‘எனி டைம், எனி டைம்…’ என்ற மேனேஜர், ‘என்ன பிஸினஸ் செய்யலாம்ன்னு இருக்கீங்க?’ என்றார்.

‘இன்னும் தீர்மானிக்கலை’ என்று சொன்னால் மரியாதையாக இருக்காது. ஆகவே, ‘நாலஞ்சு ஆப்பர்ச்சூனிட்டீஸ் இருக்கு, எதைச் செய்யலாம்ன்னு யோசிச்சுகிட்டிருக்கேன்’ என்றார்.

‘ரொம்ப நல்ல விஷயம், ஆல் தி பெஸ்ட், எந்த உதவி வேணும்ன்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க!’

‘கண்டிப்பா சார்!’

ஆக, மேலாளரிடம் சுந்தரேசனுக்கு ஆலோசனை கிடைக்கவில்லை, ஆதரவுதான் கிடைத்தது. எதற்கும் இருக்கட்டும் என்று அதைப் பத்திரப்படுத்திக்கொண்டார்.

அடுத்து, தனக்குத் தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் சொந்த தொழில் செய்வோரிடம் பேசினார், எல்லாருமே அவருடைய கனவைப் பாராட்டினார்கள், வெவ்வேறு யோசனைகளைத் தந்தார்கள்.

ஆனால், ஒரே பிரச்சினை, அவருடைய அலுவலகப் பணியோடு சம்பந்தப்பட்ட தொழிலாக இருக்கக்கூடாது, முற்றிலும் புதிய ஒன்றாகத் தேர்ந்தெடுக்கவேண்டும். பல கோணங்களில் சிந்தித்தபிறகு சுந்தரேசன் ஒரு தீர்மானத்துக்கு வந்தார், மார்க்கெட்டில் நல்ல வரவேற்புள்ள இயந்திர உதிரி பாகங்கள் சிலவற்றை மொத்தமாக வாங்கி இங்குள்ள நிறுவனங்களுக்கு விற்பது.

‘இது ரொம்ப சுலபம் சார்’ என்று ஒரு நண்பர் சொல்லியிருந்தார். ‘என் சித்தப்பா பையன் ஒண்ணும் தெரியாம உள்ள நுழைஞ்சான், இப்ப கார், பங்களான்னு தூள் கிளப்பறான். அவனை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டுமா?’

அந்தச் சித்தப்பா பையனின் சிபாரிசில் பஞ்சாபில் ஒரு நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது. அவர்களுடைய ஆலோசனைப்படி சில பொருள்களை மொத்த விலையில் வாங்கிக்கொள்ள சம்மதித்தார்.

இந்தத் தொழிலுக்கான முதலீடு அவர் நினைத்ததைவிட அதிகம்தான். இதைவிடக் கவர்ச்சிகரமான பல தொழில்கள் இருந்தன. அவற்றுக்கெல்லாம் மேலும் அதிக முதலீடு தேவைப்பட்டது.

ஆகவே, அவர் இதுதான் தன் தொழில் என்று தீர்மானித்தார். பணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

‘கடன் வாங்கலாமே சார்’ என்றார் ஒரு நண்பர். ‘இப்பல்லாம் வங்கிக்காரன் பிஸினஸுக்குக் கூப்பிட்டுக் கடன் கொடுக்கறான்.’

‘நெவர்’ என்றார் சுந்தரேசன், ‘அவன்கிட்ட கடன் வாங்கிட்டு அவன் இழுத்த இழுப்புக்கு நாம போகணும். அதெல்லாம் எனக்குச் சரிப்படாது. என் பணம், என் தொழில், அவ்ளோதான்!’

அவர் சொல்லாத விஷயம், ‘ஊர்ல பாதிப் பய கடன் வாங்கிதான் தொழில் நடத்தறான், அவனும் நானும் ஒண்ணா?’

ஆக, சுந்தரேசன் சொந்தப் பணத்தை முதலீடு செய்து தொழில் தொடங்கினார்: தன்னுடைய மனைவி பெயரில், ‘ஐஸ்வர்யா ட்ரேடர்ஸ்’.

