No menu items!

ரூபாய் Vs டாலர்: நிர்மலா சீதாராமன் சொல்வது சரியா?

ரூபாய் Vs டாலர்: நிர்மலா சீதாராமன் சொல்வது சரியா?

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன பேசினாலும் அது வைரலாகிவிடுகிறது. இப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து விழ்ச்சியடைந்து வருவது குறித்து, “இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை; அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது,” என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அலுவல்முறை பயணமாக, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதுதான், ”அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைகிறது. இப்படி வலுவடையும் அமெரிக்க டாலருக்கு நிகராக மற்ற நாடுகளின் நாணயங்களும் பலவீனமடைக்கின்றன. நான் இதிலுள்ள நுட்பங்கள் குறித்து பேசவில்லை. ஆனால், வலுவடையும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தாக்குப் பிடித்து நின்றுள்ளது. மற்ற வளர்ந்து வரும் சந்தைகளின் நாணயங்களை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு குறித்து பலரும் மீம்ஸ் வெளியிட்டு விமர்சித்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது இதுபோல் டாலர் மதிப்பு உயர்ந்தபோது, ‘ரூபாய் வீழ்ச்சி’ என்று நிர்மலா சீதாராமன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது அதனையே ‘டாலர் எழுச்சி’ என்கிறார். இதனை குறிப்பிட்டு, “நிர்மலாஜி வேர லெவல்” என்று சிலர் எழுதியுள்ளார்கள்.

ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப்போன ஒருவன், “நான் தோற்கவில்லை; நான் ஓடினேன், அவன் என்னைவிட வேகமாக ஓடி வெற்றிபெற்றுவிட்டான்” என்று சொல்வது போல் இருக்கிறது நிதியமைச்சர் பேச்சு என்று சிலர் விமர்சித்துள்ளார். இதையே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘நாங்கள் தோற்கவில்லை, எதிரணி வெற்றிபெற்றுவிட்டது’ என பொருள்படும் ‘we don’t lose the match, opposite team won’ ஆங்கில வாக்கியம் அடங்கிய நிர்மலா சீதாராமன் புகைப்படத்தை பகிர்ந்து, ‘வாழ்த்துகள், ஜேஎன்யு எப்போதும் தோற்பதில்லை’ என ட்விட் செய்துள்ளார்.

அதேநேரம், ‘நிர்மலாஜி சொல்வது சரிதானே’ என்றும் சிலர் சொல்கிறார்கள்.

சரி, நிர்மலா சீதாராமன் சொல்வது சரியா?

இதனை, மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்பான கடந்த 8 வருடங்களில் இந்திய ரூபாய் உட்பட மற்ற நாட்டின் நாணயங்கள் மதிப்பு அமெரிக்கா டாலருக்கு நிகராக அடைந்திருக்கும் மாற்றங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 14 மே 2014 அன்று 1 அமெரிக்க டாலர் 59 ரூபாய் 53 பைசா இருந்தது. இன்று ரூ. 82.36 ஆக உள்ளது. ரூ. 22.83 உயர்ந்துள்ளது. சதவிகிதம் கணக்கில் 38.35% அதிகரித்துள்ளது.

சரி, இதே காலகட்டத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக மற்ற நாணயங்கள் அடைந்திருக்கும் மாற்றத்தைப் பார்க்கலாம்.

மற்ற நாட்டின் நாணயங்கள்14 மே 2014இன்றுஉயர்வு (%)
ரஷ்யா ரூபிள்34.8161.6377.05
இரான் ரியால்25543.454235065.79
ஆஸ்திரேலிய டாலர்1.061.6050.94
கனடா டாலர்0.9171.3850.49
பிரிட்டன் பவுண்ட்0.590.8849.15
மலேசியா ரிங்கிட்3.224.7246.58
ஜப்பான் யென்101.82148.6746
யூரோ0.721.0343
இந்தியா59.5382.3638.35
சீனா யுவான்6.227.2015.75
சிங்கப்பூர் டாலர்1.251.4314.4
சுவிஸ் ஃப்ராங்க்0.89112.35
குவைத் தினார்0.280.3110.71
சவுதி ரியால்3.753.760.26
ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம்3.673.670
கத்தார் ரியால்3.643.640

சற்று ஆழமாகப் பார்த்தால் நிர்மலா சீதாராமன் சொல்வதில் பாதி உண்மை இருக்கிறது. ஆம், மற்ற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா டாலர் மதிப்பு உயர்ந்திருக்கிறது. அதிலும் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், மலேசியா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய நாட்டின் நாணயங்கள் இந்திய ரூபாய் மதிப்பை விட அதிக சரிவை சந்தித்திருக்கிறது.

ஆனால், இதை வைத்து இந்தியா ஆறுதல் அடைந்துவிட முடியாது. ஏனெனில் இந்த நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பாவின் பொருளாதாரங்கள் வலுவானவை; இந்திய பொருளாதாரம் அந்தளவு வலிமை இல்லாதது என்பதும் கவனிக்கத்தக்கது. உதாரணமாக, கடந்த எட்டு வருடங்களில் அமெரிக்க டாலருக்கு நிகராக அதிகம் வீழ்ச்சியடைந்திருப்பது ரஷ்யா ரூபிள்தான். ஆனால் உக்ரைன் போர், அமெரிக்க – ஐரோப்பிய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடை ஆகிய பாதிப்புகளை எல்லாம் கடந்தும் ரஷ்யா பொருளாதாரம் முன்னைவிட பலமடைந்து வருகிறது; காரணம், இப்போது ரஷ்யாவின் அன்னிய வர்த்தகம் ரூபிளில் நடைபெறுகிறது.

இந்தியாவிலோ ஒவ்வொரு ஆண்டும் வர்த்தக பற்றாக்குறை இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டு முதல் காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை 70.8 பில்லியன் டாலராக (ரூ.5.6 லட்சம் கோடி) உள்ளது. சென்ற நிதி ஆண்டு முதல் காலாண்டில் அது 31.4 பில்லியன் டாலராக (ரூ.2.5 லட்சம் கோடி) இருந்தது. இரு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. அடுத்த ஓராண்டிற்குள் இது இன்னும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. நாம் இறக்குமதியை பெரிதும் சார்ந்து இருப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். அது சாதாரண மக்களின் அன்றாட செலவீனங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...