‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் ஏகப்பட்ட எதிர்பார்பை உருவாக்கி இருக்கிறது. யூட்யூப்பில் நொடிக்கு நொடி வியூக்கள் எகிறிக்கொண்டே வருகிறது.
இந்தப் படம் விஜய்க்கு ஹிட்டோ அல்லது ஃப்ளாப்போ எதுவாக இருந்தாலும், விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகாவுக்கு ஒரு பம்பர் ஜாக்பாட் படமாக அமைந்திருக்கிறது.
’வாரிசு’ படத்திற்கு பிறகு தமிழிலும் ஒரு ரவுண்ட் அடிக்க ராஷ்மிகா திட்டமிட்டு வருகிறாராம். இதனால் ஹைத்ராபாத்தைப் போலவே இங்கேயும் ஒரு ஃப்ளாட் பார்க்கும் எண்ணத்தில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.
ஹிந்தியில் மார்க்கெட் இருக்குமா இருக்காதா என்பது தெரியாது. ஆனால் தெலுங்கு தமிழில் மட்டும் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் மேனேஜர் தரப்பு தெரிவிக்கிறது,
இதெல்லாம் ஒரு பக்கமிருக்க விஜயின் ஜோடியை கமிட் செய்யலாம் என்று ராஷ்மிகா மேனேஜரை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர்களுக்கு மயக்கம் வராத குறை.
எல்லாம் ஒகே. சம்பளம் எவ்வளவு என்று கேட்ட தயாரிப்பாளர்களிடம், ‘மேடம் இப்போது ஒரு பாடலுக்கு ஆட வந்த வாய்ப்பை கூட ஏற்றுகொள்ளலாமா வேண்டாமா என்று யோசனையில் இருக்காங்க. ஒரு பாட்டுதான். சம்பளம் ஐந்து கோடி’’ என்று சொல்ல பதறியடித்தபடி திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
கமலின் அடுத்த இலக்கு இதுதான்!
தமிழில் மிகப்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனமாக ‘ராஜ்கமல் இண்டர்நேஷனல்’லை உருவாக்க வேண்டுமென கமல் ஹாசன் மிக திவீரமாக இருக்கிறாராம்.
ஒரு பக்கம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கமர்ஷியல் நடிகர்களின் படங்கள். மறுபக்கம் சிறிய பட்ஜெட்டில் கதை ஆழமிக்க வித்தியாசமான படங்கள். இப்படி படத்தயாரிப்பை வரிசைப்படுத்தவும் திட்டமிருக்கிறதாம்.
முதல் கட்டமாக கமல் நடிக்கும் படத்தை தொடங்குவது என ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட முயற்சிகள் ஆரம்பிக்க இருக்கின்றன.
இதற்கேற்ற வகையில் கமலின் தயாரிப்பு அலுவலகம் மிக நவீனமயமாக மாற்றப்பட்டிருக்கிறது. சினிமா தொடர்பான நவீன அம்சங்களையும் தொடர்ந்து அப்டேட் செய்யும் வேலைகளும் தொடர இருக்கின்றனவாம்.
கமல் முடிவெடுப்பவராக இருந்தாலும், அவருடன் இப்போது இருக்கும் விஜய் டிவியின் முன்னாள் நிர்வாகி களப்பணியிலும், பணம் திரட்டுவதிலும் முன்களப் பணியாளராக செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.