மேனேஜர் சிபாரிசில் ஊருக்கு வெளியே ஒரு தனி இடம் வாடகைக்குக் கிடைத்தது. பகல் நேரத்தில் கடையை, கொடௌனைப் பார்த்துக்கொள்ள ஊரிலிருந்து உறவுக்காரப் பையன் ஒருவனை வரவழைத்தார். திறப்புவிழாவுக்கு ஏற்பாடுகள் நடந்தன.

தன்னுடைய நிறுவனத்தைத் தொடங்கிவைக்க ஒரு பெரிய பணக்காரரையோ சினிமா நடிகரையோதான் அழைக்கவேண்டும் என்று சுந்தரேசனுக்கு ஆசை. ஆனால், அப்படி யாரையும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. நண்பர்கள்மூலம் விசாரித்தபோது, ‘லட்சக்கணக்குல செலவாகுமே’ என்றார்கள்.

ஆகவே, சுந்தரேசன் தன் மேனேஜரையே சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவரும் டையெல்லாம் கட்டிக்கொண்டு வந்து ரிப்பன் வெட்டிவிட்டு சமோசா சாப்பிட்டு வாழ்த்தினார்.

திறப்புவிழாவுக்குச் சுந்தரேசனின் நண்பர்கள், உறவுக்காரர்கள் பலர் வந்திருந்தார்கள். எல்லாரும் அவரைக் கை குலுக்கி வாழ்த்தும்போது, சந்தோஷத்துடன் ஒரு பொறாமையும் கலந்திருந்ததைப் பார்த்து மகிழ்ந்தார் அவர்.

அடுத்த நாள் அவர் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, எல்லாரும் தேடி வந்து வாழ்த்தினார்கள். ‘நம்மையெல்லாம் மறந்துடாதீங்க சார்’ என்று அவர்கள் இளிக்க, ‘சேச்சே’ என்று பெருமிதத்துடன் சொன்னார் சுந்தரேசன்.

முதலீட்டில் கணிசமான பங்கு திறப்புவிழாவுக்கே செலவாகியிருந்ததால், மீதிப் பணத்தைக் கவனமாகச் செலவழித்தார் சுந்தரேசன். இயந்திர உதிரி பாகங்களை ஓரளவுக்குமட்டும் கையிருப்பில் வைத்துக்கொண்டு, உள்ளூரில் எங்கெல்லாம் அவை விற்பனையாகும் என்று அலைந்து திரிய ஆரம்பித்தார்.

அவர் நினைத்ததைப்போல், அலுவலக வேலைக்குப்பின் ஓய்வு நேரத்தில் இதைச் செய்ய இயலவில்லை. இயந்திர உதிரிப் பாகம் வாங்குகிறவர்களுக்கு பத்து டு ஆறுதான் வேலை நேரம். அவர்கள் அந்த நேரத்தில்தான் அவர் நேரில் வந்து பேசவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். இவருக்கும் அதே நேரத்தில் அலுவலகம் உண்டு என்பதால், பர்மிஷன் அல்லது விடுமுறை போட்டுவிட்டுத்தான் இதைக் கவனிக்கவேண்டியிருந்தது.

மேனேஜர் ஆரம்பத்தில் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், சில நாள் கழித்து முகம் சுளிக்கத் தொடங்கினார். அவர் கோபப்படுவதற்குள் அதற்கும் ஓர் உறவுக்கார பையனை வேலைக்கு வைத்துவிட்டார் சுந்தரேசன்.

இப்போது, அவர் இரண்டு பேருக்குச் சம்பளம், கடைக்கு வாடகை தந்தாகவேண்டும். அந்த அளவுக்கு விற்பனை, லாபம் இருந்தால் சந்தோஷம், இல்லாவிட்டால்?

ஒவ்வொரு மாதமும் முப்பதாம் தேதி நெருங்க நெருங்க சுந்தரேசனுக்கு நடுக்கம் அதிகரித்தது. அந்த மாத விற்பனைக் கணக்குகளைப் பார்த்து நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயன்றார். ஆனால், அவருக்கு ஒன்றும் புரியவில்லை, அல்லது, புரிந்தது சரியாக இல்லை. சேமிப்புப் பணம் செலவாகிக்கொண்டிருந்தது, வரவு குறைவாகவே இருந்தது.

