வழக்கம் போல் சிக்கலில் மாட்டியிருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் ட்ரம்ப்.
செக்ஸ், பெண்கள் போன்ற சர்ச்சைகளில் ட்ரம்ப் சிக்குவது புதிதல்ல. இந்த முறையும் ஒரு ஆபாசப் பட நடிகையின் மூலம் சிக்கியிருக்கிறார். இந்த சிக்கல் அவரை கைது செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறது. அப்படி கைது செய்யப்பட்டால் குற்றச் செயலுக்காக கைது செய்யப்படும் முதல் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற பெருமை அவருக்கு வந்து சேரும். இதையும் பெருமையாகதான் நினைப்பார் ட்ரம்ப்.
என்ன நடந்தது?
ஸ்டார்மி டேனியல்ஸ் (Stormy Daniels இது ஆபாசப் படத்துக்காக – உண்மைப் பெயர் Stephanie Clifford) அமெரிக்காவின் புகழ்ப் பெற்ற ஆபாசப் பட நடிகை. பல நீலப் படங்களில் நடித்தவர். ஆண்களின் கனவுப் பெண். ட்ரம்ப்புக்கும் கனவுப் பெண்.
2006ஆம் வருடம் ஒரு கோல்ஃப் போட்டியின் போது ஸ்டார்மியை சந்தித்தார் ட்ரம்ப். அப்போது அவர் அமெரிக்க குடியரசுத் தலைவர் அல்ல. பெரும் பணக்காரர் அவ்வளவே. பணக்கார ப்ளே பாய் ட்ரம்புக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கும் உடனே காதல் பற்றிக் கொண்டது.
அந்த சமயத்தில் ட்ரம்பின் மனைவி மெலனியாவுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. மனைவி வீட்டிலிருக்க ட்ரம்ப் தனது வேலைகளை வெளியில் காட்டிக் கொண்டிருந்த நேரம். அப்போது ட்ரம்புக்கு வயது 60. ஸ்டார்மிக்கு 27 வயது.
இருவரும் ஒரு இரவு ஒட்டலில் தங்கி இரவை படுக்கையில் கொண்டாடியிருக்கிறார்கள்.
அவர் ஓட்டலுக்கு டின்னர் சாப்பிடலாம் என்று அழைத்தார். சென்றேன். அவர் அறையில் பைஜாமாவுடன் நின்றிருந்தார். உணவுக்குப் பின் படுக்கைக்கு அழைத்தார். அவருடனான செக்ஸ் அத்தனை இன்பமானதாக இல்லை. என் வாழ்க்கையின் மோசமான செக்ஸ் அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ட்ரார்மி.
இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் ட்ரம்ப் சொல்லியிருக்கிறார். ஆனால் ட்ரம்புடன் நடந்த உறவை ஸ்டார்மி வெளியில் சொல்லத் தொடங்கினார். அவரது வாயை மூட தனது வக்கீல்கள் மூலம் ட்ரம்ப் முயற்சித்திருக்கிறார்.
இந்த சூழலில் 2016 ஆம் வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டார். திருமணத்துக்கு மீறிய இந்த உறவை வெளியில் சொல்லக் கூடாது என்று 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் ஸ்டார்மிக்கு கொடுத்திருக்கிறார். அவரும் வாங்கிக் கொண்டார். பணத்தை வாங்காவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று அஞ்சியதாக தெரிவிக்கிறார்.
தனக்கு பல விதங்களில் மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
2011ஆம் வருடம் ஸ்டார்மி தனது கைக்குழந்தையுடன் லாஸ் வேகாஸ் கார் பார்க்கில் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு பெண் அவரிடம் வந்து பேசினாராம். இவ்வளவு அழகான குழந்தையின் தாய்க்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று கூறி சென்றாராம். அந்த சமயத்தில் ஒரு பத்திரிகைக்கு ட்ரம்ப் குறித்து பேசுவதாக ஸ்டார்மி கூறியிருந்திருக்கிறார். இந்த மென் மிரட்டலுக்குப் பிறகு அவர் வாய் திறக்கவில்லை.
இப்படி வாய் மூட வைக்கும் பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருந்தது. 2018ல் நடந்தவற்றை வெளியில் சொன்னார் ஸ்டார்மி. அவர் வெளியில் சொன்னது வழக்காக மாறியது.
வழக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் விசாரணையில் இருந்தது. அப்போது ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தார். மேலும் நடிகைக்கு பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கைப்பற்றியது. இதனால் ட்ரம்புக்கு நெருக்கடி வலுத்தது.
தேர்தல் நேரத்தில் இப்படி பணம் கொடுத்தது அமெரிக்க தேர்தல் செலவு விதிகள்படி குற்றம். அந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வரும் செவ்வாய் அன்று வழக்கு நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ட்ரம்ப் இது குறித்து அதிராமல் நிற்கிறார்.
“அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன் என்பதற்காக மட்டுமே என் மீது போலியான ஊழல் மற்றும் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. நியூயார்க்கில் நேர்மையான விசாரணை என்னால் நடத்த முடியாது என அவர்களுக்கு தெரியும்” என்று தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
டோனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
உலக அளவில் அமெரிக்காவுக்கு இது ஒரு தலைகுனிவுதான். தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தால் இது போன்ற கூத்துக்களை எதிர்க் கொண்டுதான் ஆக வேண்டும்.