பொது இடங்களில் பிரபலங்களைப் பார்க்கும் ரசிகர்கள், அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க விரும்புவது அந்தக் காலம். இப்போதெல்லாம் பிரபலங்களைப் பார்த்ததும் அவர்களுடன் நின்று செல்பி எடுத்துக்கொள்ளதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களுடன் பல விஐபிக்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. அது சிக்கலையும் கொண்டுவந்துள்ளது. அப்படி செல்ஃபி சிக்கலில் லேட்டஸ்டாக சிக்கியிருக்கும் பிரபலம் பிருத்வி ஷா.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான பிருத்வி ஷா, கடந்த பிப்ரவரி மாதம் தனது நண்பர் ஆசிஷ் சுரேந்திர யாதவுடன் வடமேற்கு மும்பையில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது சப்னா கில் என்ற பெண்ணும் அவரது நண்பர்களும் தங்களுடன் செல்ஃபி எடுக்குமாறு பிருத்வி ஷாவை வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுத்தபோது தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி ஓட்டல் நிறுவனத்திடம் பிருத்வி ஷா புகார் அளிக்க, அவருக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கோபமடைந்த அந்த கும்பல் ஓட்டலுக்கு வெளியே காத்திருந்துள்ளது. பிருத்வி ஷாவும் அவரது நண்பரும் திரும்பிச் செல்லும் நேரத்தில் அவரது காரை தாக்கியுள்ளது. பிருத்வி ஷாவும் திரும்பித் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பிருத்வி ஷாவின் நண்பர் புகார் அளிக்க, செல்ஃபிக்காக தகராறு செய்த சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 384, 143, 148, 149, 427, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிருத்வி ஷாவுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளைப் போட்டிருந்தனர்.
ஆனால் சுமார் 2 மாதங்கள் கழித்து, அதே விவகாரம் பிருத்வி ஷாவை நோக்கி பூமராங்காக திரும்பி இருக்கிறது. செல்ஃபி சம்பவம் நடந்த அன்று பிருத்வி ஷா தன்னைத் தாக்கியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் கூறி ஐபிசி 354, ஐபிசி 509 மற்றும் ஐபிசி 320 ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிய மும்பை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மும்பை கோர்ட்டில் வழக்கு பதிந்திருக்கிறார் சப்னா கில். சம்பவத்தின்போது கிரிக்கெட் பேட்டால் பிருத்வி ஷா தன்னை தாக்கியதாகவும் இந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு மும்பை கோர்ட்டில் வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. பிருத்வி ஷா இப்போது டெல்லி டேவில்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் ஆடி வருகிறார். இந்த வழக்கு விசாரணைக்காக பிருத்வி ஷா மும்பைக்கு செல்லவேண்டி இருப்பதால் அவர் ஒரு போட்டியிலாவது ஆட முடியாத சூழல் ஏற்படும். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனான பந்த் ஏற்கெனவே காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது பிருத்வி ஷாவும் ஒரு போட்டியில் ஆடாவிட்டால் என்ன செய்வது என்ரு டெல்லி அணி தவித்து வருகிறது. கூடவே இந்த பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மனக்குழப்பம் பிருத்வி ஷாவின் ஆட்டத்தை பாதிக்குமா என்ற அச்சத்திலும் டெல்லி அணி உள்ளது.
வயதில் இளையவரான பிருத்வி ஷாவோ, இதனால் இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்.
.