‘இதெல்லாம் ஆரம்பச் சறுக்கல்தான்’ என்று ஒரு நண்பர் உற்சாகப்படுத்தினார். ‘பத்து கஸ்டமரை வளைச்சுப் போட்டு நம்பிக்கையான ஆள்ன்னு பேர் எடுத்துட்டேன்னா, அதுக்கப்புறம் ஆர்டர் தானா வரும், நீ அலைய வேண்டியதில்லை!’

சுந்தரேசன் அதை நம்பவே விரும்பினார். ஆனால், பணம் கண்முன்னே காலியாகிக் கொண்டிருப்பது அவருக்கு உறுத்தலாக இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு ஒரு தனித்துவமான பார்வை வேண்டும்போல, அது அவருக்கு இல்லை.

தொழிலதிபர் என்றால், உடனடி லாபத்தைப் பார்க்காமல் தொலைநோக்கோடு சிந்திக்கவேண்டும் என்று சுந்தரேசன் தனக்குத் தானே நினைவுபடுத்திக்கொண்டார். ஆனால், அடுத்த மாதம் சம்பளம், வாடகைக்கு செக் எழுதும்போது எரிச்சலைத் தவிர்க்க இயலவில்லை.

சுந்தரேசனுக்கு ஒரே ஒரு நிம்மதி, இப்போது அவரைப் பார்க்கிறவர்களெல்லாம் ஏதோ நிறுவனத்தில் ஏதோ வேலை பார்த்துச் சம்பளம் வாங்குகிற சராசரி மனிதர் என்று நினைப்பதில்லை. தொழிலதிபர் என்ற கௌரவத்துடன்தான் பேசுகிறார்கள். எங்கேயாவது கல்யாணம், பார்ட்டி என்றால் அவரைச் சுற்றிச் சிறு கூட்டம், ‘பிஸினஸ் எப்படிப் போகுது சார்?’

‘எல்லாம் அவன் அருள்’ என்று மேலே கை காட்டிச் சொல்லக் கற்றுக்கொண்டார் சுந்தரேசன். அதற்குமேல் லாப, நஷ்டக் கணக்கை அவர் பேசுவதில்லை. அவருக்குப் பேசத் தெரியாது என்பது ஒன்று, பேசினால் இந்த மரியாதை என்ன ஆகுமோ என்கிற கலவரம் இரண்டாவது. ’இவன்கிட்டயெல்லாம் பிஸினஸ் மேட்டரைப் பேசறதா? இவனுக்கு என்ன தகுதி?’ என்கிற அலட்சியம் மூன்றாவது.

சில மாதங்கள் கழித்து ஒருநாள், சுந்தரேசனின் மேனேஜர் அவரை அழைத்தார். ‘உங்க தொழில் எப்படி நடக்குது?’ என்றார்.

‘எவ்ரிதிங் ஓகே சார்’ என்றார் சுந்தரேசன். உள்ளுக்குள் இவர் என்ன கேட்கப்போகிறாரோ என்கிற நடுக்கம்.

மேனேஜர் மேஜை டிராயரைத் திறந்து ஒரு காகிதத்தை எடுத்தார். ‘இது என் அக்காவோட பேரன், இப்பதான் எஞ்சினியரிங் முடிச்சிருக்கான்’ என்றார். ‘உங்க கம்பெனில அவனுக்கு ஒரு வேலை கொடுக்கமுடியுமான்னு பாருங்களேன்!’

சுந்தரேசனால் மறக்க இயலாத நாள் அது. இத்தனை நாள் கை கட்டி வேலை பார்த்த மனிதர் இப்போது தன்னிடம் ஓர் உதவி கேட்கிறார், இது சாதாரணமாக நடந்துவிடுமா? தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயமன்றோ!

