பர்மிங்காம் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் அசிந்தா ஷெலி. 73 கிலோ பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார். போட்டியில் வென்றதும் அந்த மகிழ்ச்சியை அம்மாவிடம் பகிர்ந்துள்ள அசிந்தா, ஊருக்கு வந்ததும் தனக்கு எப்போதும் பாசத்துடன் சமைத்துக் கொடுக்கும் உணவை மீண்டும் சமைத்து தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
அந்த உணவு என்ன தெரியுமா?… அரிசிக் கஞ்சி.
பொதுவாக பளு தூக்கும் வீரர்கள் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் அசிந்தாவுக்கு அதற்கெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. கடுமையான பயிற்சிக்கு பிறகு வீட்டுக்குச் செல்லும் அசிந்தாவுக்கு அரிசிக் கஞ்சிதான் உணவாக கிடைத்துள்ளது. அதை சாப்பிட்டுதான் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார் அசிந்தா.
மேற்குவங்கத்தில் உள்ள ஹவுராவில் வசிக்கிறார் அசிந்தா. மழைக்காலங்களில் ஒழுகும் ஓட்டு வீடுதான் அவர் வசிப்பிடம். அப்பா அலோக் ஷெலி, ரிக்ஷாக்காரர். ரிக்ஷா ஓட்டியதில் கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்துதான் அசிந்தா, அம்மா பூர்ணிமா ஷெலி, அண்ணன் அலோக் வாழ்க்கை நடத்த வேண்டும். இப்படி போய் கொண்டிருந்த வாழ்க்கையில் ஓர் பேரிடி. ஷோக் ஷெலி திடீரென்று இறக்க, குடும்பம் பொருளாதார ரீதியாக மேலும் சரிந்தது.
அப்பா இறந்ததைத் தொடர்ந்து அவரது அம்மா பூர்ணிமா ஷெலி எம்ப்ராய்டரி வேலைகளைச் செய்து அசிந்தாவையும் அவரது அண்ணனையும் படிக்க வைத்துள்ளார். வாரந்தோறும் கிடைக்கும் 700 ரூபாய் கூலியில் அசிந்தாவையும் அவரது அண்ணனையும் படிக்க வைத்தது மட்டுமின்றி, அசிந்தாவுக்கு பிடித்த பளு தூக்கும் போட்டிக்கான பயிற்சிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் அந்தத் தாய்.
“அசிந்தாவுக்கு சிக்கன் மிகவும் பிடிக்கும். ஒருநாள் தனக்கு சிக்கன் சமைத்து தரும்படி அவன் என்னைக் கேட்டான். ஆனால் என் வருமானத்தில் அவனுக்கு சிக்கன் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அதற்காக அன்றைய தினம் முழுக்க அழுதான். ஆனால் அதன்பிறகு குடும்பத்தின் சூழலைத் தெரிந்துகொண்டதால், அவன் சிக்கன் கேட்பதை நிறுத்திவிட்டான். அரிசிக் கஞ்சியும், கடித்துக்கொள்ள ஒரு தேங்காய் பத்தையும்தான் அவனது உணவு. அந்த சாதாரண உணவை உண்டுதான் அவன் தினமும் பயிற்சிக்கு செல்வான். காமன்வெல்த் போட்டியில் வென்றதும் எனக்கு போன் செய்த அசிந்தா, ஊருக்கு வரும்போது அதே அரிசிக்கஞ்சியை தயார் செய்து தருமாறு கூறியிருக்கிறான்” என்கிறார் பூர்ணிமா.
பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் அசிந்தாவுக்கு 2010-ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது வயது 8. இதைத்தொடர்ந்து உள்ளூரில் இருக்கும் அஸ்தம் தாஸ் என்ற பயிற்சியாளரிடம் அவரது அப்பா அழைத்துச் சென்றுள்ளார். அசிந்தாவின் ஆர்வத்தைப் பார்த்த அஸ்தம் தாஸ், பணம் வாங்காமல் அவருக்கு பயிற்சி கொடுக்க சம்மதித்துள்ளார்.
இலவச பயிற்சி ஓகே. ஆனால் தரமான உணவு வேண்டாமா?… அதற்குத்தான் பெரும் போராட்டம் நடத்தவேண்டி இருந்தது. ஆரம்பத்தில் முட்டை போன்ற கொஞ்சம் போஷாக்கான உணவுகள் கிடைத்தாலும், அப்பாவின் மறைவுக்கு பின்னர் அதற்கும் போராடவேண்டி இருந்தது. இருப்பினும் அம்மா மற்றும் அண்ணனின் உதவியால் அந்த கஷ்டங்களை கடந்தார் அம்மாவுக்கு துணையாக அவரும் சில நாட்கள் தையல் வேலைக்கு போனார். மறுபக்கம் பளுதூக்கும் போட்டியிலும் கவனத்தை தொடர்ந்த அசிந்தா 2014-ம் ஆண்டில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். இப்போட்டியில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தியதால் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சி மையத்தில் அவருக்கு இடம் கிடைத்தது.
கடுமையான பயிற்சியைத் தொடர்ந்த அசிந்தா, 2018-ம் ஆண்டில் நடந்த ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2021-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றதால் ராணுவத்தில் ஹவல்தாராக இப்போது பணி கிடைத்திருக்கிறது. ஆனாலும் குடும்பத்தின் பொருளாதாரம் பெரிய அளவுக்கு உயரவில்லை. இன்றும் அதே ஒழுகும் ஓட்டு வீடுதான்.
தன் மகன் பங்குபெறும் பர்மிங்க்ஹாம் காமன்வெல்த் போட்டிகளைப் பார்ப்பதற்காக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து விளையாட்டு சேனலுக்கு பணம் கட்டியுள்ளார் அம்மா பூர்ணிமா.
மகன் தங்கப் பதக்கம் வென்றதை தொலைக்காட்சியில் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்.