அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ’வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை, தொடர்ந்து அவரது கைது விவகாரம் சட்டபூர்வமன நடவடிக்கை என்று மத்தியில் ஆளும் பாஜக சொல்கிறது. இல்லை இது அரசியல் பழிவாங்கல், அச்சுறுத்தல் என்று மாநிலத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சொல்கின்றன. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இரண்டுமே சரியானதுதான். செந்தில் பாலாஜி, 2014ஆம் ஆண்டு அதிமுக அமைச்சராக இருந்த போது அவரது உதவியாளர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றார். அதன்பின்னர் அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். ஆனால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மாதங்களில் காவல்துறை விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என்று அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொன்னது. அப்படித்தான் அமலாக்கத்துறை இந்த வழக்குக்குள் வந்தது. அந்த வழக்கில்தான் தற்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பாஜக சொல்வது சரிதான்.
திமுக சொல்வது போல் கோணத்தில் இருந்தும் இந்த வழக்கை பார்க்கலாம். முக்கிய இலாகாக்களில் அமைச்சராக இருந்ததுடன், கொங்கு பகுதியில் திமுகவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவராகவும் செந்தில்பாலாஜி இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் 99 சதவிகித வெற்றியை திமுகவுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் அப்பகுதியில் உள்ள ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிபெற வாய்ப்புகள் குறையும் என்று நினைக்கிறார்கள். எனவே, அவரை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒரு பெரிய ‘கேம்பையன்’ நடந்ததைப் பார்த்தோம். அரசியல் ரீதியாக செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என வழி பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சட்டரீதியாகவே இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், இதை ஸ்டாலின் அரசியல் பழிவாங்கல் என்கிறார்.
2018இல்தான் செந்தில் பாலாஜி திமுகவுக்கு வருகிறார். அதற்கு முன்பு செந்தில் பாலாஜி குறித்து திமுக தலைவர் ஸ்டாலினே விமர்சித்து பேசியிருக்கிறார். ஆனால், இன்று திமுகவின் மிக முக்கியமானவர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். இந்த கைதால் செந்தில் பாலாஜியின் வளர்ச்சி வேகம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?
கண்டிப்பாக. பணமோசடி தடுப்பு சட்டத்தில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். பண மோசடியை தீவிரவாத நடவடிக்கைக்கு இணையாகத்தான் உச்ச நீதிமன்றம் பார்க்கிறது. எனவே, இந்த சட்டப் பிரிவில் ஜாமின் கிடைப்பதற்கு ரொம்ப கஷ்டம். மேலும், செந்தில் பாலாஜி மட்டும் அமலாக்கத்துறையின் இலக்கு இல்லை. அவர்கள் குறி அடுத்த கட்டம். இவர் மூலமாக ஸ்டாலின் குடும்பத்தினர் அல்லது அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களை நெருங்க முயற்சிப்பார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை சோதனை, கைதை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில்பாலாஜியை கைது செய்திருப்பது உண்மையில் முதல்வருக்கு வைக்கப்பட்ட ‘செக்மேட் ‘ ஆகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு அகில இந்திய அளவில் வியூகங்களை அமைத்து வருகிறார். இதனால் திமுக அரசுக்கு திட்டமிட்டே நெருக்கடியை உருவாக்குகின்றனர்” என்கிறார்.
அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அதனால்தான் இந்த விவகாரத்தை ஸ்டாலின் அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறார். மிக கடுமையாக பேசி இன்று ஒரு ஆடியோ வெளியிட்டிருக்கிறார். திருப்பி அடிச்சா தாங்க மாட்டிங்கனு முன்பு கலைஞர் பேசிய கருத்தை சொல்லியிருக்கிறார். செந்தில்பாலாஜி விவகாரத்தோடு நிற்கமாட்டார்கள், அடுத்த ஒரு வருடத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் செய்வார்கள் என்று அவருக்கு தெரியும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உட்பட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் அதற்கு பயன்படுத்துவார்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் சிபிஐ மாநில அரசின் அனுமதியின்றி விசாரிக்க வழங்கியிருந்த அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. பாஜக தரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள ஸ்டாலின் தயாராகிவிட்டார் என்பதைத்தான் இது காட்டுகிறது.