அந்த மிதப்பிலேயே அந்தப் பையனுக்கு வேலை போட்டுக் கொடுத்துவிட்டார் சுந்தரேசன். ‘சின்னப் பையன், நாலு இடத்துல சுத்தி வியாபாரத்தை நடத்துவான்’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டார்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில் சுந்தரேசனின் நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் சொல்லிவைத்தாற்போல் பயோடேட்டாக்களை அவர்மீது பொழிந்தார்கள். வேலை தருகிற வள்ளல் என்று ஒரு புதிய பிம்பம் தனக்குக் கிடைத்திருப்பதை அவர் மிகவும் ரசித்தார்.

ஆனால், இவர்களில் யாருக்கும் அவரால் வேலை தர இயலவில்லை. அதைச் சொன்னால் அவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்களோ என்ற எண்ணத்தில், ‘ஆயிரக்கணக்குல அப்ளிகேஷன் வருது சார், திறமை உள்ளவங்களைதானே தேர்ந்தெடுக்கணும்’ என்று சொல்ல ஆரம்பித்தார்.

இதனிடையே, சுந்தரேசனுடைய மேனேஜருடைய அக்காவுடைய பேரன் ஏதோ மாயம் செய்து கையிருப்புச் சாமான்களையெல்லாம் மளமளவென்று வெளியேற்றிக்கொண்டிருந்தான். ஆனால், அதற்கான பணம் மட்டும் வரவில்லை. கேட்டால், ‘வந்துடும் சார்’ என்றான் தைரியமாக.

ஒருநாள், அந்தப் பையனைக் காணவில்லை, வேறு எங்கோ வேலைக்குச் சேர்ந்துவிட்டான் என்றார்கள். விசாரித்தபோது, அவர் நம்பிக்கையாக வேலைக்கு வைத்திருந்த உறவுக்காரர்கள் இருவரும் அந்தப் பையனைக் கையில் போட்டுக்கொண்டு விளையாடிவிட்டார்கள் என்று தெரிந்தது. இவர்கள் மூவரும் சேர்ந்து காசு வாங்கிக்கொண்டு மலிவு விலையில் இவருடைய பொருள்களை யாருக்கோ தள்ளிவிட்டுவிட்டார்கள்.

சுந்தரேசன் திகைத்துப்போனார். மேனேஜரிடம் சென்று புகார் சொன்னால், தன் அக்கா பேரனை விட்டுக்கொடுப்பாரா? ‘நீ தொழிலைச் சரியாக நடத்தவில்லை’ என்றுதானே சொல்வார்?

ஆகவே, விஷயத்தைத் தனக்குள் வைத்துக்கொண்டார் சுந்தரேசன். இதற்குமேல் தன்னால் நஷ்டப்பட இயலும் என்று அவருக்குத் தோன்றவில்லை. எல்லாரையும் வேலையை விட்டு நிறுத்திவிட்டதால், கடையைத் திறப்பதே இல்லை. மாதந்தோறும் கடைக்கு வாடகை மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தார். அது ஏன் என்று அவருக்கே புரியவில்லை.

இந்த விஷயம் தெரியாத மற்றவர்கள் அவரிடம், ‘பிஸினஸ் எப்படிப் போகுது?’ என்று தொடர்ந்து விசாரித்தார்கள். அவரும் பூடகமாகப் பதில் சொல்லி நழுவிக்கொண்டிருந்தார்.

கடை மூடப்பட்டுவிட்ட விஷயம் அவருடைய மனைவிக்கும் தெரியாது. ஏதோ வருமானம் வருகிறது என்றுதான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். செல்கிற இடமெல்லாம் தன் கணவரின் பெருமையைப் பரப்பிக்கொண்டிருந்தார். அதனை ஏற்காமலும் மறுக்காமலும் ஒருவித மோனநிலையில் நாள்களைக் கடத்தினார் சுந்தரேசன்.

இந்நிலையில், அந்தக் கடை உள்ள கட்டடத்தின் உரிமையாளர் சுந்தரேசனைத் தொலைப்பேசியில் அழைத்தார். ‘தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க கடையைக் காலி பண்ணிடுங்க’ என்றார்.

‘ஏன் சார்? என்னாச்சு? வாடகைல்லாம் ஒழுங்கா கொடுத்துகிட்டிருக்கேனே!’

‘வாஸ்தவம்தான்’ என்றார் அவர். ‘ஆனா அந்த இடம் ரொம்பப் பழசு, பார்த்துக்கறது சிரமமா இருக்கு. ஒருத்தர் விலைக்குக் கேட்கறார், கொடுத்துடலாம்ன்னு தீர்மானிச்சுட்டேன்.’

சுந்தரேசன் திகைப்போடு ஃபோனை வைத்தார். தன்னுடைய கடையையும் இப்படி யாராவது வாங்கிக்கொள்ள முன்வந்தால் நன்றாக இருக்குமே என்று அவருக்கு ஏக்கம்.

நஷ்டத்தில் ஓடுகிற, அல்லது ஓடாமல் நின்றுவிட்ட கம்பெனியை யார் வாங்குவார்கள்? அப்படி ஒரு முட்டாளை அவரே கற்பனையில் உருவாக்கினால்தான் உண்டு.

மறுநாள் காலை, தன் மனைவியை அழைத்தார் சுந்தரேசன். ‘கம்பெனியை வித்துட்டேன்’ என்றார்.

‘அச்சச்சோ, என்னாச்சுங்க?’

‘நல்ல விலை கிடைச்சது, வித்துட்டேன், அவ்ளோதான்!’

அந்தச் செய்தி அதிவேகமாகப் பரவியது. மறுநாள் அலுவலகத்தில் எல்லாரும் விசாரித்தார்கள், ‘என்ன சார்? கம்பெனியை வித்துட்டீங்களாமே!’

‘ஆமாங்க’ என்றார் சுந்தரேசன் அலட்சியமாக.

‘ஏன் சார்?’ ஆதங்கத்துடன் கேட்டார் அவர்.

‘ஒரு ரூபா செலவழிச்ச இடத்துல இருபது ரூபாய் தர்றேன்னு கால்ல விழுந்து கெஞ்சினா என்ன சார் செய்யறது?’ என்றார் சுந்தரேசன், ‘நமக்குத் தொழில் செய்யறதுதான் முக்கியம், அது எந்தத் தொழிலா இருந்தா என்ன? அதான் வித்துட்டேன்.’

‘அப்ப வேற பிஸினஸ் ஆரம்பிக்கப்போறீங்களா?’

‘நாலஞ்சு ஆப்பர்ச்சூனிட்டீஸ் இருக்கு, எதைச் செய்யலாம்ன்னு யோசிச்சுகிட்டிருக்கேன்!’

அதன்பிறகு, அலுவலகத்தில் சுந்தரேசனின் மரியாதை பலமடங்கு பெருகிவிட்டது. அவர் ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்துகிறார் என்பதைவிட, அதை இன்னொருவருக்கு நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டார் என்பதையே எல்லாரும் வியப்புடன் பார்த்தார்கள்.

நண்பர்கள் வட்டாரத்தில் பலரும் சுந்தரேசனை அணுகி உதவி கேட்டார்கள். இப்போது அவர்கள் பயோடேட்டாவைக் கொண்டுவரவில்லை, அதற்குப் பதிலாக, சொந்த தொழில் ஆர்வமுள்ள இளைஞர்களை அழைத்துவந்தார்கள். ‘பையனுக்கு நீங்கதான் அட்வைஸ் பண்ணனும்’ என்றார்கள். சுந்தரேசனும் தெம்பாக, ‘தம்பி, சொந்தத் தொழில்ல முக்கியமா கவனிக்கவேண்டியது என்னன்னா…’ என்று அறிவுரைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அதன்பிறகு, சுந்தரேசன் இன்றுவரை இன்னொரு தொழில் தொடங்கவில்லை, தொடங்கப்போவதும் இல்லை. ஒருமுறை தொழிலதிபர் பட்டம் கொடுக்கப்பட்டுவிட்டால், அதை யாரும் பிடுங்கிக்கொள்ளமாட்டார்கள் என்று அவருக்குப் புரிந்துவிட்டது. இனி அவர் நிரந்தர அதிபர்தான்.

ஓவியம்: வேல்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...